தினமலர் தலையங்கம்: ரிசர்வ் வங்கி எடுத்த முடிவால் பொருளாதாரம் உத்வேகம் பெறும்
தினமலர் தலையங்கம்: ரிசர்வ் வங்கி எடுத்த முடிவால் பொருளாதாரம் உத்வேகம் பெறும்
PUBLISHED ON : ஜூன் 16, 2025 12:00 AM

ஓராண்டுக்கும் மேலாக, ரெப்போ வட்டி விகிதத்தை, 6.50 என்ற அளவிலேயே ரிசர்வ் வங்கி வைத்திருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில், 6.25 மற்றும் ஏப்ரலில், 6.0 ஆகவும், இம்மாதத்தில், 5.5 சதவீதமாகவும் குறைத்துஉள்ளது. அதாவது, ரெப்போ வட்டி வீதம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவாக, ஒரு சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதால், வங்கிகளும் வீட்டுக்கடன் மற்றும் இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.
ரெப்போ வட்டி விகித குறைப்பு, 0.25 என்ற அளவிலேயே இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, 0.50 சதவீத அளவுக்கு குறைத்துள்ளது பலருக்கும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
'விலை நிலைத்தன்மையானது வளர்ச்சியை உறுதி செய்வதற்கு அவசியமானது என்றாலும், அது போதுமானது அல்ல' என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். அதனால் தான், ரெப்போ வட்டி விகிதமும், ரொக்க கையிருப்பு விகிதமும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இதிலிருந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ரிசர்வ் வங்கி அதிக கவனம் செலுத்துவது உறுதியாகிறது.
மேலும், பணவீக்கத்தில் தொடர்ந்து நிலவும் மந்தமான போக்கும், வட்டி விகிதத்தை குறைப்பதற்கான நம்பிக்கையை ரிசர்வ் வங்கிக்கு அளித்துள்ளது என்று நம்பலாம். அத்துடன், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. அந்த வளர்ச்சி நீடித்திருக்க வேண்டும் எனில், கொள்கையில் மாற்றம் தேவை என்பதை உணர்ந்தே, ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு, இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற பொருட்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லரை பணவீக்கம், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 3.16 சதவீதமாக குறைந்தது. அது தொடர்ந்து கட்டுக்குள் இருக்கலாம். இல்லையெனில், 2025 - 26ம் நிதியாண்டில் சராசரியாக, 3.7 சதவீதமாக அதிரிக்கலாம் என, ரிசர்வ் வங்கி நம்புகிறது.
இது, முந்தைய மதிப்பீட்டு அளவான, 4 சதவீதத்தை விட குறைவாகும். அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது, 6.5 சதவீதமாக இருக்கலாம் என, ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு பலமான உந்துதல் தேவை. அதற்கு நிதிக் கொள்கையை ஒரு கருவியாக பயன்படுத்த, ரிசர்வ் வங்கி முற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
தற்போதைய சூழ்நிலையில் மூலதன செலவுகளை, அரசு கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும், ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால், கம்பெனிகளுக்கும், தனி நபர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். அத்துடன், ரொக்க கையிருப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டதால், குறைந்த அளவு தொகையை இருப்பு வைத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை, வங்கிகள் கடனாக வழங்க வாய்ப்பு உருவாகும்.
ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளதால், வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளன. இது, நீண்ட கால நோக்கில் வங்கிகளுக்கு லாபமானதாக அமையும். குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில்களை சேர்ந்தவர்கள் அதிக கடன்களை வாங்குவர். இது, நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் உதவும்.
மேலும், வட்டி குறைப்பால், பெரும்பாலானவர்கள் வங்கியில் கடன் வாங்கி வீடுகள் வாங்க முன் வருவர்; இதன் வாயிலாக வீடுகளின் விற்பனை அதிகரிக்கும். நம் நாட்டில் ஏற்கனவே, 4.5 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு விற்பனையாகாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிலவரங்களில் மாற்றம் ஏற்படும். அத்துடன், குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதால், வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து, விற்பனையும் கூடும். மொத்தத்தில் ரிசர்வ் வங்கியின் முடிவால் பொருளாதாரம் உத்வேகம் பெறும்.