sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 7

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 7

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 7

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 7


ADDED : ஆக 02, 2024 01:13 PM

Google News

ADDED : ஆக 02, 2024 01:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்கண்

“டிரிங்... டிரிங்... டிரிங்...”

“ என்ன சத்தம் இது? அமுதன் கூட எழுந்துட்டானே” என்றார் பாட்டி

“ அட... இது அலைபேசியில் வரும் அலாரம் பாட்டி. போன வாரம் எண்கண் முருகனை பற்றி சொல்ல உங்களுக்கு நினைவூட்ட வச்சேன்” என்றாள் தேவந்தி அமுதனுக்கு பால் கலந்து கொடுத்தபடி.

“ அடக்கடவுளே! மணி ஆறரை தானே ஆகுது. இவ்வளவு சீக்கிரமாவா... நான் இன்னும் குளிக்கலையே”

“ பல் துலக்கியாச்சுல்ல, சொல்லு பாட்டி. அப்புறம் நாங்க ஓட தயாராகிடுவோம்'' என்றான் யுகன் நாளிதழ்களை புரட்டியபடி.

“ம்... அதுவும் சரிதான். முருகனை பற்றி சொல்ல சொல்ல என் வாயும் மணக்கும் அதைக் கேட்க கேட்க உங்க உடலும் மணக்கும். அதனால இன்னிக்கு குளிக்கவே வேண்டாம்'' என சிரித்தார் பாட்டி.

“இன்னிக்கி குளிக்க வேண்டாமா” எனக் கத்தினான் அமுதன்.

“டேய் குட்டிக் குமரா... உன் சேட்டைக்கு குறைவே இல்லை. பாட்டி சொல்றத கேக்குறியா?”

“ம்... சொல்லுங்க பாட்டி. எங்க மிஸ் கூட அம்மா கிட்ட கதை கேளுங்கன்னு சொன்னாங்க. அம்மா சொல்லவே மாட்டாங்க. நீங்க சொல்லுங்க பாட்டி'' என்றான் தன் இனிய குரலில்.

அமுதனை செல்லம் கொஞ்சியபடி சொல்லத் தொடங்கினார் பாட்டி.

“அந்த தெய்வீகமான சிற்பி முதலில் சிக்கலில் முருகனின் சிலையை செதுக்கி பின் முத்தரச சோழனால் கை கட்டை விரலை இழந்தார். பிறகு எட்டுக்குடியில் கட்டைவிரல் இல்லாமலேயே அதைப் போல முருகன் சிலையை செதுக்கி அதே முத்தரச சோழனால் பார்வையை இழந்தார். மனமொடிந்த அந்த சிற்பி, சமீவனம் என்ற இடத்திற்கு வந்து ஒரு சிறுமியின் உதவியுடன் மீண்டும் முருகன் சிலை வடித்தார். அப்போது உளிபட்டு அவரது கையில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அந்த ரத்தம் கண்களில் பட்டு சிற்பிக்கு கண் பார்வை வந்தது”

“அம்மாடி... ஒரு வழியா சிற்பி இழந்தது திரும்ப கிடைச்சதா, சந்தோஷம்'' என்றான் யுகன்.

“ஆமா... அந்த முருகன் அருளால எல்லாம் கிடைத்தது. எண்கண் என்பது சிவன் கோயில் தான். ஆனாலும் முருகன் தான் இங்கு பிரதானம். மூலவர் சிவன் பெயர் பிரம்மபுரீஸ்வரர். இந்த கோயில் தல வரலாறு சுவாரஸ்யமானது. படைப்பு தொழிலைச் செய்யும் பிரம்மா பிரணவ மந்திரத்தின் பொருளை மறந்துட்டார். அந்த சமயத்தில் முருகன் பிரம்மனிடம் பிரணவ மந்திரத்திற்கு பொருள் கேட்க பிரம்மன் முழிச்சாரு”

“ஆமா... சிவபெருமானே கைகட்டி வாய் பொத்தி நின்னு முருகனிடம் அந்த பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்டாரு''

“சரியா சொன்னே! முருகனின் கோபத்துக்கு ஆளானார் பிரம்மா. தண்டனையா சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் படைக்கும் தொழிலை முருகனே செய்தார். இதையறிந்த சிவன் படைக்கும் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைக்குமாறு கூறினார். பின்னர் சிவனின் வேண்டுகோளை ஏற்று பிரணவ மந்திரத்தின் பொருளை பிரம்மாவுக்கு உபதேசித்தார் முருகன். பின்பு படைக்கும் தொழிலை பிரம்மா ஏற்று சிவனை பூஜித்ததால் இந்த தலத்திற்கு பிரம்மபுரம் எனப் பெயர் பெற்றது. பிரம்மனுக்கு உபதேசித்த முருகன் இங்கு உற்ஸவரராக காட்சி தருறார்.”

“ஓ”

“மூலவர் முருகன் மயில் வாகனத்தில் தனியாக அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வயானை உள்ளனர். தேன், பால், நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், தயிர், நெய், பழரசம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது சிறப்பு. பங்குனி மாதத்தில் வரும் மூன்று நாட்கள் இங்கு பிரம்மபுரீஸ்வரர் மீது சூரியஒளி படும். அதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியா இருக்கும். அது மட்டுமில்ல இங்கு தான் மன்னர் சிம்மவர்மனுக்கு சாபம் நீங்கியது”

“யார் அந்த சாபத்தை நீக்கியது? சிவனா, முருகனா?”

“சாட்சாத் முருகனே தான். பிருகு முனிவரின் சாபத்தால் சிம்ம வர்மனுக்கு சிங்கமுகம் கிடைத்தது. இதனால் தினமும் வெட்டாற்றில் நீராடி எண்கண் வேலவனை தரிசித்தார்.

ஒரு தைப்பூசத்தன்று முருகன் அருளால் மன்னரின் முகம் இயல்பு நிலைக்கு திரும்பியது. எண்கண் எனப்படும் இங்கு வழிபட்டால் கண்நோய் அனைத்தும் மறையும். கண்பார்வை குறைவு உள்ளவர்கள் விசாக நட்சத்திரத்தன்று குமார தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு சண்முகார்ச்சனை செய்கின்றனர். இப்படி தொடர்ந்து 12 மாதம் வழிபட்டால் கண் குறைபாடு தீரும்.

சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய இந்த மூன்று கோயில்களும் முருகன் சிலைகளை வடித்த சிற்பியால் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை”

“சரி பாட்டி, இந்த கோயில்கள் ஒன்னுக்கு ஒன்னு பக்கத்தில இருக்கா?”

“நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கல் இருக்கு. எட்டுக்குடியும் எண்கண்ணும் திருவாரூர் மாவட்டம். ஒரே நாளில் மூன்று கோயிலையும் தரிசிக்கலாம். திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ., துாரத்தில எண்கண் இருக்கு”

“அப்ப அருணகிரிநாதர் ஒரே நாளில் மூன்று கோயிலையும் பாடி இருப்பாரோ”

“இப்பதான் சாலை, போக்குவரத்து வசதி எல்லாம் இருக்கு. ஒரே நாளில போகலாம். வசதி இல்லாவிட்டாலும் அவர் ஊர் ஊரா போய் பாடியிருக்கார் என்றால் முருகன் மேல் எத்தனை ஈடுபாடு! இப்படிப்பட்ட அருளாளர்கள் மூலமா முருகனின் அழகையும் மேன்மையையும் நாம் அனுபவிக்கிறோம். அருணகிரிநாதர் இங்கு பாடிய ஒரு பாடல் கிடைச்சிருக்கு.

அம்ப கும்பனும் கலங்க வெஞ்சினம்

புரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற

கொண்டல்... மருகோனே இந்துவும்

கரந்தை தும்பை கொன்றையும் சலம்!

புனைந்திடும் பரந்தன் அன்பில் வந்த... குமரேசா

இந்திரன் பதம் பெறண்டர் தம்பயம் கடிந்த பின்பு

எண்கண் அங்கமர்ந்திருந்த... பெருமாளே

“அப்ப சிக்கல், எட்டுக்குடி, எண்கண்னு போயிட வேண்டியதுதான்.”

“போலாம் நாம் இழந்தவைகளை எல்லாம் இந்த முருகன் மீட்டுத் தருவார்”

“என்னப்பா அமுதா, கதை நல்லா இருந்ததா? சரி சரி உனக்கு பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சுல்ல, குளிச்சு சாப்பிட்டுட்டு கிளம்பு பார்ப்போம். சரி, உனக்கு மயிலை பிடிக்குமா?”

“ஓ பிடிக்குமே... அது தேசிய பறவையாச்சே. மயிலை விட மயிலிறகு ரொம்ப பிடிக்கும். என் புத்தகத்துல கூட வெச்சிருக்கேன்”

“ஆ... அந்த மயிலே ஒரு நீதிமன்றத்துல கூண்டு ஏறி சாட்சி சொல்லியிருக்கு. அந்தக் கதையை அடுத்த வாரம் சொல்றேன்”

“பாட்டி, இப்படி ஏதாவது சொல்லுவேன்னு” என விழுந்து விழுந்து சிரித்தான் யுகன்.

“அருணகிரிநாதரே இந்த கோயிலுக்கு போக வழி கேட்டு போனாருன்னா பாத்துக்கோ”

“அது எந்த இடம்?”

“அது ஒரு மலை.அதை மட்டும் தான் இப்ப நான் சொல்லுவேன்”

“சரி, ஏதாவது துப்பு குடு பாட்டி”

“சொல்றேன் கேட்டுக்க. அது ஒரு அஞ்செழுத்து கொண்ட மலை. கண்டுபிடி பார்ப்போம்.”

யோசித்தபடியே நின்றிருந்த யுகனை, “ஆபீஸ்க்கு நேரம் ஆகலையா...கிளம்புங்க” என அவசரப்படுத்தினாள் தேவந்தி.



-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882






      Dinamalar
      Follow us