/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
மம்தாவின் மேற்குவங்க கோட்டையை மோடி - அமித் ஷாவால் தகர்க்க முடியாதது ஏன்?
/
மம்தாவின் மேற்குவங்க கோட்டையை மோடி - அமித் ஷாவால் தகர்க்க முடியாதது ஏன்?
மம்தாவின் மேற்குவங்க கோட்டையை மோடி - அமித் ஷாவால் தகர்க்க முடியாதது ஏன்?
மம்தாவின் மேற்குவங்க கோட்டையை மோடி - அமித் ஷாவால் தகர்க்க முடியாதது ஏன்?
PUBLISHED ON : ஜூன் 04, 2025 12:00 AM

காங்கிரசில் இருந்து விலகி, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை, 1998ல் துவங்கியவர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் கொடி கட்டி பறந்த நிலையில், மாநிலம் முழுதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி, அக்கட்சிகளுக்கு மாற்றாக திரிணமுல் காங்கிரசை உருவாக்கினார்.
மேற்கு வங்கத்தில், 2011 சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்தார். 2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்.
அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் வென்று, தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் அவர் பணியாற்றி வருகிறார். மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, திரிணமுல் காங்கிரசுக்கு கடும் சவாலாக பா.ஜ., உள்ளது. எனினும் வெற்றி என்ற இலக்கை அடைய, அக்கட்சி செய்ய வேண்டியது நிறைய உள்ளது. திரிணமுல் காங்கிரசில் இருந்த சுவேந்து அதிகாரி, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.,வில் சேர்ந்து, மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரசாரம் செய்தார். எனினும் அவரால் பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் பயனில்லை.
தேர்தல் பிரசாரங்களில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் நட்டா என, பா.ஜ.,வின் நட்சத்திர பட்டாளமே களமிறங்கினாலும், அவர்களுக்கு எல்லாம் ஒற்றை சவாலாக இருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, பா.ஜ.,வின் அரசியல் அல்லது தேர்தல் பிரசாரம் எப்போதும், ஹிந்துத்துவாவை நோக்கியே உள்ளது. மாநிலத்தின் கலாசாரத்துடன் அக்கட்சி ஒத்துப்போகவில்லை.
மேலும், உள்ளூர் பொருளாதாரம், வேலையின்மை, அடிப்படை பிரச்னைகளை பற்றி பா.ஜ., தலைவர்கள் பேசுவதில்லை. மேற்கு வங்கத்துக்கு வரும் போதெல்லாம், கலவரம், ஊடுருவல், ஹிந்துக்கள் பாதிப்பு உள்ளிட்டவை குறித்தே அவர்கள் பேசுகின்றனர். கடந்த 2021 - 24க்கு இடைப்பட்ட காலத்தில், பா.ஜ., ஓட்டு சதவீதம் அதிகரித்தாலும், வெற்றிக்கு உதவவில்லை. குறிப்பாக, திரிணமுல் காங்கிரசின் கட்டமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. கிராமப்புறங்கள் அக்கட்சியின் கோட்டையாக உள்ளன. மம்தா பானர்ஜியை முன்னிலைப்படுத்தியே, திரிணமுல் காங்கிரசும் இயங்கி வருகிறது. ஆனால், மேற்கு வங்க பா.ஜ.,வில் கட்சியின் கட்டமைப்பு இல்லை.
கிராமப்புறங்களில் திரிணமுல் காங்கிரசுக்கு மாற்றாக, பா.ஜ., வளரவில்லை என்பதே நிதர்சனம். கிராமப்புறங்களில் கட்சியை மீட்டெடுத்தால் மட்டுமே, திரிணமுல் காங்கிரசை தேர்தலில் பா.ஜ., வீழ்த்த முடியும். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே உள்ளது. அதற்குள் தன் தவறுகளை பா.ஜ., திருத்திக்கொண்டு செயல்பட வேண்டும். இல்லையெனில், மோடி, அமித் ஷா என யாராக இருந்தாலும், அடுத்த சட்டசபை தேர்தலிலும் மம்தா பானர்ஜியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
- பிரொபிர் பிரமானிக்
சிறப்பு செய்தியாளர், கொல்கட்டா