PUBLISHED ON : ஜூலை 07, 2025

பிரிட்டிஷார் இந்தியாவின் மீது தங்கள் இரும்புப் பிடியை இறுக்கிக் கொண்டிருந்த காலம் அது. சுதந்திரக் கனல் பல இளைஞர்களின் இதயங்களில் கனன்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் 1907ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று பஞ்சாப் மாநிலத்தில் நான் பிறந்தேன்,
சிறுவனான நான், ஜாலியன் வாலாபாக் படுகொலையால் (1919) ஆழமாகப் பாதிக்கப்பட்டேன். மகாத்மா காந்தியின் அகிம்சை வழி மட்டுமே சுதந்திரத்திற்குப் போதுமானதாக இல்லை என்று உணர்ந்தேன். சமூக நீதி, பொருளாதார சமத்துவத்தை உள்ளடக்கிய வழியைத் தேடினேன்.
சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்டவர்களுடன் இணைந்து, தி இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிப்பபிளிக் அசோசியேஷன் (The Hindustan Socialist Republican Association) என்ற அமைப்பை உருவாக்கினேன்.
சைமன் கமிஷனுக்கு எதிராக (1928) போராடிய லாலா லஜபதி ராயை, பிரிட்டிஷ் போலீசார் அடித்த காரணத்தால், படுகாயமடைந்து சில நாட்களிலேயே உயிரிழந்தார். இந்த நிகழ்வு என்னுள் பெரும் கோபத்தீயை மூட்டியது. லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு நீதி கேட்டு, எனது நண்பர்களான சுக்தேவ், ராஜகுருவுடன் இணைந்து, லஜபதிராய் மீது தடியடிக்கு உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி ஜேம்ஸ் ஸ்காட்டை (James A. Scott) பழிவாங்கத் திட்டமிட்டேன். ஆனால், தவறுதலாகப் போலீஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸ் என்பவர் கொல்லப்பட்டு விட்டார்.
பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறை சட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தேன். ஒரு வெடி குண்டு வழக்கில் நானும் எனது நண்பர்களும் கைது செய்யப்பட்டோம். நீதிமன்றத்திலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான எனது கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்தேன். என்னுடைய வாதங்கள், இளைஞர்களிடையே தேசப்பற்றையும் போராட்ட உணர்வையும் தூண்டின.
இறுதியில் சுகதேவ், ராஜகுரு ஆகிய இருவருடன் எனக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி, லாகூர் (தற்போது பாகிஸ்தான்) மத்திய சிறையில் நாங்கள் தூக்கிலிடப்பட்டோம். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நாங்கள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தோம். எங்களை எரித்த தீ, லட்சக்கணக்கான இந்தியர்களின் மனத்தில் சுதந்திர வேட்கையைத் தூண்டி, இறுதியில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு வழிகோலியது.
என் நண்பர்களின் பெயர்களை வைத்து, நான் யார் என்று கண்டு பிடித்து இருப்பீர்கள்தானே?
தெரியாதவர்களுக்கு மட்டும், நான் பகத் சிங்.