PUBLISHED ON : ஜூன் 06, 2026 06:23 PM

உலகில் எத்தனையோ சந்தைகள் விசித்திரமான பொருட்களுக்காகப் புகழ்பெற்றவை. ஆனால், ஒரு முழுச் சாலையே அறிவையும், இலக்கியத்தையும் சுவாசித்துக் கொண்டு, வெறும் புத்தகங்களுக்காக மட்டுமே இயங்கி வருகிறது என்றால் அது மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள 'கல்லூரிச் சாலை' மட்டும்தான். உலகின் மிகப்பாரம்பரியமிக்க மற்றும் மிகப்பெரிய புத்தகச் சந்தைகளில் ஒன்றான இந்த இடத்திற்குப் பின்னணியில் இருக்கும் சுவாரசியமான வாழ்வியலையும், அதன் தற்போதைய சவால்களையும் இந்தக் கட்டுரை விவரிக்கிறது.



தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கிண்ட்லி போன்ற மின்-புத்தகங்கள் , அமேசான்,பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்கள் மற்றும் இலவச பிடிஎப் களின் வருகை, இச்சந்தைக்கு நேரடியாக வரும் இளைஞர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது உண்மைதான். இருப்பினும், இந்த டிஜிட்டல் காலச் சவால்களை எதிர்கொள்ள பாரம்பரிய வியாபாரிகள் சில புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள்:
வாட்ஸ்அப் குழுக்கள், முகநூல் பக்கங்கள் மூலம் ஆர்டர்களைப் பெற்று, கொரியர் மூலம் புத்தகங்களை இந்தியா முழுவதும் அனுப்புகிறார்கள். போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை அதிக அளவில் தள்ளுபடி விலையில் விற்று தங்களின் வருவாயைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். மாணவர்கள் படித்த பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி, அதை மற்ற மாணவர்களுக்குக் குறைந்த லாபத்தில் விற்கும் முறையை நம்பியுள்ளனர்.
இந்த வியாபாரிகள் புத்தகங்களைச் சேகரிக்கப் பல்வேறு சுவாரசியமான வழிகளைக் கையாளுகின்றனர்: புதிய புத்தகங்களை கொல்கத்தா மற்றும் இந்தியாவின் பிற முன்னணி பதிப்பகங்களிடமிருந்து மொத்த விலைக்கு வாங்குகிறார்கள். வீடுகளில் விற்கப்படும் பழைய புத்தகங்கள், மூட்டையாக எடைக்குப்போடப்படும் நூலகப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தேடிப் பிடித்து வாங்குவர். பெரிய பேராசிரியர்கள், அறிஞர்கள் அல்லது தீவிர வாசகர்கள் இறந்துவிட்டாலோ அல்லது வீட்டை காலி செய்தாலோ, அவர்களின் குடும்பத்தினர் விற்க நினைக்கும் ஒட்டுமொத்தப் புத்தகச் சேகரிப்பையும் இவர்களே நேரில் சென்று நல்ல விலைக்குக் கொள்முதல் செய்கிறார்கள். அரிய பல புத்தகங்கள் இப்படித்தான் இவர்களுக்குக் கிடைக்கின்றன.
கடந்த 2020-ல் ஏற்பட்ட 'அம்பன்' புயலின் போதும், அதற்குப் பிறகு வந்த பெருந்தொற்று காலத்திலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிய புத்தகங்கள் மழையில் நனைந்து நாசமாயின. அது இச்சந்தைக்குப் பேரிழப்பாக அமைந்தது.இருப்பினும், இயற்கைச் சீற்றங்களோ, டிஜிட்டல் புரட்சியோ கொல்கத்தா மக்களின் புத்தகக் காதலையும், இந்த வியாபாரிகளின் விடாமுயற்சியையும் அசைத்துப் பார்க்க முடியவில்லை. பல தலைமுறை வாசகர்களின் அறிவுத் தேடலைப் பூர்த்தி செய்யும் ஒரு வரலாற்றுத் தளமாக, இந்த 'போய் பாரா' இன்றும் கம்பீரமாக உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
-எல்.முருகராஜ்





