PUBLISHED ON : ஜூன் 24, 2024

தென்னை மரத்திற்குக் கிளைகள் கிடையாது.
உண்மை. மணற்பாங்கான நிலத்தில் வளரும் தென்னை, உப்புநீர்ச் சூழலில் கூட வளரும். நல்ல மழையும் சூரிய ஒளியும் கிடைக்கும் இடங்களில் செழித்து வளரும். இது 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. இதற்குக் கிளைகள் கிடையாது.
இதன் உச்சியில் இருக்கும் தென்னை ஓலை 4 -- 6 மீ. நீளமுடையது. தென்னை உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகிய மூன்று நாடுகளே எப்போதும் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் இருந்து வருகின்றன.
இந்தியாவில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்னை அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
கீரிப்பிள்ளை, பாலூட்டி வகையைச் சேர்ந்த ஓர்அனைத்துண்ணி.
தவறு. கீரிகள் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா முதலிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஓர் ஊனுண்ணி. பூச்சிகள், பல்லிகள், பாம்புகள், பறவைகள், கொறியுண்ணிகள் உள்ளிட்டவை இவற்றின் முதன்மையான உணவு. இவை முட்டைகளையும் இறந்த விலங்குகளின் இறைச்சியையும் கூட உண்கின்றன.
இந்தியச் சாம்பல் நிறக் கீரியும் வேறு சில கீரிகளும் நச்சுத்தன்மையுள்ள நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்புகளுடன் சண்டையிட்டுக் கொல்லும் திறன் பெற்றவை. கீரிகளின் தோலிலுள்ள அசிட்டைல்கோலைன் என்னும் வேதிப்பொருள் பாம்பின் நஞ்சினை எதிர்க்கும் திறனைக் கொடுக்கிறது.