ADDED : ஜூன் 07, 2025 10:49 PM

தெளிவான திட்டம், தீர்க்கமான இலக்கு, கொஞ்சம் மாற்றி யோசிக்கும் திறன் இருந்தால் திறமைக்கு உடல் குறைபாடு ஒரு தடையல்ல என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் 25 வயதான 'பேப்பர்கிராப்ட்' பயிற்சியாளர் ராதிகா
ராதிகாவிடம் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம்.
'சொந்த ஊர் கோயம்புத்துார். அப்பா ஆறுமுகம். அம்மா ஜெயா. 6 வயதில் விளையாடியபோது கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்தேன்.அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவத்துக்கு உடல் ஒத்துழைக்கவில்லை.
கால் எலும்புகள் மேலும் வலுவிழந்து நடக்கமுடியாமல் போனது. முதுகு தண்டுவடத்திலும் பாதிப்பை உணர்ந்ததால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். 6 அறுவை சிகிச்சைகள் நடந்தன. எதிலும் முழுபலன் இல்லை.
பள்ளி வயது முழுவதும் அறுவைசிகிச்சை, ஓய்வு என கழிந்ததால் 1 முதல் பிளஸ் 2 வரை சிறப்பு அனுமதியில் வீட்டிலிருந்தே படித்து தேர்ச்சி பெற்றேன். இந்த காலகட்டத்தில் ஓய்வு, மனமாற்றத்திற்காக பழைய செய்தித்தாள்களை துண்டாக்கி வீட்டு அலங்கார பொருட்கள் (பேப்பர் கிராப்ட்) செய்தேன்.
வீட்டுக்குள் முடங்கிய பிள்ளையாக பரிதாபத்தோடு பார்த்தவர்கள் மத்தியில், என்னை நானே சந்தோஷமாக வைத்திருக்க உதவியது 'பேப்பர் கிராப்ட்' தான். நான் செய்த 'கிராப்ட்' அலங்காரங்களை பார்த்தவர்கள், அவர்களுடைய வீட்டுக்கும் புது டிசைன்களில் 'பேப்பர் கிராப்ட்' செய்து தர கேட்டார்கள். அதுதான் எனக்கான திருப்புமுனை.
பிறகு யுடியூப் வீடியோக்கள் மூலம் புது டிசைன்களில் 'ஆப்பிரிக்கன் ஸ்டைல் பொம்மை', 'வால் ேஹங்கிங்'-ஐ பேப்பர் கிராப்ட் செய்தேன். இவற்றை எனக்கு தெரிந்தவர் மூலம் கோயம்புத்துார் சுற்றுச்சூழல் மாசில்லா பொருள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்க கொடுத்தனுப்பினேன். அனுப்பிய அனைத்தும் விற்றுத்தீர்ந்தன. இதிலிருந்து பேப்பர் கிராப்ட்டை காசு சம்பாதிக்கும் விஷயமாக மாற்ற முடியும் என தெரிந்துகொண்டேன்.
மூங்கில் குச்சி, பேப்பர், பெயிண்ட் பயன்படுத்தி பல வண்ண இண்டியன் ஸ்டைல் கொலு பொம்மைகள், ராமாயண தீம் பொம்மைகள், இண்டோ-ஆப்பிரிக்கன் மிக்ஸ்டு வெரைட்டி என கஸ்டமைஸ்ட்டு கிராப்ட்டுகள் செய்தேன். விழாக்களுக்கு ரிட்டன் கிப்ட்டுகளுக்கு 'பல்க்' ஆர்டர்கள் வந்தன. சர்ப்ரைஸ் கிப்ட்களுக்காக மனதுக்கு பிடித்தமானவர் போட்டோக்களை 'கிராப்ட்' செய்து தர கஸ்டமர்கள் கொடுக்கும் 'யுனிக்' ஐடியாக்களிலும் பொம்மைகள் செய்திருக்கிறேன்.
8 இன்ச் முதல் இரண்டரை அடி உயரம் வரை கஸ்டமைஸ்டு கிராப்ட்டுகள் தயார் செய்கிறேன். ஓய்வு நாட்களில் தொலைதுாரக்கல்வி டிகிரி படிக்கிறேன். மாணவர்களுக்கு 'பேப்பர் கிராப்ட்' வகுப்பெடுக்கிறேன்.
எனது வாழ்வு இனி வீல்சேரில் என நினைத்த நேரம், எழுந்து நடக்க ஊக்கம் தந்தது எனது குடும்பம்; இருளில் மூழ்கிய என் நம்பிக்கைக்கு ஒளி தந்த முயற்சி; மரித்துப்போன என் சிந்தனைகளுக்கு மறுவாழ்வு அளித்தவர்கள்தான் என்றென்றைக்கும் எனது 'ஏஞ்சல்கள்'' என புன்னகைத்து பேசிய ராதிகாவுக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.