/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
முன்னாள் மாணாக்கர் வெள்ளி விழா சந்திப்பு
/
முன்னாள் மாணாக்கர் வெள்ளி விழா சந்திப்பு
ஆக 02, 2025

புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் 1996ல் சேர்ந்து 2000ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற முன்னாள் மாணவ மாணவியரின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி பல்கலைக்கழக கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் 140க்கும் மேற்பட்ட முன்னாள் மாணாக்கர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு நன்றிகூறும் வண்ணம் நினைவுப்பரிசுகளை வழங்கி கவுரவப்படுத்தினர்.
கடந்த 25 ஆண்டுகளில் இங்கு பயின்ற மாணவ மாணவிகள் பலர் சுய தொழில் முனைவர்களாக, பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகள் வகிப்பவர்களாக, பேராசிரியர்களாக, அரசுப் பணியாளர்களாக மற்றும் திறன்மிகு குடும்பத்தலைவிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை மற்றும் அகால மரணமடைந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டபின் விழாக்குழுவின் செயலாளர் பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தலைமை வகித்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் எஸ். மோகன் பேசினார்.
கல்வி இயக்குனர் விவேகானந்தன், முன்னாள் மாணாக்கர் பேரவை தலைவர் சாந்தி பாஸ்கரன், பதிவாளர் (பொறுப்பு) சுந்தரமூர்த்தி மற்றும் மின்னியல் துறை தலைவர் இளஞ்சேரலாதன் உள்ளிட்டோர் விழாவில் பங்குபெற்ற முன்னாள் மாணவ மாணவியரை வாழ்த்தி பேசினர்.
இந்த சந்திப்பின் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கல்லூரியின் முன்னாள் முதல்வர்களாக பணி புரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் எத்திராஜூலு பிரிதிவிராஜ் மற்றும் கோதண்டராமன் ஆகியோர் தங்கள் பணி காலத்தில் நடைபெற்ற வளர்ச்சிப்பணிகளை நினைவுபடுத்தி பகிர்ந்துகொண்டனர். நிறைவாக பேராசிரியை ரேவதி நன்றியுரை ஆற்றினார்.
தங்களின் நல்வாழ்வுக்கு உதவிய இக்கல்வி நிறுவனத்திற்கு நன்றி கூறும் வண்ணம் இந்த வெள்ளி விழா நினைவாக மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டமைப்புகள், ஆய்வுகூட உபகரணங்கள், கல்வி நிதியுதவிகள் மற்றும் வல்லுனர்களின் சிறப்புரைகள் ஆகியவற்றை நிறுவும் வண்ணம் விழாவில் பங்கு பெற்ற முன்னாள் மாணவ மாணவியர் தீர்மானம் இயற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த ஸ்ரீராம், சத்தியன், சதீஷ் உள்ளிட்ட விழாக்குழுவினர் விழாவில் பங்குபெற்ற அனைத்து கல்லூரி தோழர்களுக்கு டி-ஷர்ட்களையும், 3D அச்சு உருவாக்கம் செய்யப்பட்ட, பல்கலை நுழைவுவாயில் மாதிரிகளை நினைவுப்பரிசாக வழங்கினர். பேராசிரியை ரேவதி நன்றியுரை ஆற்றினார்.
- பேராசிரியர் க. செல்வராஜூ, இயக்குநர் (திட்டம் மற்றும் மேம்பாடு)
Advertisement