PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM

சென்னை கலைவாணர் அரங்கில் உடல் ஊனமுற்றவர்களுக்கான உபகரணங்களின் கண்காட்சி நடந்தது.
உபகரணங்களை உருவாக்கியவர்கள் மத்தியில் ரிஷி கிருஷ்ணா என்பவர் பலரது கவனத்தை ஈர்த்தார்.
காரணம் அவரே ஒரு உடல் ஊனமுற்றவர் என்பதுதான்.
எல்லோரையும் போல முழுமையான உடல் தகுதியுடன் ஊரை வலம் வந்தவருக்கு திடீரென ஒரு விபத்து, வலது கை துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இருந்து விடுபடவேண்டும் தனது தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்,துண்டிக்கப்பட்ட வலது கைக்கு மாற்றாக ஏதாவது செய்யமுடியுமா என பல இடங்களில் விசாரித்துப் பார்த்தார் அவர் எதிர்பார்த்தபடியான உபகரணங்கள் கிடைக்கவில்லை.
நமக்கான தேடலை ஏன் நாமே உருவாக்ககூடாது? என்று முடிவு செய்து உபகரணங்களை செய்ய ஆரம்பித்தார் நிறைய பயிற்சி முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடியே சில உபகரணங்களை உருவாக்கினார்.
துண்டிக்கப்பட்ட கையின் மீது இவர் கண்டுபிடித்த செயற்கை கை போன்ற உபகரணத்தை பொருத்திக் கொண்டால் இரு சக்கர வாகனம் ஒட்டலாம்,உணவு எடுத்துக் கொள்ளலாம் காபி அருந்தலாம்,கை இருந்தால் செய்யும் வேலைகளை கொஞ்சம் தாமதாக செய்யவேண்டும் ஆனால் யாருடைய தயவும் இன்றி தாமே செய்யலாம் இதுதான் ரிஷி கிருஷ்ணா கண்டுபிடித்த செயற்கை கை போன்ற உபகரணம்.இதனை தானே தனது கையில் பொருத்திக் கொண்டு ஸ்கூட்டர் ஒட்டியபடி நகரில் வலம் வந்தார்.
இவரது இந்த முயற்சிக்கு உடல் ஊனமுற்றவர்கள் மத்தியில், குறிப்பாக கை இழந்தவர்களிடம் பலத்த வரவேற்பு இருந்தது எங்களுக்கும் இது போல செய்து தாருங்கள் என்று கேட்கவே இதையே தனது தொழிலாக மாற்றிக்கொண்டார்.
தற்போது சிம்பொனிக் என்ற நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் ஊனமுற்றவர்களுக்கு உதவக்கூடிய வகையிலான உபகரணங்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.சென்னை வடபெரும்பாக்கத்தில் உள்ள ரெங்கா கார்டன்ஸ் என்ற இடத்தில் இவரது நிறுவனம் உள்ளது, நிறுவனத்தின் போன் எண் 74188 81800.
தேவை உள்ளவர்கள் இவரைத் தேடலாம்.
-எல்.முருகராஜ்.