ADDED : ஜூன் 22, 2025 03:39 AM

பாரதியின் நிமிர்ந்த நன்னடை ஆணுக்கும் பெண்ணுக்குமானது என்றாலும் அலைபேசி ஆதிக்கத்தில் யாருமே நிமிர்ந்து நடப்பதில்லை. ரோடோ, வீடோ, கடையோ எங்கே சென்றாலும் குனிந்து அலைபேசியை பார்த்தபடியே செல்கின்றோம். குழந்தைகளையும் அப்படி வளர்க்ககூடாது, நாம் பார்த்து ரசித்த ரோடு, கடை, மரம், வாகனங்கள், பறவை, விலங்குகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இது தான் நிஜ உலகம் என புரிய வைக்க வேண்டும். இந்த தலைமுறை பெற்றோரின் தலையாய கடமை இதுதான் என தனது 'மாலு ஷாலுவின் பயணம்' என்ற குழந்தைகளுக்கான புத்தகம் வழியே வெளிப்படுத்துகிறார் மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த எழுத்தாளர் பானுலட்சுமி ராமராஜ்.
தனது முதல் புத்தகத்திலேயே குழந்தைகளுடனான உலகம் பெரிது என நமக்கு புரிய வைத்த பானுலட்சுமியின் அடுத்த புத்தகமும் குழந்தைகளுக்கானது தான் என்று பேசத் தொடங்கினார்.
கல்லுாரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் ஆனது. படிப்பை கைவிட்ட நிலையில் 2 குழந்தைகள் பிறந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த போது 'டிகிரி முடிக்கவில்லையே' என்ற ஆதங்கம் ஏற்பட்டது. டிகிரி முடித்ததும் ஆசிரிய பணியில் ஆர்வம் வந்தது. தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டே பி.எட்., முடித்தேன். கணவர் ராமராஜ் சென்னைக்கு மாற்றலானதால் அங்கு குடிபெயர்ந்தோம். புத்தகம் படிப்பது பிடித்தமான பொழுதுபோக்கு. இந்த எழுத்தாளர் தான் பிடிக்கும் என வரையறை செய்து படித்ததில்லை.
எம்.எஸ்சி., 'கவுன்சிலிங் அன்ட் சைக்கோதெரபி' தொலைநிலையில் முடித்தேன். ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடு சார்பில் நடந்த குழந்தைகளுக்காக புத்தகம் எழுதுவது குறித்து 2 நாள் பயிற்சியில் பங்கேற்றேன்.
எழுத்தாளர் நிவேதிதா லுாயிஸ் பேட்டியை படித்த போது என்னை புத்தகம் எழுத துாண்டியது. முதல் புத்தகம் எழுத ஆரம்பித்தேன். குழந்தைகளுக்கு ஏதோ செய்ய தோன்றியது. என் காலகட்டத்தில் பார்த்த, கேட்ட, அனுபவித்த விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தர தோன்றியது. அப்படி ஆரம்பித்தது தான் 'மாலு ஷாலுவின் பயணம்' புத்தகம்.
இரட்டை குழந்தைகள் பார்க்கும் அத்தனை விஷயங்களையும் கேள்வி கேட்டு புரிந்து கொள்வதென கதை வழியே கொண்டு சென்றேன்.
விலங்குகளிடம் மனிதர்கள் பண்ட மாற்று முறையில் இலை, தழைகளை கொடுத்து பழங்களை பெறுவது போன்ற கதை அமைப்பை குழந்தைகள் விரும்பி படித்தனர். கதைகளை வடிவமைத்து சில பள்ளிகளிடம் வாசிக்க அளித்த போது வரவேற்றனர். அதன் பின் செயற்கை நுண்ணறிவு முறையில் கதைக்கான படங்களை வரைந்தேன்.
பூமி நமக்கானது மட்டுமல்ல... புல், பூண்டு, மரம், செடி, பறவை, விலங்குகள் அனைத்திற்கும் சொந்தமானது. அறிவியல், வரலாற்று புத்தகங்களை விட கதை புத்தங்கள் மாணவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கும். நானும் புத்தகத்தின் வழியே அறம் சார்ந்த விஷயங்களை கொடுக்க நினைக்கிறேன்.
எனது அடுத்த படைப்பும் குழந்தைகளுக்கானது. அலைபேசிகள் ஓய்வதில்லை. அதை விடுத்து சுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது நமது கடமை என்றார்.
இவரிடம் பேச: 99623 80777.