/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் கர்நாடக இசைக்கச்சேரி
/
ஆக்லாந்தில் கர்நாடக இசைக்கச்சேரி

நியூஸிலாந்து கர்னாடிக் சொசைட்டி மவுண்ட் ரொஸ்கில் வார் மெமோரியல் அரங்கத்தில் கர்நாடக சங்கீத இசை கலைஞரான சேர்தலை டாக்டர் கே என் ரெங்கநாத சர்மாவின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கர்நாடகக் கலைஞர் டாக்டர் கே.என். ரங்கநாத சர்மா பிறந்த ஊர் கேரளாவின் சேர்தலா, இவர் உலகெங்கும் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத வித்வான். அகில இந்திய வானொலியில் A கிரேடு இசைக்கலைஞர். அவரது இசை மரபு 'செம்மங்குடி தொடர்புடையதாகவும் இருப்பது சிறப்பு.
டாக்டர் ரெங்கநாத ஷர்மாவுடன் இணைந்து ஆருஷி ரமேஷ் வயலினும் அவினாஷ் ஜெய்சங்கர் மிருதங்கமும் வாசித்து கச்சேரியை சிறப்புற செய்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சொசைட்டியின் செயலாளர் ரவி நாகராஜன் இசை கலைஞர்களை வரவேற்று அறிமுக உரையாற்றினார்.
சர்மா முதலில் நீவே கதியென்று நளினகாந்தி ராகத்தில் அமைந்த லால்குடி ஜெயராமன் இயற்றிய வர்ணத்தை ஆரம்பித்து கச்சேரியை தொடங்கினார். பின் ஆபோகி ராகத்தில் ஸ்ரீ மகா கணபதி என்ற கிருதியை விஸ்தாரமாக ஸ்வர ப்ரஸ்தாரங்களுடன் பாடினார். தொடர்ந்து ஸ்ரீ ஸ்வாதி திருநாள் இயற்றிய ஆரபி ராகத்தில் அமைந்த ஸ்ரீ ரமண விபா என்ற கீர்த்தனை மிக அருமையாக இருந்தது.
தொடர்ந்து தீக்ஷிதரின் ஸ்ரீ தியாகராஜ நமஸ்தே என்ற பேகடா ராக கீர்த்தனை, ஷ்யாமா சாஸ்திரியின் தேவி ப்ரோவ சமயமிதே என்ற சிந்தாமணி ராக க்ருதியை தொடர்ந்து முக்கிய ராகமாக காபி ராகத்தை விஸ்தாரமாக ஆலாபனை செய்து தியாகராஜரின் இந்த சௌக்கிய மணிநே என்ற கீர்த்தனையைஎடுத்து அதற்கேற்ற கல்பனா ஸ்வரங்களை நேர்த்தியாக போட்டு சபையோரின் ஏகோபித்த கரவொலிகளைப் பெற்றார். அவருடன் இசைந்து ஆருஷியின் வயலினும் மற்றும் அவினாஷின் தனி ஆவர்த்தனமும் மிகச் சிறப்பாக இருந்தது.
அதையடுத்து பெஹாக் ராகத்தில் அமைந்த கீர்த்தனையை பாடி பின் அம்புஜம் கிருஷ்ணா இயற்றிய என்ன சொல்லி அழைத்தால் வருவாயோ என்ற கானடா ராக கீர்த்தனையை தொடர்ந்து பாரதியாரின் சின்னச்சிறு கிளியே என்ற பாடல் மனதை வருடுவதாக இருந்தது. அதை தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று மீரா பஜன் மிகவும் அழகாக பாடினார். நிறைவாக தில்லானா பாடி மங்களத்துடன் கச்சேரியை மிகச் சிறப்பாக பாடி முடித்ததும் ரசிகர்கள் அனைவரும் மனது நிறைந்து எழுந்து நின்று நீண்ட நேரம் தங்கள் கைதட்டல் மூலம் பாராட்டி கரவொலியை எழுப்பினார்கள். அவினாஷின் தனி ஆவர்த்தனம் கச்சேரிக்கு மெருகூட்டியது. சபையோர் கரவொலி எழுப்பி ரசித்தனர்.
பத்மா கோவர்தன் இசை நிகழ்ச்சியை வெகுவாக பாராட்டி பேசினார். நிறைவாக சங்கீத சொஸைட்டியின் செயலாளரான ரவி நாகராஜன் இசைக் குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement