ADDED : ஆக 02, 2024 01:23 PM

புத்தகமும் பாட்டும்
பச்சைப்புடவைக்காரியின் அன்பையே மையக் கருத்தாக வைத்து ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். அன்றிரவு ஒரே மூச்சில் தொடர்ந்து எழுதி புத்தகத்தை முடித்து விட்டேன். அப்போது அதிகாலை 12:௦௦ மணி.
மறுநாள் எழுதியதை இரண்டு, மூன்று முறை படித்துப் பார்த்தேன். எழுதிய என்னாலேயே அழாமல் படிக்க முடியவில்லை.
திங்களன்று காலை புத்தகத்தைப் பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்தேன். என்ன சொல்லப் போகிறார்களோ என பதட்டத்துடன் காத்திருந்தேன். புதனன்று இரவு 11:௦௦ மணிக்கு அலைபேசி ஒலித்தது. பதிப்பகத்தில் என் புத்தகங்களைப் பிழை திருத்தும் பாண்டியன் பேசினார்.
“இப்போது தான் உங்க புத்தகத்தப் படிச்சி முடிச்சேன். அது புத்தகமே இல்ல''பேசிக்கொண்டேயிருந்தவர் திடீரென உடைந்து போய் பெரிதாக அழத் தொடங்கினார். “பச்சைப்புடவைக்காரியப் பத்தி நிறையப் பேர் எழுதிட்டாங்க. நீங்களே இதுவரைக்கும் அஞ்சாறு புத்தகம் எழுதியிருக்கீங்க. ஆனா இந்தப் புத்தகம் மாதிரி எதுவுமே கிடையாது சார். பரம்பரை நாஸ்திகனையும் உங்க புத்தகம் அழ வச்சிரும் சார். பச்சைப்புடவைக்காரிக்கு அடிமையாக்கிரும் சார்”
என் கண்களும் நிறைந்துவிட்டன. எப்படியோ அவரிடம் பேசி முடித்துவிட்டேன்.“அடுத்த வாரம் எங்க பாஸ வந்து பாருங்க. உங்க புத்தகத்துக்குப் பெரிய அளவுல விளம்பரம் செய்யணும்.வெளியீட்டு விழா விமரிசையா நடக்கணும். நானே பாஸ்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேன்”
அதன்பின் என்னால் துாங்க முடியவில்லை. நான் எழுதியதையே மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருந்தேன். தாயின் அன்பைப் பற்றி இப்படியெல்லாம் நம்மால் எழுத முடிந்ததே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. யாராலும் இதைப் போல் எழுத முடியாது என்ற எண்ணமும் தோன்றியது. அப்போது அது தவறு எனத் தெரியவில்லை. என்ன செய்வது? நானும் ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண மனிதன்தானே!
அடுத்த வாரமே தொழில் நிமித்தமாகச் சென்னை செல்ல வேண்டியிருந்தது. என் வேலை முடிந்ததும் பதிப்பகத்தின் உரிமையாளரைப் பார்த்தேன். என் புத்தகத்தை மிகவும் சிலாகித்துப் பேசினார். பெரிய அளவில் விழா எடுப்பதாகவும் சொன்னார். உற்சாகம், லேசான கர்வத்துடன் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினேன். என் புத்தகம் எழுத்துலகில் பரவலாகப் பேசப்படும் என உணர்ந்து காலரை மானசீகமாகத் துாக்கிவிட்டுக்கொண்டேன்.
மறுநாள் காலை விமானத்தில் ஊர் திரும்புவதாக ஏற்பாடு.
ஐந்து மணிக்கு என் நண்பர் குமார் பேசினார்.
“சென்னையில்தான் இருக்கியாமே? சாயங்காலம் ஃப்ரீயா?”
“என்ன விஷயம்னு சொல்லு. ஃப்ரீயா இல்லையான்னு சொல்றேன்”
“நாரத கான சபாவுல இன்னிக்கு விஸ்வா பாடறான். நீயும் வரியா?”
“யாரு விஸ்வா?”
“அடப்பாவி! விஸ்வா தெரியாதா உனக்கு? அவனுக்கு இருபது வயசுதான் ஆகுது. எப்படி பாடறான் தெரியுமா? கூட்டம் அலைமோதும். முதல் வரிசையில ரெண்டு டிக்கெட் இருக்கு. ஃப்ரீயா இருந்தா வாயேன்.”
அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.
ஆறுமணிக்கு விஸ்வா பாட ஆரம்பித்தான். கூட ஒரு கீபோர்ட் வாசிப்பவரும் ஒரு தபலா வாசிப்பவரும் மட்டும்தான் இருந்தார்கள். சம்பிரதாயமான கர்நாடக இசை பாணியில் விஸ்வா பாடவில்லை. வர்ணம், கீர்த்தனை, ஜதி ஸ்வரம், துக்கடா என எந்த வரிசையையும் பின்பற்றவில்லை.
அபிராமி அந்தாதியில் இருந்து நிறையப் பாடல்களைப் பாடினான்.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை... எனத் தொடங்கும் பத்தாவது பாடலின் முதல் வரியை கண்களில் நீர் மல்க அவன் பாடியபோது நான் உடைந்துபோய் அழுதுவிட்டேன். குமார் என் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டான்.
“என்னாச்சு? தண்ணி குடிக்கிறியா?” எனக் கரிசனத்துடன் கேட்டான்.
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் என்ற அந்தப் பாடலின் இரண்டாவது வரியில் என்னை வேறு உலகத்திற்குக் கொண்டு சென்று விட்டான் விஸ்வா. அதற்கு மேலும் அரங்கத்தில் இருந்தால் ஏதாவது ரசாபாசமாகி விடும் எனக் குமாரிடம் சொல்லிவிட்டு வெளியே ஓடினேன்.விஸ்வாவின் குரல் வெளியிலும் கேட்டுக் கொண்டிருந்தது. நான் இருந்த இடத்தில் யாருமே இல்லை. அதனால் வெடித்துக் கிளம்பிய விம்மல்களைக் கட்டுப்படுத்த நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. என் மனம் முழுவதும் வியாபித்திருந்த தாய் என் முன்னே வந்ததுபோல் ஒரு உணர்வு.
முன்னால் ஒரு அழகான பெண் நின்றிருந்தாள். வேரறுந்த மரமாக அவள் காலில் விழுந்து வணங்கினேன்.
“என்ன ஒரேயடியாக அழுது கொண்டிருக்கிறாய்?”
“என்னால் உங்கள் அன்பைத் தாங்க முடியவில்லை, தாயே! ஒருவேளை நான் உங்களுடன் ஒன்றும் நேரம் நெருங்கிவிட்டதோ?”
“ஆசையைப் பாரேன்.”
நான் அவளையே பார்த்தபடி நின்றிருந்தேன்.
“ஆறு மாதம் கடுமையாக உழைத்தாய். என் அன்பையே மையக்கருத்தாக வைத்து 300 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதினாய். அதில் பக்கத்திற்குப் பக்கம் என் அன்பைப் பற்றித்தான் எழுதியிருந்தாய். என் அன்பை விளக்க நீ சொன்ன கதையும் அருமையாக அமைந்துவிட்டது. உன் புத்தகத்தைப் படிப்பவர்கள் நிச்சயம் என் அன்பை நினைத்து அழுவார்கள். உன் பதிப்பாளரே அழுது விட்டார். எல்லாம் சரி. இதெல்லாம் உன்னால் நடந்தது என நினைத்தாயே, அங்கே தான் பிரச்னை ஆரம்பித்தது.
“இன்று காலை பதிப்பாளர் உன்னைப் பாராட்டிய போது என்னால்தான் இப்படி எழுத முடியும் எனக் கர்வம் கொண்டாயே அந்தக் கணத்தில் மனதில் அகந்தைப் பாம்பு நுழைந்தது. அதை அடிக்கத்தான் உன்னை இந்த இசை கச்சேரிக்கு வரவழைத்தேன்.
நீ ஆறு மாதம் இரவு பகலாக உழைத்து 300 பக்க புத்தகம் ஒன்றை எழுதி அதைப் படிப்பவர்களை அழ வைத்தாய். இந்த இளைஞன் இரண்டே வரிகள்தான் பாடினான். அவன் குரலில் இருந்த பாவமும் பக்தியும் உன்னை அழவைத்தது. உன் எழுத்தில் இருப்பவளும் நானே. இந்த இளைஞனின் குரலில் இருப்பவளும் நானே. மனிதர்களை அழவைப்பதும் சிலிர்க்க வைப்பதும் நானே.
“நான் அன்பாக இருக்கிறேன். என் எழுத்தில் அன்பு இருக்கிறது. அது படிப்பவர்களை அழவைக்கிறது” என நீ நினைத்ததும் அகந்தைதான். அந்த அகந்தைப் பாம்பை நான் அடிக்கும்போது நீ குறுக்கே வந்தால் அடி உனக்கும் விழும். நான் சொல்வது புரிகிறதா?”அழுதபடியே தலையாட்டினேன்.
“உனக்கு என்ன வேண்டும்?”
“அகங்காரம் பிடித்த எனக்கு ஏன் தாயே உங்களைப் பற்றி எழுதும் வல்லமை தந்தீர்கள்? என் திறமைகளையும் நல்வினைப்பயனையும் உங்கள் அன்பைப் பற்றி உருக உருகப் பாடும் அந்த இளைஞனுக்கே கொடுத்து விடுங்கள். அகந்தை நோய் என்னை மீண்டும் பீடித்தால்... பயமாக இருக்கிறது தாயே!”
“அந்தப் பயம்கூட ஒரு மாதிரியான அகந்தைதான். நான் செய்கிறேன் என்ற நினைப்பு இருந்தால்தான் சொதப்பி விடுவேனோ என்ற பயம் இருக்கும். செய்பவள் நான். உனக்கு எதற்கு பயமும் அகந்தையும்?”
“நான் எழுதிய புத்தகத்தை துாக்கியெறிந்து விடட்டுமா?”
“வேண்டாம். இப்போது பாடிக்கொண்டிருக்கும் இந்த இளைஞனுக்கு ஒரு காலத்தில் அகந்தை வரும். அப்போது அதைப் போக்கும் மருந்தாக உன் புத்தகத்தைத் தான் நான் பயன்படுத்துவேன்”
“என் புத்தகத்தை இல்லை, உங்கள் அன்பை. உங்கள் புத்தகத்தை” தாய் மறைந்துவிட்டாள்.
'அருளே உமையே' என உருகிக்கொண்டிருந்தான் விஸ்வா. நான் அழுதுகொண்டிருந்தேன்.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com