/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
மதுரையில் துவங்கிய சினிமா வாழ்வு: சந்தோஷத்தில் சரண்யாநாக்
/
மதுரையில் துவங்கிய சினிமா வாழ்வு: சந்தோஷத்தில் சரண்யாநாக்
மதுரையில் துவங்கிய சினிமா வாழ்வு: சந்தோஷத்தில் சரண்யாநாக்
மதுரையில் துவங்கிய சினிமா வாழ்வு: சந்தோஷத்தில் சரண்யாநாக்
ADDED : ஜன 14, 2024 05:25 PM

குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது 'காதல்' படத்தில் கவனம் பெற்று, இன்று பல படங்களில் குணச்சித்திர நடிகையாக ஜொலிக்கும் சரண்யாநாக் மனம் திறக்கிறார்.
சினிமாவிற்குள் அடியெடுத்த தருணம்
சொந்த ஊர் ஐதராபாத். பிறந்து, வளர்ந்தது சென்னை. அப்பா நாகராஜன், அம்மா மஞ்சுளா. ஒரே மகள். பள்ளி படிப்பின் போதே சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால், அதில் ஆர்வம் சென்றது. சினிமா பின்புலமின்றி இத்துறையில் 4 வயதிலேயே வந்துவிட்டேன். நீ வருவாய் என, திருநெல்வேலி, காதல் கவிதை ஆகிய படங்களில் சிறுமியாக நடித்துள்ளேன். பத்தாம் வகுப்பு படித்த போது 'காதல்' படத்தில், நடிகை சந்தியாவின் தோழியாக சத்யா என்ற கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பேராண்மை, 'சிதம்பரத்தில் அப்பாச்சாமி' படம் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளேன்.
'கேரக்டர் ஆர்டிஸ்ட்' ஏன்
சினிமாவில் குணச்சித்திர நடிகருக்கான இடம் காலியாக தான் உள்ளது. மனோரமா, சரண்யா பொன்வண்ணனுக்கு அடுத்து 'கேரக்டர் ஆர்டிஸ்ட்' இடத்தை பிடிக்கவே விரும்புகிறேன். தெலுங்கு, தமிழ் திரைப்படம், சீரியல் நடிகைகளுக்கு 'டப்பிங் வாய்ஸ்'களும் கொடுத்து வருகிறேன். சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை' படத்தில் நடித்துள்ளேன்.
மதுரையை விரும்புவது ஏன்
எனது சினிமா வாழ்க்கை துவங்கிய இடம் மதுரை. 'காதல்' படம் இங்கு தான் எடுத்தனர். எனக்கு பிடித்த மீனாட்சி குடிகொண்ட நகரம் மதுரை. 'முயல்' பட ஹீரோயினாக நடித்தேன். அந்த படப்பிடிப்பும் மதுரையில் தான் நடந்தது. எனக்கு ராசியான நகரம். மதுரையின் அசைவ உணவுக்கு நிகர் வேறு எங்கும் இல்லை. எவ்வித எதிர்பார்ப்பும், உள்நோக்கமின்றி பழகும் 'பாசக்காரங்க' மதுரை மக்கள்.
எந்த நடிகருடன் நடிக்க ஆசை
என்னை கவர்ந்த நடிகர் விஜய் சேதுபதி. அவர் தனக்கு கொடுக்கும் 'கேரக்டரை' எளிமையாக நடித்து காண்பித்து விடுவார். அதே போன்று ஜெயம்ரவியும். அவர்கள் இருவருடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆசை.
சினிமா வளர...
தமிழகத்தில் இருந்து புதிய நடிகைகளை தேர்வு செய்தால் தான், தமிழை நன்கு புரிந்து படத்திற்கான கேரக்டராக மாறி நடிப்பார்கள். நயன்தாரா தனி நபராக போராடி சினிமாவில் 'சிம்ம சொப்பனமாக' திகழ்ந்து வருகிறார். இது போன்றவர்களை தேடி கண்டுபிடித்தால் தான், இத்துறை வளர்ச்சிபெறும்.
சினிமாவில் வரவேற்கும் விஷயம்
வயது அதிகமான நடிகைகளாக இருந்தாலும், இயக்குனர்கள் 'கேரக்டருக்கு' ஏற்ற கதையை வழங்கி, அவர்களையும் சிறந்த நடிகைகளாக்கி விடுகின்றனர்.
திருமணத்தை பற்றி...
ஆணும், பெண்ணுக்கிடையே புரிதல் இருப்பது அவசியம். அது தான் திருமணத்திற்கு தரும் மரியாதை.
பொங்கல் பற்றி...
பொங்கல் என்றாலே மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு தான் உலகப்புகழ் பெற்றது. கிராமங்களில் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து வழிபடுவர். சென்னை போன்ற நகரில் வீட்டு மாடியில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

