PUBLISHED ON : பிப் 05, 2024 12:00 AM
கடந்த, 2000ம் ஆண்டில் பீஹார் மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டு, அதிலிருந்து உருவானது தான் ஜார்க்கண்ட். இந்த மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன், சமீபத்தில் நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதாவது,முதல்வர் பதவியிலிருந்து விலகிய சிலநிமிடங்களில் கைதானார்.
ஜார்க்கண்ட் மாநிலம் உருவான பின், சமீபத்தில் முதல்வரான சம்பாய் சோரன் தவிர்த்து, இதுவரை ஆறு பேர் முதல்வராக பதவி வகித்துள்ளனர். அவர்களில் சிபுசோரன், மதுகோடா என, முதல்வராக பதவி வகித்த இரண்டு பேர் ஏற்கனவே ஊழல் வழக்குகளில் கைதான நிலையில், தற்போதுமூன்றாவது நபராக ஹேமந்த் சோரன் கைதாகி உள்ளார்.
ஜார்க்கண்டின் தாய் மாநிலமான பீஹாரிலும்,சமீபத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஆனால், முதல்வர் மாறவில்லை. ஏற்கனவே முதல்வராக பதவி வகித்த நிதீஷ்குமார் தான், தன் கூட்டணி கட்சியை மாற்றி, பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் முதல்வராகியுள்ளார். ஆனால், ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த ஆளும் கூட்டணியில் மாற்றம் ஏற்படவில்லை. அதற்கு மாறாக முதல்வர் மட்டுமே மாறியுள்ளார். அதாவது, ஹேமந்த் சோரனுக்கு பதிலாக, சம்பாய் சோரன் பதவியேற்றுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கரும், பீஹாரிலிருந்து ஜார்க்கண்டும் ஒரே நேரத்தில் பிரிக்கப்பட்டு, தனி மாநிலங்களாக, 2000ம் ஆண்டில் உருவான போதும், கடந்த 24 ஆண்டுகளில் சத்தீஸ்கர் போல, ஜார்க்கண்ட் மாநிலம் வளர்ச்சி அடையவில்லை. சத்தீஸ்கர் மாநிலத்தின் வருமானமானது, ஜார்க்கண்ட் மாநிலத்தை விட, 40 சதவீதம் அதிகமாக உள்ளது.
அதே நேரத்தில், இந்த இரு மாநிலங்களும் நக்சல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள். ஜார்க்கண்டில் நக்சல் வன்முறைகள் தற்போது பெருமளவு குறைந்துள்ளன. ஆனால், சத்தீஸ்கரில் இன்னும் நீடித்து வருகிறது. ஆனாலும்,அம்மாநிலம் முன்னேற்ற பாதையில் செல்கிறது.
சத்தீஸ்கரை ஒப்பிடுகையில், ஜார்க்கண்ட் பெருமளவு பின்தங்கி இருப்பதற்கு, அங்கு நிலவும் பெருமளவிலான ஊழலே காரணம். தாதுக்கள், இயற்கை வளங்கள் மற்றும் சுரங்கங்கள் என, பலவற்றிலும் ஊழல் புரையோடியுள்ளது. அதுமட்டுமின்றி, இம்மாநிலத்தில் நிலவி வரும்அரசியல் நிலையற்ற தன்மையும், மாநிலத்தின் பின்தங்கிய நிலைமைக்கு மற்றொரு காரணம்.
கடந்த, 24 ஆண்டுகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆறு பேர் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். அடுத்த, 10 மாதங்களில் இங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது சம்பாய் சோரன் முதல்வராகி உள்ளார்.
மேலும், ஆளுங்கட்சியினர் மற்றும் கட்சித் தொண்டர்கள் என்ற பெயரில், கிரிமினல்களின் ஆதிக்கமும், பீஹாரை போல, இந்த மாநிலத்திலும் அதிகம். இதுவும், மாநிலம் பின்தங்கியிருப்பதற்கு முக்கிய காரணம்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்த, 'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றிருந்த பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், 'கூட்டணியில் எதுவும் சரியாக இல்லை' என்று கூறி சமீபத்தில், பா.ஜ., அணிக்கு தாவினார். அது, இண்டியாகூட்டணிக்கு பெரும் பின்னடைவதாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஹேமந்த் சோரனின் கைதும், இண்டியா கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கூட்டணிக்கான மற்றொரு பின்னடைவதாக பார்க்கப்படுகிறது.
மேலும், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே மீண்டும் முதல்வராகலாம் என, எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் முதல்வரானது பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஜார்க்கண்டில் நிலவும் ஊழலை குறைக்கசம்பாய் சோரன் தலைமையிலான ஆளுங்கட்சியினர் முற்பட்டால் மட்டுமே, அம்மாநிலம்முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பதைமறுப்பதற்கு இல்லை.

