PUBLISHED ON : ஜூலை 06, 2025

சரியான அளவில் தினமும் உலர் 'நட்ஸ்' மற்றும் உலர் பழங்கள் சாப்பிடுவதால் கொழுப்பு குறைகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலர் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். இது தவிர, உடலுக்கு நன்மை தரக்கூடிய ஆன்டி ஆக்ஸ்சிடென்ட், நார்ச்சத்து உட்பட பல நல்ல விஷயங்களும் உள்ளன.
முந்திரி, பாதாம் போன்ற உலர் நட்சில் சர்க்கரை கிடையாது. மாறாக, புரதச்சத்து, ஆன்டி ஆக்ஸ்சிடென்ட், கால்சியம் உட்பட பல தாதுக்கள் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரையின் அளவில் பெரிய வேறுபாடு ஏற்படாது.
தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர் நட்ஸ், பழங்கள் சாப்பிடுவதால், கொழுப்பு சத்து வெகுவாக குறையும். அதற்காக, இவற்றை வைத்தே கொழுப்பை குறைத்துவிடலாம் என்று நினைக்கக்கூடாது. அளவாக சாப்பிடும் போது, இதன் பலன்கள் முழுமையாக உடலுக்கு சேரும்; உடல் எடையும் குறையும். உலர் நட்ஸ், பழங்களின் விலை சற்று அதிகம் என்பதால், அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப வாங்கி சாப்பிடலாம்.
இதற்கு பதிலாக, குறைந்த விலை யில் கிடைக்கக்கூடிய வேர்க்கடலையை கைப்பிடிஅளவு வேக வைத்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் நட்ஸ், பழங்கள் சாப்பிடும் பலன் கிடைக்கும். உடலுக்கு ஒத்துக் கொள்ளும் என்றால் சாப்பிடலாம். வறுத்த வேர்க்கடலையில் உப்பு குறைவாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
டாக்டர் ஜே.புவனேஷ்வரன், இயக்குநர்,
இதய நோய் மற்றும் இதய நோய் தடுப்பு துறை,
பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
கோவை
99527 15222
drbhucbe@yahoo.co.in