PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்கு உரிய நிலம் தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், 'பாபர் மசூதி இருந்த இடம் ஹிந்துக் களுக்கே சொந்தமானது' என, 2019 நவம்பரில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அங்கு, பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது.
நம் நாட்டின் கலாசாரம் மற்றும் கட்டட கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீராமனின் குழந்தை வடிவிலான சிலையின் ப்ராண பிரதிஷ்டையும் இன்று வெகு சிறப்பாக நடக்கிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட, நாடு முழுதும் இருந்து 7,000த்துக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் வாயிலாக, ஹிந்துக்களுக்கான மற்றொரு புண்ணிய பூமியாக, அயோத்தி உருவாகி உள்ளது. அதே நேரத்தில், ராமர் கோவில் கட்டப்பட்டதன் வாயிலாக, அயோத்தி நகரமும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ராமர் கோவிலானது, 7 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, 63 ஏக்கர் நிலப்பகுதி, பசுமைப் பகுதியாக மாற்றப்படுகிறது. கோவிலின் கருவறையில், 51 அங்குல பாலராமர் சிலையும், மற்ற பகுதிகளில் வேறு பல சிலைகளும் நிறுவப்படுகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய பொருட் செலவில் கட்டப்பட்ட ஹிந்து கோவில்களில் ராமர் கோவிலும் ஒன்று. இந்தக் கோவில் கட்டுமானப் பணிக்காக, 1,800 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முன், குஜராத் மாநிலத்தில் விஷ்ணு உமியா தாம் என்ற கோவில், 1,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற பிரச்னையை முதலில் எழுப்பியவர், முன்னாள் துணை பிரதமரான அத்வானி. அவர் இந்தப் பிரச்னையை அரசியலாக்காமல் இருந்திருந்தால், இன்று ராமர் கோவிலே உருவாகி இருக்காது. ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்ததால், பா.ஜ., மிகப்பெரிய அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கிறது.
பகவான் ராமர், கண்ணியம், அன்பு மற்றும் தர்மத்தின் அடையாளமாக விவரிக்கப்படுகிறார். அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களுக்கும், மிகுந்த மகிழ்ச்சியான தருணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த சிறப்பு மிக்க நாளில், நம் அனைவராலும், அங்கு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது. ஆனாலும், நாடு முழுதும் உள்ள மக்கள் இந்த நிகழ்வை தீபாவளி போல கொண்டாட வேண்டும். வீடுகளில் விளக்கேற்றி, முழு தேசத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வாக, கும்பாபிஷேக நிகழ்வை மாற்ற வேண்டும்.
அரசியல் நிர்பந்தங்களால் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், உண்மையில் அயோத்தி நகரத்தில், ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே எந்த விதமான பிளவுகளும், மோதல்களும் இல்லை.
ராமர் கோவில் வாயிலாக, அயோத்தி மாநகரமும், தங்களின் வாழ்வும் செழுமை அடையும், பல நன்மைகள் உண்டாகும் என, நகரில் வசிக்கும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் நம்புவதாக தெரிகிறது. அதனால், கோவில் கட்டுமானம் அவர்களுக்கு மகிழ்ச்சியையே தந்துள்ளது.
அதே நேரத்தில், அயோத்தில் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், விரைவில் அதற்கான கட்டுமான பணிகள் துவங்கும் என்றும், கட்டுமான பணிகளை இந்திய - இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை மேற்பார்வையிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், உலக அதிசயங்களில் ஒன்றாக அயோத்தி மசூதி அமையும் என்றும் கூறப்படுகிறது. புதிய மசூதியும் தயாரானதும், அயோத்தி மாநகரம் இரண்டு பிரமாண்ட மதச்சின்னங்களை கொண்டதாக மாறும், பெருமை பெறும். அத்துடன், இரு சமூகங்களையும் சேர்ந்த லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் அயோத்திக்கு வருகை தருவர். அதன் வாயிலாக, ஹிந்து - முஸ்லிம் நல்லுறவின் அடையாளமாக தேசத்திற்கே முன்னுதாரணமாக அயோத்தி மாநகரம் மாறும் சாத்தியம் உள்ளது.

