
பேசும் தெய்வம்
'தெய்வம் மனுஷ்ய ரூபேன' அதாவது தெய்வம் மனித வடிவில் நமக்கு உதவி செய்யும் என்பது வேதவாக்கு. ஆம். இக்கட்டான நிலையில் யாராவது உதவி செய்தால், 'கடவுள் மாதிரி வந்து காப்பாத்துனீங்க' என்பது வழக்கம். ஆனால் சனாதன தர்மத்தில் மனித வடிவில் பல நேரங்களில் கடவுள் உதவியிருக்கிறார். 'கடவுள் நேரில் வருவாரா' எனக் கேட்டால் 'ஆம்' என உறுதியாகச் சொல்ல முடியும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் என்னும் தலத்தில் சிவனடியார்களுடன் வெயிலில் நடந்து வந்தார் சுந்தரர்.
அப்போது பந்தல் அமைத்து உணவு, நீர் கொடுத்தார் சிவன்.
திருப்பதியில் அனந்தாழ்வான் என்பவர் கர்ப்பிணியான தன் மனைவியுடன் சேர்ந்து நந்தவனம் அமைத்தார். அப்போது ஏழுமலையான் சிறுவன் வடிவில் உதவி செய்தார்.
சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் இருந்த தன் சகோதரரின் வீட்டில் வள்ளலார் வாழ்ந்து வந்தார். ஒருநாள் வடிவுடையம்மன் கோயிலுக்கு அவர் சென்ற போது, அர்த்த ஜாம பூஜை முடிந்து வீட்டுக்கு வர தாமதமானதால் சாப்பிடாமல் வீட்டின் திண்ணையில் படுத்தார். திருவொற்றியூரில் அருள்புரியும் வடிவுடையம்மன், வள்ளலாரின் அண்ணி வடிவில் தோன்றி வள்ளலாருக்கு உணவளித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மொட்டைக் கோபுரத்தை முழுமையாக்கியவர் அமராவதிப் புதுார் வயிநாகரம் நாகப்பையா. இவருக்கு சிறுமி வடிவில் மதுரை மீனாட்சி தோன்றி உணவளித்தாள்.
இப்படி எத்தனையோ வரலாறு உள்ளன. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இன்றும் கடவுள் நேரில் வந்தே அருள்புரிகிறார்.
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த வணிகர் ரத்தின குப்தன். சிவனருளால் தனக்கு பிறந்த பெண் குழந்தை ரத்னாவதியை பக்தியுடன் வளர்த்தார். திருச்சியைச் சேர்ந்த தனகுப்தனுக்கு மணம் முடித்தார். இங்கு அருள்புரியும் செவ்வந்திநாதர், மட்டுவார் குழலியம்மன் மீது பக்தி கொண்டிருந்தாள் ரத்னாவதி. கருவுற்ற மகளைக் காண காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து பெற்றோர் அடிக்கடி வந்தனர். பிரசவத்திற்காக தாயை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அது மழைக்காலம். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தாயும் பணியாளர்களுடன் பிரசவத்திற்காக மாட்டு வண்டியில் புறப்பட்டாள். காவிரி வெள்ளத்தால் ஊருக்குள் நுழைய முடியவில்லை. பிரசவ வேதனையில் 'செவ்வந்தி நாதா' எனக் கதறினாள் ரத்னாவதி. திருச்சி மலைக்கோட்டையை விட்டு இறங்கிய சிவபெருமான், பக்தைக்காக தாயின் வடிவில் தோன்றினார். தவிப்புடன் இருந்த ரத்னாவதி தாயைக் கண்டதும் மகிழ்ந்தாள். பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. மூன்று நாளானதும் வெள்ளம் வடிந்தது. உண்மையான தாய் தவிப்புடன் மகளைக் காண வந்தாள். பிரசவம் நடந்து மகள் குழந்தையுடன் இருப்பதைக் கண்டு, 'உனக்கு யார் உதவி செய்தார்' எனக் கேட்டாள்.
''நீ தானம்மா செய்தாய்'' எனச் சொன்னாள் மகள். மழையால் வர தாமதமாகி விட்டதாக தாய் தெரிவித்தாள். தாயாக நின்றிருந்த சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார்.
''அம்மா... உன் வடிவில் எனக்கு உதவிக்கு வந்தவர் யார்?'' என கண்ணீருடன் கேட்டாள் மகள். வந்தவர் மலைக்கோட்டை செவ்வந்தி நாதர் என்ற உண்மை புரிந்தது. இவரே தாயுமானவர் எனப் போற்றப்படுகிறார்.
தாயில்லாச் சிறுவன் ரங்கன், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தான். பாட்டிக்கு பேரன் துணை. இவருக்கும் ஸ்ரீரங்கநாதனே துணை. ஆம்... அவள் தினமும் ஸ்ரீரங்கனை தரிசிக்க தவறியதில்லை.
ஒருநாள் காவிரியில் குளிக்கச் சென்ற சிறுவன் ஆற்றுக்குள் மூழ்கினான். 'ரங்கா காப்பாற்று' என அலறினான். ஆனால் அம்மாமண்டப படித்துறையில் கரையேறினான். பேரனைக் காணாமல் பாட்டி தவித்தாள். 'என்னடா ரங்கா... இப்படி சோதிக்கிறாய்' எனப் பிரார்த்தனை செய்தாள். அடுத்த கணமே சிறுவன் வடிவில் பெருமாளே வந்து, 'பாட்டி! இதோ வந்து விட்டேன்' என்றான். கட்டி அணைத்தாள். பாக்கியசாலி அல்லவா... பேரனுக்கு தலை துவட்டி விட்டு தட்டில் பழைய சோறிட்டு கொஞ்சம் நீராகாரம் ஊற்றினாள். மாவடு வைத்தாள். சிறுவனாக வந்த பெருமாள் அதைச் சுவைத்து மகிழ்வதற்குள் உண்மையான பேரன் வந்து விட்டான். ரங்கநாதர் அங்கிருந்து மறைந்தார். இதன் அடிப்படையில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழாவின் போது ஜீயபுரத்தில் எழுந்தருள்கிறார் ரங்கநாதர்.
பகவான் ரமணர் மீது ஈடுபாடு கொண்ட வெளிநாட்டினர் திருவண்ணாமலைக்கு வருவதுண்டு. அவர்களில் ஒருவரான மேஜர் சாட்விக் அவரை குருநாதராக ஏற்றுக் கொண்டார். ஒருநாள் மேஜர் சாட்விக் கரடு முரடான பாதையில் கிரிவலம் செல்லத் தொடங்கினார். செருப்பு அணிந்தாலும் மலைப்பாதையில் செல்வது சிரமமாக இருந்தது. 'அருணாசலா...' என ஜபித்தபடி நடந்தார். வழியில் செருப்பு அறுந்ததால் நடக்க முடியவில்லை. வலி தாங்காமல் கதறினார். கண் இமைக்கும் நேரத்தில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வந்தான். 'ஏன் இப்படி கத்துகிறீர்கள்' எனக் கேட்டான். செருப்பு அறுந்ததை ஜாடையில் காட்டினார் சாட்விக். உடனே அவன் தன் செருப்பைக் கொடுத்தான். சிறிது நேரத்தில் சிறுவன் மாயமானான். கிரிவலம் முடித்து ரமணரை சந்தித்து நடந்ததைக் கூறினார். 'அண்ணாமலையாரே உனக்காக சிறுவன் வடிவில் வந்தார்' என ரமணரும் ஆமோதித்தார்.
இன்றும் மனித வடிவில் கடவுள் நமக்காக வர தயாராக இருக்கிறார். இந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள். கடவுளை நம்மிடம் வரவழைக்கும் வாழ்க்கை முறையே சனாதனம்.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870