ADDED : ஜூன் 21, 2019 02:46 PM

சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லுாரியில் காஞ்சி மகாசுவாமிகள் முகாமிட்டிருந்தார். பூஜை, சொற்பொழிவுகள் தினமும் நடந்தன. பக்தர்கள் தீர்த்தப் பிரசாதத்தை வரிசையில் நின்று பெற்றனர். பல பிரமுகர்கள் அவ்வப்போது சுவாமிகளிடம் சந்தேகம் கேட்டுச் சென்றனர்.
இதற்கிடையில் சுவாமிகள் மயிலாப்பூரில் வீதிவலம் செல்ல விரும்பினார்.
மாலையில் சீடர்கள் பின்தொடர புறப்பட்டார். கடைகளின் பெயர்ப் பலகைகளை படித்தபடி சென்றார். ஓரிடத்தில் வித்தியாசமாக 'ஸ்ரீவதி ஸ்டோர்ஸ்' என பெயர் இருக்கவே நின்று விட்டார்.
'ஸ்ரீமதி' தெரியும். அது என்ன 'ஸ்ரீவதி' அப்படி ஒரு பெயர் உண்டா! என்று அறிய விரும்பினார். சீடரை பெயருக்கான காரணத்தை அந்த கடைக்காரரிடம் கேட்டு வரும்படி அனுப்பினார். வீதிவலம் தொடர்ந்தது. சுவாமிகள் கல்லுாரிக்குள் நுழைந்தார். மனதிற்குள் பெயருக்கான காரணம் இதுவாக இருக்கும் என யூகித்தார் சுவாமிகள்.
அதற்குள் சீடரும் வந்தார். பேச முயன்ற அவரை கையமர்த்தி, 'இரு! அந்தப் பெயர் எப்படி வந்திருக்கும் என சொல்கிறேன்!' என்றார் சுவாமிகள்.
'கடையின் உரிமையாளர் பெயர் ஸ்ரீனிவாசன். அவரது மனைவியின் பெயர் பத்மாவதி. இருவரின் பெயரையும் சேர்த்து வைக்க விரும்பியிருக்கிறார்கள்.
ஸ்ரீனிவாசனில் உள்ள 'ஸ்ரீ' யையும், பத்மாவதியில் உள்ள 'வதி'யையும் சேர்த்து 'ஸ்ரீவதி ஸ்டோர்ஸ்' என வைத்து விட்டனர். பெயரளவில் இணையாமல், நிஜமாகவே இணைந்தனர் இத்தம்பதிகள். என்ன நான் சொல்வது நிஜம் தானா?'' என்றார். திகைப்பில் ஆழ்ந்த சீடனும் வேகமாக தலையசைத்தார்.
காஞ்சி பெரியவர் உபதேசங்கள்
* காபி குடிப்பதை தவிருங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* மனதை பாழ்படுத்தும் சினிமா,தொலைக்காட்சி தொடர்களை பார்க்காதீர்கள்.
திருப்பூர் கிருஷ்ணன்