
விண்ணில் கம்பீரமாகப் பறக்கும் பறவைகளின் அரசனான கழுகுகளிலேயே மிக அரிய, கம்பீரமான ஒரு இனம் தான் கிழக்கு இம்பீரியல் கழுகு . உலக அளவில் அழியக்கூடிய ஆபத்தில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் முதன்மையாக இருக்கும் இக்கழுகுகள், பூமியின் சமநிலையைக் காக்கும் மிக முக்கியக் கண்ணியாகும்.
இவை உணவுச் சங்கிலியின் உச்சியில் இருக்கும் ' மாமிச உண்ணி' பறவைகள் ஆகும்.
இவற்றின் முதன்மையான மற்றும் மிகப்பிடித்த உணவு அணில்கள் மற்றும் முயல்கள் ஆகும்.
இவை தவிர எலிகள், காகங்கள், புறாக்கள் போன்ற பிற பறவைகள், தவளைகள், அரணைகள் மற்றும் பாம்புகளையும் வேட்டையாடி உண்ணும். சில நேரங்களில், பிற விலங்குகள் வேட்டையாடி மீதி வைத்த மாமிசங்களையும் இவை உணவாக்கிக் கொள்ளும்.
இவை தனியாகவோ அல்லது தங்களின் இணைப் பறவையுடன் சேர்ந்தோ ஜோடியாக வேட்டையாடும் குணம் கொண்டவை. ஒரு பறவை இரையைத் துரத்த, மற்றொரு பறவை பதுங்கி இருந்து அதைத் தாக்கும் நுணுக்கத்தைக் கொண்டுள்ளன.
இந்த கழுகுகள் ஒருமுறை தங்கள் இணையைத் தேர்ந்தெடுத்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அந்த ஒரே ஒரு இணையுடன் மட்டுமே வாழும் குணாதிசயம் கொண்டவை.
உலகிலேயே இந்த வகைக் கழுகுகள் சில ஆயிரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. குறிப்பாக செர்பியா நாட்டில் கடந்த 2016-ல் ஒரே ஒரு ஜோடி இம்பீரியல் கழுகு மட்டும்தான் இருந்தது. செர்பிய அரசு மற்றும் பறவை ஆர்வலர்களின் தீவிர முயற்சியால் தற்போது அந்த எண்ணிக்கை 10 ஜோடிகளாக உயர்ந்துள்ளது.
இது 'பறவைகள் வலசை போதல்' இயற்கை நிகழ்வு ஆகும்.உணவு மற்றும் மிதமான காலநிலைக்காக இவை செர்பியாவிலிருந்து கிளம்பி மாசிடோனியா, கிரீஸ், துருக்கி வழியாக ஆப்பிரிக்கா அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு நோக்கிப் பயணம் செய்யும். குளிர்காலம் முடிந்ததும் மீண்டும் தங்களின் தாயகமான செர்பியாவுக்கே திரும்பிவிடும். இது அவற்றின் மரபணுவிலேயே உள்ள ஒரு இயற்கை சுழற்சி.
பெலிக்ஸ் கழுகு சிரியா நாட்டு வான்வெளி வழியே பறந்து சென்றபோது, அங்கிருந்த கடத்தல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டு அதனை காயப்படுத்தி கீழே வீழ்த்திப் பிடித்துள்ளனர்.
பணக்கார அரபு நாடுகளில் வசிப்பவர்கள், தங்கள் அந்தஸ்தைக் காட்டுவதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் இதுபோன்ற அரிய வகை கழுகுகளைக் கறுப்புச் சந்தையில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குகின்றனர். அதற்காகவே இது பிடிக்கப்பட்டது.
செர்பியாவில் உள்ள பறவைகள் பாதுகாப்பு அமைப்பினர் பெலிக்ஸ் கழுகின் முதுகில் ஒரு சிறிய 'ஜிபிஎஸ் ட்ராக்கர்'ஐ மாட்டியிருந்தனர்.அது சிரியா நாட்டு கடத்தல்காரர்களிடம் கழுகு சிக்கியது சிக்னல் துண்டிக்கப்பட்டது.
கழுகை குணப்படுத்திய கடத்தல்காரர்கள் அதை விற்பதற்கு விளம்பரம் செய்தனர் இந்த விளம்பரத்தை லெபனான் நாட்டுப் பறவை பாதுகாப்பு அமைப்பின் தலைவரான 'மிஷெல் சவான்' என்பவர் பார்த்தார். அவர் சிரியாவில் தனக்குத் தெரிந்த உள்ளூர் தொடர்புகள் மூலம் கழுகை மீட்கும் முயற்சியில் இறங்கினார். இது தெரிந்ததும் கடத்தல்காரர்கள் அவசரம் அவசரமாக அதனை லெபனானில் விற்றுவிட்டனர்.
இறுதியாக, சவானின் உள்ளூர் குழுவினர் அங்கு சென்று அதிரடியாக கழுகை மீட்டனர். ஆனால், சிரியா-லெபனான் எல்லையில் கடுமையான சண்டை மற்றும் மோசமான வானிலை நிலவியதால் அதைக் கொண்டுவருவது கடினமாக இருந்தது. அப்போது, சில அகதிகள் உதவியுடன் கழுகை ஒரு உருளைக்கிழங்கு மூட்டைக்குள் மறைத்து வைத்து, ரகசியமாக பெய்ரூட்டில் உள்ள ஒரு பறவைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கழுகை விமானம் மூலம் செர்பியாவுக்கு அனுப்ப முயன்றபோது, பிப்ரவரி மாதம் ஈரானைச் சுற்றி ஏற்பட்ட போர்ச் சூழலால் சாதாரண விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மூன்று முயற்சிகள் தோல்வியடைந்தன.இறுதியாக, லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த செர்பிய நாட்டு ராணுவத்தினர், தங்களது ராணுவப் போக்குவரத்து விமானம் மூலம் கழுகை பத்திரமாகச் செர்பியாவுக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
தற்போது கழுகு செர்பியாவின் பாலிக் மிருகக்காட்சிசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. குணமாகி பறக்கத் தொடங்கியதும், புதிய ஜிபிஎஸ் கருவியுடன் மீண்டும் அது காட்டில் திறந்துவிடப்படும்.
மரணத்தின் வாயில் வரை சென்று, துப்பாக்கிக் குண்டுகளுக்கும் கடத்தல்காரர்களுக்கும் தப்பி, சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியால் மீட்கப்பட்ட பெலிக்ஸ், பல்லுயிர் பெருக்கத்தைக் காக்கப் போராடிய நல்லுள்ளங்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியின் அடையாளமாக காணப்படுகிறது.
-எல்.முருகராஜ்
