/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
தேமதுர தேன்மொழியின் தீஞ்சுவை ஆங்கிலம்
/
தேமதுர தேன்மொழியின் தீஞ்சுவை ஆங்கிலம்
ADDED : ஜூன் 01, 2025 04:09 AM

செந்தமிழ் நாட்டு தமிழச்சியாய் சேலை அணிந்து கொண்டு அழகுத் தமிழில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆங்கில பயிற்றுநராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த தேன்மொழி. சென்னைப் பொண்ணு என்றாலும் வளர்ந்தது துாத்துக்குடி என ஆரம்பித்தார் தேன்மொழி.
துாத்துக்குடி ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் படித்த போது எல்.கே.ஜி., முதல் 14 ஆண்டுகள் பரதநாட்டியம் கற்றேன். பள்ளி, கல்லுாரி கலை நிகழ்ச்சிகளில் கிராமியம், வெஸ்டர்ன், பரதநாட்டியம் ஆடி பரிசுகளை வென்றுள்ளேன். சென்னை கலாஷேத்திரத்தில் சேர விரும்பினேன். சூழ்நிலை ஒத்து வராததால் துாத்துக்குடி, திருநெல்வேலியில் பி.காம்., எம்.பி.ஏ., முடித்து மனிதவளத்துறை நிறுவனங்களில் கம்யூனிகேஷன் டிரெயினராக வேலை பார்த்தேன். எனது ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்ததால் நிறைய பேருக்கு ஆங்கில பேச்சுமொழி கற்று கொடுத்தேன்.
கொரோனா காலகட்டத்தில் டி.இ.எப்.எல்., சிறப்பு படிப்பு முடித்து முழுமையான ஆங்கில பயிற்றுநரானேன். அதேநேரத்தில் ஜூம்பா நடனமும் கற்று சான்றிதழும் பெற்று ௨ ஆண்டுகளாக ஆன்லைனில் வெளிநாட்டினருக்கு ஜூம்பா கற்றுத் தந்தேன்.
கொரோனா காலகட்டம் முடிந்தபின் ஆங்கில பயிற்சிக்கு நேரம் செலவிட வேண்டியிருந்ததால் ஜூம்பா பயிற்சி தருவதை நிறுத்தி விட்டேன். ஆனால் தினமும் அரைமணி நேரம் ஜூம்பா ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
பிட்னஸ் முக்கியம்
பரதநாட்டியம் கற்றுக் கொண்டதால் எப்போதும் பிட்னஸில் கவனம் செலுத்துகிறேன். ருசிக்காக பார்க்காமல் பசிக்காக சத்தான உணவு மட்டும் சாப்பிடுகிறேன். நேரத்திற்கு சாப்பிடுவதோடு உடற்பயிற்சி செய்து மனதையும் தெளிவாக வைத்திருக்கிறேன். உடலையும் மனதையும் ஒன்றாக வேலை பார்க்க செய்துவிட்டாலே ஒவ்வொருவரும் ஜெயித்ததாக தான் அர்த்தம்.
ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பிற்கு செல்வதாலோ, படம் பார்ப்பதாலோ, புத்தகம் படிப்பதாலோ ஆங்கிலம் பேச முடியாது. தொடர்ந்து பேச பேசத் தான் பழகும். தமிழில் 247 எழுத்துக்களை படித்து வார்த்தைகளை உருவாக்குகிறோம். ஆங்கிலம் 26 எழுத்துக்கள் தானே. நாம் தான் அதை சிக்கலாக புரிந்து கொண்டிருக்கிறோம். பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலிய ஆங்கில உச்சரிப்பு வித்தியாசமாக இருக்கும். தமிழக மக்கள் பேசும் ஆங்கில மொழி தான் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். அழகாக ஆங்கில மொழி உச்சரிப்பதில் நாம் சிறந்தவர்கள் என பெருமையாக சொல்லலாம்.
இன்ஸ்டாவில் இலவச பயிற்சி
இன்ஸ்டாகிராமில் தினமும் ஆங்கில பேச்சு பயிற்சி அளித்து ரீல்ஸ் ஆக வெளியிடுகிறேன். ஆங்கிலத்திற்கு தரும் முக்கியத்துவத்தை தமிழ் உச்சரிப்பிற்கும் தருகிறேன். நாள்தோறும் நாம் பேசும் வார்த்தைகளை தமிழில் பேசி அதற்கான ஆங்கில வார்த்தைகளை கட்டமைத்து எளிமையாக கற்று தருகிறேன்.
ஆங்கிலம் கற்றுக் கொண்டால் எந்த நாட்டுக்கு சென்றாலும் பயமின்றி தடையின்றி பேசலாம். சாட் ஜி.பி.டி., போன்ற தொழில்நுட்பங்கள் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தந்தால் உங்களுக்கு என்ன தேவை என ஆங்கிலத்தில் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். அது தான் மொழி ஆளுமை. முறையாக கற்றுக் கொண்டால் தமிழ் போல ஆங்கிலமும் இனிதாக வசப்படும் என்றார்.