sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

கத்தாரில் ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்

/

கத்தாரில் ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்

கத்தாரில் ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்

கத்தாரில் ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்


டிச 19, 2024

Google News

டிச 19, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைத்துறைப் பயணத்தில், 2024 என்பது பொன்விழா ஆண்டு. மேலும் 12.12.2024 அன்று அவருக்கு பவளவிழா ஆண்டு பிறந்த நாள். இந்த இரண்டையும் அடையாளப் படுத்தும் வண்ணம் கத்தார் நாட்டில் ரஜினி ஸ்பெஷல் பாட்டுக்கச்சேரியும், பிறந்த நாள் விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்தியக் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் இவைகளை தொடர்ந்து அறிவுறுத்தியும், பலதரப்பட்ட கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தியும் இந்திய மற்றும் தமிழ் மக்களுக்கு கத்தாரில் கலை ஆர்வத்தை வளர்த்துவரும் இந்திய கலாச்சார மையம் (ஐ.சி.சி.), இந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த தினத்தை கொண்டாட முன்வந்தது. ஓவ்வொரு வாரமும் நிகழ்வுறும் 'புதன் திருவிழா' வரிசையில் சென்ற புதன்கிழமை 11.12.2024, அதாவது சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு முன்தின மாலை ஜ.சி.சி.யின் அசோகா அரங்கில் 7மணி முதல் 10 மணி வரை பாட்டும் ஆட்டமும் களைகட்ட கோலாகலக் கலைவிழாவாக அமைந்தது.


கத்தார் ரஜினி மன்றம் ஒரு சமூகசேவை அமைப்பாக பல வருடங்களாக இயங்கி வருகிறது. ரஜினியின் புதுப்பட சிறப்புக்காட்சியாக இருந்தாலும், பிறந்தநாள் விழாவாக இருந்தாலும் அதை புதுப்பொலிவுடன் செய்வதே கத்தார் ரஜினி மன்றத்தின் தனித்துவம்.


கத்தாரில் ஆகச்சிறந்த தமிழ் இன்னிசைக் குழுக்களில் ஒன்றான 'சாதக குயிலினங்கள்', பல்வேறு விழாக்களில் இசைக்கச்சேரிகளை இனிதே நடத்தி வருகிறது. இந்தக் குழுவில் தம்பதியர் செந்தில்குமார் & பூங்குழலி, மகாதேவன் & ஷர்மிளா ஆகியோருடன் கைகோர்த்து டாக்டர் சிவசங்கர், டாக்டர் ப்ரவீன், சுவாமிநாதன், சுரேஷ், தேவா, பிரகாஷ், கலீல், வசந்தி, லஷ்மி, சுஜாதா, மோகனப்ரியா மற்றும் ஹரீஷ், தென்றல், ரக்ஷ்னா ஆகிய 2K இளம் பாடகர்களைச் சேர்த்து பல பகுதிநேர பாடகர்கள் தரமாக பாடிவருகின்றனர்.


ஐ.சி.சி.யின் அலுவலக மேலாண்மைக் குழுவினர் முதலில் இந்திய பாரம்பரிய குறியீடாக, குத்துவிளக்கில் தீபங்களை ஏற்றி தமது சிற்றுரைகளை வழங்கினர். அதைத் தொடர்ந்து வரவேற்புரையை ஷர்மிளா மகாதேவன் இருமொழி வழியே வழங்கி, நிகழ்ச்சியினை ரசனையோடு ரசிக்கும் வகையில் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ரஜினியின் திரைப்படப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்த நொடியில் பிறந்த அதிர்வலை நிகழ்வின் கடைசி நிமிடம் வரை தொடர்ந்து ஒலித்தது என்பது மிகையில்லா உண்மை.


சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் விழாவில் கத்தார் நாட்டில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டு பெருமை செய்தனர். 'கடவுள் உள்ளமே...கருணை இல்லமே...' என்று இறையிசையில் துவக்கி, 'அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே...' என உறவு இசையில் மனங்களை மயக்கி, 'காட்டுக்குயிலு மனசுக்குள்ள...' தோழமையில் தொடர்ந்து, 'மனசிலாயோ...' வரை இன்னிசை, மெல்லிசை, குத்திசை, துள்ளிசை, அதிரடியிசை என்று நவரச உணர்வுகளை திரையிசை வழியே சாதக குயிலினங்கள் தெறிக்கவிட்ட போது, பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் எழுந்து பரவசமாக ஆடிக் களிப்படைந்தனர்.


ரஜினி மன்றத்தின் நிர்வாகக்குழுவினர், சிறப்பு விருந்தினர் மற்றும் சிறுவர் சிறுமியர் சூழ, ரஜினியின் பிறந்தநாள் மற்றும் 50 வருட ரஜினி ராஜ்ஜியம் என்று எழுதி அலங்கரிக்கப்பட்ட வடிவமான கேக் வெட்டப்பட்டது. ரஜினியின் சாதனைகளைப் பறைசாற்றும் 3 நிமிட காணொலிக் காட்சியை ஓடவிட்டதும் அரங்கில் கரகோஷமும் விசிலொலியும் சுமார் 5 நிமிடத்துக்கு மேலாக ஓங்கி ஒலித்தது. பிறகு, வந்திருந்த அனைவருக்கும் 2025 க்கான கத்தார் ரஜினி மன்ற காலண்டரும், இனிப்பும் நெஞ்சங்கள் இனிக்கத் தரப்பட்டது.


நிகழ்வுக்கு நல்வாய்ப்பளித்த ஐ.சி.சி.யின் தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் மோகன்குமார் ஆகியோரை கத்தார் ரஜினி மன்றத்தின் செயலாளர் கார்த்திக், இணைச் செயலாளர் குரு நன்றி பாராட்டினர். மேலும் இசைநிகழ்ச்சியை பிரத்தியேகமாக ரஜினியின் கொண்டாட்ட வைபவமாக மாற்றிய 'சாதக குயிலினங்கள்' குழுவினரை கௌரவித்து பாராட்டினர். மன்றத்தின் செயற்குழுவினரான முத்து, சிவசங்கர், வெங்கட், குருபிரசாத், பால்ராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்று, அன்பு பாராட்டி விழாவை வெற்றிகரமாக நடத்தியதில் பெரும்பங்கு வகித்தனர்.


ஐ.சி.சி.யின் முன்னெடுப்பு, ரஜினியின் மேஜிக், சாதக குயிலினங்கள் ம்யூசிக், ரசனை நிறைந்த பப்ளிக், ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்வு ஒரு கிளாசிக் என்று அனைத்து தரப்பினரும் கூறியது, ரஜினி மன்றத்தினரின் நெஞ்சத்தைக் குளிரச்செய்தது.


- நமது செய்தியாளர் எஸ். சிவசங்கர்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us