தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/ கள்ளச்சாராய பலிகளை தடுக்க அரசு நடவடிக்கை அவசியம்!

 கள்ளச்சாராய பலிகளை தடுக்க அரசு நடவடிக்கை அவசியம்!

 கள்ளச்சாராய பலிகளை தடுக்க அரசு நடவடிக்கை அவசியம்!


PUBLISHED ON : செப் 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில், 2024 ஜூன் 18-ம் தேதி, மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்திய, 229 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 70 பேர் உயிரிழந்தனர். 160 பேர் சிகிச்சை பெற்றதில், சிலர் கண் பார்வை இழந்தனர்.

சாராயம் விற்பனை செய்தது, கடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில், 21 பேர் கைது செய்யப்பட்டு, ஒருவரை தவிர மற்றவர்கள் ஜாமினில் வெளிவந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணமாக, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் தாக்கல் செய்த அறிக்கை, சமீபத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம், 484 பக்கங்கள் உடைய அந்த அறிக்கையில், 'சாராய வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும், சில உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையேயான மறைமுக கூட்டணியே விஷச்சாராய விற்பனைக்கு காரணம். அத்தகைய கூட்டணி உடைக்கப்பட வேண்டும். மேலும், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் கள்ளத்தனமாக கடத்தப்படுவதால் தான் விஷச்சாராயம் தயாரிக்கப்படுகிறது.

'எனவே, மெத்தனால் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விற்பனையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். உரிமம் இல்லாத நபர்களுக்கு மெத்தனால் கிடைப்பதை தடுக்க, தமிழக மதுவிலக்கு சட்டத்தில் கடுமையான தண்டனை பிரிவுகளை சேர்க்க வேண்டும்' என்பது உட்பட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், ஒரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டால், அந்த பகுதி காவல் துறை, வருவாய் துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளை அதற்கு பொறுப்பாக்கி, அவர்களுக்கு எதிராக துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு என பெயர் பெற்ற சில பகுதிகள் மாநிலத்தில் உள்ளன. அந்த பகுதிகளில் கூடுதல் மதுவிலக்கு பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.

உள்ளூர் அளவில் இளைஞர்கள், தன்னார்வலர்கள் குழுக்களை உருவாக்கி, ஒரு பகுதியில் விஷச்சாராய விற்பனை நடந்தால், அவர்கள் போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் ரகசியமாக தகவல் தெரிவிக்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும். விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள்.

'டாஸ்மாக்' கடைகளில் மதுபானங்களின் விலை அதிகமாக இருப்பதாலேயே, குறைந்த விலையில் விற்கும் விஷச்சாராயத்தை நாடிச் செல்கின்றனர். அதனால், மதுபானங்களின் விலை கொள்கையில், மாற்றம் கொண்டு வருவது பற்றியும், மாநில அரசு சிந்திக்கலாம்.

விஷச்சாராயம் அருந்துவதால், உயிர் பலி நிகழ்வது மட்டுமின்றி, உறுப்புகள் செயல் இழப்பு, கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது குறித்தும் மக்களிடம் அரசு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, விஷச்சாராய தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

நீதிபதி கோகுல்தாஸ் கமிஷனின் அறிக்கையில், ஊழல் அதிகாரிகளின் அலட்சிய செயல்பாடுகளை பட்டியலிட்டுள்ள அதே நேரத்தில், விஷச்சாராய துயரத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், மாவட்டத்தில் புதிதாக தொழிற்சாலைகளை நிறுவுவதே இதற்கு நல்ல தீர்வாக அமையும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கடந்த காலங்களில் துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த ஆணையங்களின் அறிக்கை மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்ததாக தகவல் இல்லை. சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் அறிக்கைகள் பற்றி பரபரப்பாக பேசப்படுவதுடன் பிரச்னை முடிந்து விடுவதுண்டு.

அதேபோல, கோகுல்தாஸ் அறிக்கையையும் கிடப்பில் போட்டு விடாமல், அதன் பரிந்துரைகளை அமல்படுத்த தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us