PUBLISHED ON : ஜன 19, 2024 12:00 AM
![]() |
நம் புனித பாரதத்தில் எண்பது சதவீதத்திற்கு மேல் இந்துக்கள் இருந்தாலும் ஒரே ஒரு ராமர் கோவிலுக்காக ஏன் இவ்வளவு போராடுகிறார்கள் அப்படி என்ன அந்த ராமர் கோவிலில் இருக்கிறது என்பதற்கான பதிலும்..
நாட்டில் லட்சக்கணக்கான ராமர் கோவில் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கும்போது இந்த ஒரு ராமர் கோவில்தான் வேண்டும் என்று ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள் என்று விவரம் தெரியாதவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலும்..இந்தப் புத்தகத்தில் உள்ளது.
உண்மையில் இது புத்தகமல்ல, ராம பக்தனின் உண்மை உணர்வு.
மீண்டும் இந்த இடத்தில் ராமர் கோவில் வரவேண்டும் என்பதற்காக 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்,.அந்த தியாகத்தைச் சொல்லும்,அவர்களின் தீரத்தைக்கூறும், வீரம் செறிந்த 500 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது இந்த ராமர் கோவில்.
கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோவிலை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்ததுவிட வேண்டும் என்ற கோடிக்கணக்கான இந்திய மக்களின் நனவாகப்போகும் கனவு இது.
![]() |
பரந்துபட்ட பாரதம் மன்னர்களாலும்,குறுநில அரசர்களாலும், ஜமீன்தார்களாலும் ஆளப்பட்டு வந்தாலும் இமயம் முதல் குமரி வரை மக்கள் தத்தம் விருப்பத்திற்கும் சக்திக்கும் ஏற்ப கடவுள்களை வணங்கி வந்தனர்.
ஒவ்வொரு கிராமத்திற்கும்.ஊருக்கும், மாநிலத்திற்கும் ஒரு கடவுள் உண்டு அது போல நம் நாட்டிற்கான ஒரே கடவுள் ராமர். அவர் பிறந்த வளர்ந்த இடம் என்பதால் அயோத்தி ராமர் கோவிலுக்கு கூடுதல் மதிப்பு மரியாதை.
அந்த மரியாதையுடன்தான் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அயோத்தியில் ராமரை கோவில் கட்டி வணங்கி வந்தனர்.ராமர் ஒரு குழந்தையாக இந்த மண்ணின் ஒவ்வொரு அடியிலும் ஒடி விளயைாடியதால் கருவறையில் உலோத்தாலான ஆறு அங்குல உயரமேயுள்ள குழந்தை ராமர் கோவிலை வைத்து வழிபட்டனர்.
இன்றைக்கு அயோத்தியில் நீங்கள் எங்கே போனாலும் எந்த வீட்டிற்கு போனாலும் அந்த வீட்டின் பூஜை அறையில் ராமர் விக்கரகமோ, படமோ தவறாமல் இடம் பெற்றிருக்கும். அது வழி வழியாக வந்தது என்றும், ராமர்தான் எங்கள் வீட்டின் மூத்த உறுப்பினர் என்றும் சொல்லிக் கொண்டாடுவர்.
இதன் காரணமாக வருடம் முழுவதும் ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், விழாக்களும் உண்டு.
1858 ஆம் ஆணடில் கிழக்கு இந்தியா முழுவதையும் கைப்பற்றிய பாபர், அயோத்தி வழியாக திரும்பும்போது இங்கு வற்றாது ஓடும் சரயு நதிக்கரையில் ஒய்வெடுத்தார்.
சரயு நதியின் அழகும் கம்பீரமும் அதில் தவழ்ந்து வந்த தென்றலும் பாபருக்கு மிகவும் பிடித்துப் போனது.
இதன் கரையில் ஒரு மசூதி கட்டவேண்டும் என்று திட்டமிட்டார் அதற்கான ஆணையையும் தனது தளபதி மீர்பாஹியிடம் உத்திரவிட்டார்.
பாபரின் உத்திரவை நிறைவேற்ற முனைந்த மீர்பாஹி, எங்கே மசூதி கட்டுவது? என்று இடம் தேடியபோது அவரது கண்ணில் பட்ட இடம்தான் ராமர் கோவில்.
இந்த ராமர் கோவிலை எளிதில் கைப்பற்றி விடலாம் என்று மீர்பாஹி போட்ட கணக்கு அவ்வளவு எளிதில் கைகூடவில்லை. மன்னர் ராஜா மெகதீர் சிங்,தேவேந்திர பாண்டே, ராணி ஜெயராஜ் கன்வர் என்பவர்களுடன் புத்துக்கும் மேற்பட்ட போரை ராமர் கோவிலுக்காக மேற்கொள்ள வேண்டிவந்தது.
மன்னர் தேவேந்திரா பாண்டே 17 நாட்கள் மீர்பாஹியின் பெரும்படையை எதிர்த்து நின்று களமாடினார்.
ராணி ஜெயராஜ் கன்வர் ஒருபடி மேலே போய் தன்னுடன் ஐயாயிரம் வீராங்கனைகளைக் கொண்ட படையுடன் போரிட்டார்,
![]() |
இப்படி அயோத்தியில் பிறந்த ஒவ்வொருவரும், வீரராகவோ வீராங்கனையாகவோ மாறுவதைக் கண்ட பாபரின் படை, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், எதிர்ப்பவர்களை பயமுறுத்த வேணடும் என்பதற்காக,சிறைபிடிக்க வாய்ப்பு இருந்தும் அப்படிச் செய்யாமல் ராணியை போர்க்களத்தில் தலையை வெட்டிக் கொன்றனர்.
மீர்பாஹியின் பீரங்கி மற்றும் துப்பாக்கி படையை பழங்கால வேல், வாள் போன்ற ஆயுதங்களுடன் எதிர்கொள்ள முடியாத நம் வீரர்கள் பல ஆயிரக்கணக்கில் தங்களை பலியாகினர்.
ஒரு சிறு கோவில்தானே! போனால் போகட்டும் என்று விட்டுக் கொடுத்திருந்தால்.. அவர்களது உயிர் போயிருக்காது. மாறாக பாபரின் ஆசியும் பொன்னும், பொருளும் கூட பரிசாக கிடைத்திருக்கும் ஆனால் தங்களது உயிரைவிட ராமர் கோவிலே உயர்ந்தது என்ற எணணம் கொண்டிருந்ததால் களத்தில் பலியாவோம் எனத் தெரிந்தே எதிர்த்து நின்று உயிரை விட்டனர்.
இவர்களின் ரத்தத்தின் மீது நடந்து சென்றுதான் மீர்பாஹி ராமர் கோவிலை கைப்பற்ற முடிந்தது, கோவில் தகர்க்கப்பட்டு மன்னரின் விருப்பப்படி மசூதியும் கட்டப்பட்டது, அதுவே பாபர் மசூதியானது.
இப்படி ராமர் கோவிலை கைப்பற்ற வருகிறார்கள், கோவிலை சிதைத்துவிடுவார்கள் என்பதை உணர்ந்த அன்றைக்கு கோவில் அர்ச்சகராக இருந்த பாபா ராம்தேவ் என்பவர் கர்ப்பகிரகத்தில் இருந்த குழந்தை ராமர் சிலையை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்.
இதை அறிந்த மீர்பாஹி சல்லடை போட்டு அர்ச்சகரையும் அவர் எடுத்துச் சென்ற ராமர் விக்ரத்தையும் தேடினார். ஆனால் கடைசி வரை இருவருமே அவரது கையில் கிடைக்கவில்லை.
நீண்ட காலம் கழித்து மலைக்குன்றில் இருந்த குழந்தை ராமர் சிலை மட்டும் மீட்கப்பட்டது, அதுதான் இன்று வரை ராமர் கோவிலில் ராம் லல்லாவாக வழிபடப்படுகிறது.
இப்படி போரும்,போராட்டமுமாக சென்ற ராமர் கோவில் வரலாற்றில் ஒரு திருப்புமுனை பிரிட்டிஷார் ஆட்சியில் ஏற்பட்டது.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய்க்கலகம் துவங்கி பல்வேறு போராட்டங்களில் இந்து -முஸ்லீம் மக்கள் ஒன்றுபட்டு பொது எதிரியான பிரிட்டிஷாரை எதிர்க்கத் துவங்கினர்.
ஆனால் அயோத்தியில் மட்டும் இந்து-முஸ்லீம் ஒன்றுபடுவதற்கு ஒரு உறுத்தலாக, நெருடலாக ராமர் கோவில் பிரச்னை இருந்தது.
என்ன செய்யலாம் என்று யோசித்து அன்றைக்கு அயோத்தியில் இருந்த இரு மதத்தலைவர்களான பாபா ராம்சரந்த்-, அமீர்அலி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அயோத்தியில் பதினைந்திற்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளன, இதில் ஐந்து மசூதிகளில் வழிபாடு நடப்பதில்லை, வழிபாடு நடக்காத மசூதிகளில் பாபர் மசூதியும் ஒன்று ஆகவே ராமர் கோவிலை இந்து சகோதரர்களுக்கே கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து அதையே ஒப்பந்தத்தில் எழுதி இருவரும் கையெழுத்திட்டனர்.
எல்லாம் சுபமாக முடிந்தது என்று நினைத்த வேளையில், பிரிட்டிஷார் விழித்துக் கொண்டனர். தாங்கள் இந்தியாவில் வாழ வேண்டும் இந்த மண்ணை ஆளவேண்டும் இங்குள்ள வளங்களை எல்லாம் சுரண்டி எடுத்துச் செல்லவேணடும் என்றால், அதற்கு இந்துக்களும்- முஸ்லீம்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கவேண்டும், அவர்கள் எண்ணம் முழுவதும் ஒருவரை ஓருவர் எப்படி அடித்துக் கொள்வது என்பதிலேயே இருக்கவேண்டும், மாறாக ஒன்றுபட்டுவிட்டால் பின்னர் நம் கதி அதோகதிதான் என்பதை உணர்ந்து உடனடியாக அயோத்தியில் நடந்த ஒப்பந்தத்தின் மீது விசாரணை நடத்தினர்.
நாங்கள் ஆட்சி செய்யும் மண்ணில் நீங்கள் எப்படி ஒரு முடிவு எடுக்கமுடியும், சூரியன் உதிக்கவேண்டும் எனறாலும் மறைய வேண்டும் என்றாலும் எங்களை கேட்டுத்தான் முடிவு செய்யவேண்டும் என்று கட்டபொம்மன் படத்தின் வசனங்களைப் போல ஆணவமாக பேசி பொதுமக்கள் மத்தியில் அந்த ஒப்பந்தத்தை சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட்டனர்.
அத்தோடு விடாமல் அரசை எதிர்த்து தேச விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருவரையும் அயோத்தி அருகே உள்ள 'குபாரலீலா' என்ற இடத்தில் உள்ள ஒரு புளிய மரத்தின் இரு கிளைகளில் ஒரே நேரத்தில் இருவரையும் பொதுமக்கள் மத்தியில் துாக்கிலிட்டுக் கொன்றனர்.
இவரால்தான் நம் தலைவர் இறந்தார் என்று ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு மீண்டும் இந்துக்களும் முஸ்லீம்களும் அடித்துக் கொள்ள வேண்டும் என்பதே, பிரிட்டிஷாரின் இந்த செயலுக்கான நோக்கம்.
ஆனால் சிறிது காலத்தில் இறந்த அந்த தலைவர்களை மகான்களாகவும் அவர்கள் துாக்கிலிடப்பட்ட புளிய மரத்தை புனிதமரமாகவும் மக்கள் வணங்கவும் போற்றவும் செய்தனர், இதன் காரணமாக அந்த புளிய மரத்தையே வேரோடு வெட்டி வீழ்த்தினர்.
இதனால் கொதித்துப்போன, குழந்தை ராமரை வைத்து வணங்கி வந்த, சம்பு பிரசாத் என்ற அர்ச்சகர், விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு, இறந்தவர்களுக்காக நியாயம் கேட்டும் அவர்களுக்கு நினைவிடம் வைக்க வேண்டும் என்று கேட்டு போராட்டம் நடத்தினார். பிரிட்டிஷார் நரபலி வேட்கையுடன் அவரையும் துாக்கில் போட்டனர்.
இப்படி போரும் போராட்டமுமாக ராமர் கோவில் விவகாரம் போய்க்கொண்டு இருந்தது. சர்ச்சைக்குரிய இடத்தில் எந்த வழிபாடும் கூடாது என்பதால் பாபர் மசூதி வளாகம் யாருடைய நடமாட்டமுமின்றி பாதுகாப்பு வளையத்தில் உறைந்து கிடந்தது.
இதில் திடீர் திருப்புமுனையை தமிழகம்தான் தந்தது.
வேலுாரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலை அனைவரும் அறிவர். திப்பு சுல்தான் படையெடுப்பின் போது ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து மூலவர் லிங்கத்தை காப்பாற்றும் பொருட்டு,லிங்கத்தை பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் அருகில் உள்ள சத்துவாச்சாரி விநாயகர் கோவிலில் வைத்துவிட்டனர்.
அதன் பின்னர் ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் மசூதி வந்தது. வெள்ளைக்கார்கள் காலத்தில் அவர்கள் வழிபாடு செயவதற்காக சர்ச் வந்தது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வந்தபோது தொல்லியல் துறை அலுவலகம் வந்தது, இப்படி ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஜலகண்டேஸ்வரரைத் தவிர எல்லோரும் வந்தார்கள், இருந்தார்கள்.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல நானுாறு ஆண்டுகாலமாக ஜலகண்டேஸ்வரர் கோவிலானது மூலவர் இல்லாத கோவிலாகவே இருந்து வந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மயிலை சுந்தரம் தலைமையிலான இந்து முன்னணியினர் எம்.ஜி.ஆர்., ஆட்சியின்போது 1981 ஆம் வருடம் சத்துவாச்சாரி கோவிலில் இருந்த ஜலகண்டேஸ்வரரை கொண்டு வந்து திரும்ப ஜலகண்டேஸ்வரர் கோவிலின் மூலஸ்தானத்தில் வைத்து வழிபாடும் செய்து விட்டனர்.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த அன்றைய மாவட்ட ஆட்சியர் கனகப்பா முதல்வராக இருந்த எம்ஜிஆருக்கு ஓரு அவசர அறிக்கை சமர்ப்பித்தார்.
அதில் அவர்கள் வழிபடும் கோவிலில், அவர்கள் வழிபட்ட சாமியை திரும்ப கொண்டு போய் வைத்துள்ளனர்,பிற மதத்தினரின் வழிபாட்டுத்தலத்தில் தலையிடவில்லை, ஆகவே சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை, இப்படியே விட்டுவிடலாம் என்று குறிப்பு தந்திருந்தார். அதில் உள்ள நியாயத்தை உணர்ந்த எம்ஜிஆரும் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டார்.
அடுத்த ஆண்டே ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிசேகம் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. இன்றைக்கு வேலுார் மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றாக ஜலகண்டேஸ்வரர் கோவில் திகழ்கிறது.
இதை எல்லாம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில இந்திய தலைவர் அசோக்சிங்கால் கேள்விப்பட்டார்.தமிழத்தில் குறைந்த அளவில் உள்ள இந்து முன்னனியினர் இவ்வளவு பெரிய விஷயத்தில் ஈடுபடும்போது, வட மாநிலங்களில் பெரிய அளவில் உள்ள நாம் ஏன் நாம் வழிபட்ட ராமர் கோவிலுக்குள் கொண்டு போய் நம் ராமரை வைக்ககூடாது என்று முடிவு செய்து, அதன்படி பெருந்திரளாக கொண்டு போய் வைத்து வழிபாடு செய்துவிட்டனர்.
விஷயம் லக்னோ உயர்நீதிமன்றத்திற்கு போனது. சட்டப் போராட்டம் நீண்டது முஸ்லீம்கள் தரப்பில் வைக்கப்பட்ட ஒரு வாதத்தில் பாபர் மசூதி இந்து கோவிலின் மீது கட்டப்படவில்லை என்றனர்.
அதை அறிவியல் பூர்வமாக பார்த்துவிடுவோமே என்று எண்ணிய நீதிமன்றம் அதற்கான ஆய்வை மேற்கொள்ளும்பாடி மத்திய அரசின் தொல்பொருள் துறைக்கு உத்திரவிட்டது.
தொல்பொருள் துறை தோண்டத்தோண்ட இந்துக்கோவில் இருந்ததற்கான வரலாறும் சான்றுகளும் கல்வெட்டுகளும் நிறையவே கிடைத்தது.
விசாரணையின் முடிவில் பாபர் மசூதி இருந்த இடம் மூன்றாக பிரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது (இந்த இடம் எஙகளுக்குதான் சொந்தம் என்று நிர்மல் அகோரி என்று ஒரு அமைப்பும் கேட்டு வந்தது அதுதான் மூன்றாவது தரப்பு) இந்த தீர்ப்பில் மூன்று தரப்பினருக்குமே திருப்தியில்லை.
வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு போனது மிகவும் சென்சிடிவான இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்த்துக் கொள்ள முடியுமா பாருங்கள் என்று மூன்று பெரியவர்களிடம் ஒப்படைத்தது நீதிமன்றம். அவர்கள் முயற்சி தோற்ற பிறகு உச்சநீதிமன்றமே வழக்கை தீவிரமாக விசாரித்தது.
தொல்லியல் அறிஞர் நாகசாமி போன்றவர்கள் 21 நாட்கள் சாட்சியம் வழங்கினர். முடிவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லாத்தரப்பும் ஏற்றுக்கொள்ளும்படியான தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதற்கு உதாரணம் காசியைச் சேர்ந்த தஸ்னின் அன்சாரி, நஜ்மா பர்வீன் தலைமையிலான முஸ்லீம் பெண்கள், அயோத்தியில் இருந்து ராம ஜோதியை ஏற்றிக்கொண்டு ராமர் மற்றும் ராமர் கோவில் பெருமைகளை சொல்லிக்கொண்டு வருகின்றனர்.
இப்போது தீர்ப்பின் அடிப்படையில் பூமி பூஜை போடப்பட்டு பக்தர்கள் வழங்கிய இரண்டாயிரம் கோடி ரூபாய் நன்கொடையினைக் கொண்டு குழந்தை ராமர் கோவில் பிரம்மாண்டமாக எழுந்துள்ளது.
ராமர் வனவாசம் போய் திரும்பி வந்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டபோது அயோத்தி எங்கும் உற்சாகம் கரை புரண்டு ஒடியது.நகரம் பல்வேறு அலங்காரங்களுடன் களைகட்டிக் காணப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர் என்று கம்பர் தனது ராமாயணத்தில் குறிப்பிட்டிருப்பார்.
அதில் எள்ளவும் குறையாமல் இன்னும் சொல்லப்போனால் பலமடங்கு கூடுதல் உவகை உற்சாகம் மகிழ்சியுடன் மீண்டும் ஒரு பட்டாபிேஷகம் காணப்போகும் சந்தோஷத்துடன், குழந்தை ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடக்கப்போகும் நாளை எதிர்பார்த்து மக்கள் தயராக உள்ளனர்- நாமும் தயாராவோம்.
-எல்.முருகராஜ்




