
வேண்டுகோளை நிறைவேற்றுவார்
'எதிர்பார்ப்பு இல்லாமல் பாடுபடும் பக்தனின் வாக்கை உண்மையாக்க தயாராக இருக்கிறேன்' என்கிறார் கிருஷ்ணர்.
சிலரைக் கண்டால், 'ரொம்ப நல்ல மனசு உள்ளவர். அவர் என்ன சொன்னாலும் பலிக்கும்' என சொல்வதுண்டு. நல்ல மனம் பெற்றவரே இப்படி என்றால் எப்போதும் கடவுளையே சிந்திக்கும் அடியவர்களின் சொல்லைக் காப்பாற்ற கடவுள் தயாராக இருக்கிறார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா...
'இந்தத் துாணில் மகாவிஷ்ணு இருக்கிறானா' எனக் கேட்டான் அசுரனான இரணியன். அதற்கு அவன் மகனான பிரகலாதன், 'ஆம்...இருக்கிறார்' என்றான். அவனுக்காக அரண்மனையில் உள்ள அனைத்து துாணிலும் நரசிம்மராக காத்திருந்தார் மகாவிஷ்ணு. எந்தத் துாணை அசுரன் இரணியன் உடைத்தாலும் அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக...
அதுபோல ஆழ்வார்கள், நாயன்மார்கள் சொன்ன வாக்கை கடவுள் நிறைவேற்றினார் என்பது தான் சனாதன தர்மத்தின் வரலாறு.
ஒருமுறை கீழ்த்திருப்பதியில் சீடர்களுக்கு திருமாலின் பெருமைகளை விவரித்தபடி இருந்தார் மகான் ராமானுஜர். அது கோடைக்காலம். சீடர்களின் கவனத்தைச் சிதறடிப்பது போல 'மோர் வேணுமா மோர்...' எனக் கூவிய படி வந்தார் ஒரு மூதாட்டி. சீடர்களுடன் ராமானுஜர் இருப்பதைக் கண்டதும் 'இவர்கள் மோர் வாங்கினால் அலையாமல் இன்றைய வேலை முடியுமே'எனக் கருதினார். ராமானுஜரின் முகத்தைப் பார்த்தனர் சீடர்கள்.
மோர் விற்கும் மூதாட்டியை அழைத்து அனைவருக்கும் மோர் கொடுக்கச் சொன்னார் ராமானுஜர். மனதிற்குள் அவளுக்கு மகிழ்ச்சி. பணத்தைக் கொடுக்கும் போது மூதாட்டி வாங்க மறுத்ததோடு 'அவர் ஒரு தவயோகி' என்பதையும் உணர்ந்தார். பின் ,''எனக்கு ஒரு உதவி செய்யுங்க சுவாமி'' என்றாள். இதைக் கேட்ட ராமானுஜர், 'என்ன வேண்டும்' எனக் கேட்டார். 'மோட்சம் வேணும்' என்றாள். புன்னகைத்த ராமானுஜர், ''அம்மா... அதை கொடுக்கத்தான் மலை மீது பெருமாள் இருக்கிறாரே... அவரால் தான் மோட்சம் தர முடியும்'' என்றார். ''பலமுறை கேட்டு விட்டேன். அவர் தரவில்லை'' என்றாள். ''கருணைக்கடல் அவர். நிச்சயம் தருவார்'' என்றார்.
மூதாட்டியோ விடாப்பிடியாக, ''சரி... அவரிடமே போகிறேன். நீங்கள் எனக்காக சிபாரிசு செய்யுங்கள். உங்களைப் போல தவயோகி சொன்னால் பெருமாள் கேட்பார்'' என்றாள்.
அவளின் மனஉறுதி கண்டு, ''மோர் விற்கும் மூதாட்டிக்கு மோட்சம் தந்தருள்க. இப்படிக்கு அடியேன் ராமானுஜன்'' என ஓலை எழுதிக் கொடுத்தார். மூதாட்டியும் மலைக்கோயிலுக்கு புறப்பட்டாள். பட்டாச்சாரியாரிடம் ஓலையை ஒப்படைத்தாள். அதை படித்த அவர், பெருமாளிடம் ஒப்படைத்தார். அப்போது வானில் இருந்து புஷ்பக விமானம் ஒன்று வந்து மூதாட்டியை ஏற்றிக் கொண்டு சென்றது. மோர் கொடுத்ததால் மோட்சம் பெற்றாள் மூதாட்டி.
இதே போல இன்னொரு சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது.
ஒரு தை அமாவாசையன்று மன்னர் சரபோஜி திருக்கடவூர் அபிராமியம்மன் கோயிலுக்கு வந்தார். மன்னரைக் கண்டதும் கோயில் பரபரப்பானது. அப்போது தியானத்தில் இருந்தார் சுப்பிரமணிய பட்டர். அவரது பக்தியின் ஆழத்தைப் புரிந்தவர்கள் சிலரே. மற்றவர்கள் அவரை பைத்தியம் எனத் திட்டினர். மன்னர் சன்னதிக்குள் நுழைந்த போது பட்டர் மட்டும் எழுந்திருக்கவில்லை. சுற்றி இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா... என்ன? மன்னரை மதிக்காமல் இருக்கிறாரே பட்டர் என அவரை எழுப்ப முயன்றனர். மன்னருடன் வந்த மந்திரி அருகில் வந்து, ''எழுந்திருங்கள் என அவரை அசைத்தார். ''பட்டரே! உம்மை பைத்தியம் எனச் சொல்வது உண்மைதான் போலிருக்கிறது. சரி... சரி.. இன்று என்ன திதி தெரியுமா?'' என மந்திரி கேட்டார்.
எப்போதும் அம்பிகையை தியானிக்கும் பட்டருக்கு ஆயிரம் கோடி சூரிய பிரகாசமாக விளங்கும் அம்பிகையைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. ஒளி வெள்ளத்தில் மூழ்கியபடி 'இன்று பவுர்ணமி' எனப் பதிலளித்தார். அனைவரும் சிரித்தனர். மன்னரோ கோபத்துடன், 'அப்படியானால் இன்றிரவு நிலா வருமா'' எனக் கேட்டார். 'வரும்' என்றார் பட்டர். 'அமாவாசையான இன்று நிலா வரும் என்கிறீர்களே?' என்றார் 'அம்பிகை அருளால் வரும்' என மீண்டும் பதிலளித்தார்.
'நிலா வராவிட்டால் தண்டிப்பேன்' எனச் சொல்லி விட்டு மன்னர் புறப்பட்டார்.
'நன்றே வருகினும், தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை' என அபிராமி அம்மனைச் சரணடைந்து பாடத் தொடங்கினார். 79வது பாடல் பாடும் போது காட்சியளித்த அம்பிகை காதில் இருந்த தோட்டினை வீசினாள். அது வானில் பவுர்ணமி நிலவாக ஜொலித்தது. பட்டரின் பக்தியை உணர்ந்த மன்னர் மீதிப் பாடல்களையும் பாடுமாறு வேண்டினர். இதனால் 'அபிராமி அந்தாதி' என்னும் அற்புதப் பொக்கிஷம் நமக்கு கிடைத்தது.
அமாவாசை திதி மட்டும் பவுர்ணமியாக மாறவில்லை. பட்டரின் விதியும் மாறியது. விதியை மாற்றும் வலிமை இப்பாடலுக்கு உண்டு.
பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்றுவார் கடவுள் என்பதே சனாதனம்.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870