
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்பது மாணிக்கவாசகரின் திருவாசகம். 'யார் எந்த தெய்வத்தை வழிபாட்டாலும் அது கேசவனாகிய என்னையே வந்து சேருகிறது' என்கிறது பகவத்கீதை. ஒரு குளத்திற்கு பல படித்துறைகள் இருக்கும். இதில் எந்த படித்துறையின் வழியாக இறங்கினாலும் நீர்நிலையை அடையலாம். எல்லா நெறிமுறைகளும் ஒரே கடவுளை சென்றடையும் என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
ஆம்! இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர் கூட நம் மண்ணின் தெய்வங்களின் மீது ஈர்க்கப்பட்டு கடவுள் தரிசனம் பெற்றனர் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.
ஆன்மிகம் என்பது ஓர் ஆன்மாவின் தேடல். மதங்களைக் கடந்து கடவுள் நிலையை அனுபவித்த அருளாளர்கள் எண்ணிக்கையில் அடக்க முடியாது.
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் மூலம் உலகெங்கும் ஏராளமானோர் பக்தியில் ஈடுபட்டு வருகின்றனர். சனாதனம் என்பது மதம் அல்ல; வாழ்வியல் நெறி.
காஞ்சி மஹாபெரியவரை தரிசித்து ஏராளமான இஸ்லாமியர் பலன் பெற்றுள்ளனர். அவர்களை சந்திக்கும் போதெல்லாம், 'ஐந்துவேளை தொழும் மார்க்கக் கடமையை சரிவரச் செய்யுங்கள்' என்பார்.
காஞ்சி சங்கர மடத்தை ஒட்டியுள்ள மசூதியில் இருந்து கேட்கும் காலை பாங்கு ஓசை தன் காலை நேரக் கடமைகளுக்கு உதவுவதாகச் சொல்வார். மனித நேயம், ஒற்றுமை, பேரன்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
17 ம் நுாற்றாண்டின் முடிவில் மதுரை கலெக்டராக இருந்தவர் ரோஸ் பீட்டர். மக்களிடம் பேரன்பு கொண்டவர் இவர். ஆங்கிலயராக இருந்தாலும் தன்னால் முடிந்த வரையில் மக்களுக்கு உதவி செயதார். ஒருமுறை கன்னிவாடி, பெரியகுளம், போடி பகுதிகளில் காட்டு யானைகளின் தொந்தரவு அதிகம் இருந்தது. அதிகாரிகளால் அதை தடுக்க முடியவில்லை என அறிந்த ரோஸ் பீட்டர் தானே நேரில் சென்று வேட்டையாடி யானைகளின் கொட்டத்தை அடக்கினார்.
இதயம் முழுவதும் அன்பு நிரம்பி இருந்ததால் ஏழைகளைத் தேடிச் சென்று உதவி செய்தார். தங்கள் பகுதிகளில் நடக்கும் விழாக்களில் அவர் மீது ஏராளமான நாட்டுப்புறப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். 'பீட்டர் பாண்டியன் அம்மானை' என்றொரு நுாலே இயற்றப்பட்டது. தற்போது அது கிடைக்கவில்லை. மக்கள் அவரை மதுரையை ஆட்சி செய்யும் பாண்டிய மன்னராக கருதினர். வீரம், கொடை, எளிமை, அன்பு ஆகிய நல்ல பண்புகள் கொண்ட ரோஸ் பீட்டர் தினமும் அலுவலகத்திற்குச் செல்லும் முன்பாக மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிய சித்திரை வீதிகளை குதிரையில் சுற்றி வந்த பிறகே பணிபுரிவார். அம்மன் சன்னதியின் முன் ஒரு நிமிடம் நின்று மனமுருகி வேண்டுவார்.
ஒருநாள் இரவு பெருமழை பெய்தது. ரோஸ் பீட்டர் தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். திடீரென யாரோ எழுப்புவது போலிருந்தது. கண்விழித்த போது சிறு பெண்குழந்தை அருகில் நின்றது. மின்னலைப் போல் மேனி, பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூட்டியிருக்கிறது. பீட்டரின் கைகளைப் பற்றிக் கொண்டு அவரை அறையை விட்டு தரதரவென இழுத்து வந்தது. மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போல பீட்டரும் பின்தொடர்ந்தார். மாளிகையை விட்டு சிறிது துாரம் கடந்ததும் இடியுடன் மின்னல் வீட்டின் மீது இறங்க இடிந்து நொறுங்கியது.
திகைத்து பார்த்த போது கையைப் பற்றி வந்த குழந்தை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சென்று மறைந்தது. கண்ணீருடன் தன்னைக் காப்பாற்றிய மீனாட்சியம்மனுக்கு நன்றிக் கடனாக குதிரைச் சேணத்தின் பாதம் தாங்கிகளை தங்கத்தில் மாணிக்கம் பதித்தபடி காணிக்கை அளித்தார். சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம்நாள் வேடர்பறி லீலையன்று அம்மனுக்கு அணிவிக்கின்றனர். பாண்டிய மன்னர்களின் வரிசையில் பீட்டர் பாண்டியனும் இடம் பெற்றார் எனில் பாரத மண்ணில் இத்தகைய அதிசயம் நடந்தபடியே இருக்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தில் கோதண்டராமர் கோயில் உள்ளது. சீதையை மீட்கச் சென்ற ராமர் இங்குள்ள விபாண்டக முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். இலங்கையில் இருந்து சீதையை மீட்டு வரும் போதும் தன் ஆசிரமத்திற்கு ராமர் வந்தருள வேண்டும் என பிரார்த்தித்தார். ராமரும் வரும் வழியில் சீதையுடன் திருமணக்கோலத்தில் காட்சியளித்து அருள்புரிந்தார். இங்கு மூலவர் ராமருடன் விபாண்டக முனிவரும் இருக்கிறார். கருவறைக்கு வலப்புறத்தில் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. திருமழிசை ஆழ்வார், ராமானுஜர் இக்கோயிலுடன் சம்பந்தம் கொண்டவர்கள்.
1825ல் கிழக்கிந்திய கம்பெனியின் கலெக்டராக இருந்தவர் கர்னல் லயோனஸ் பிளேஸ். இவரது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாக மதுராந்தகம் இருந்தது. ராமர் கோயிலின் பின்புறம் பெரிய ஏரி ஒன்று உள்ளது. சுற்றுப்புற கிராமங்களின் பாசனம், குடிநீர் தேவைக்கு ஆதாரமாக இருந்தது இந்த ஏரி. மழைக்காலங்களில் ஏரி நிரம்பி வெள்ளச் சேதம் ஏற்படுவது வழக்கம். கலெக்டர் பிளேஸ் ஏரியின் கரைகளை உயர்த்திய நிலையிலும் வெள்ளப்பெருக்கு நிற்கவில்லை.
ஒருமுறை மழைக்காலத்திற்கு முன்பாக ஒருநாள் ஏரியைப் பார்வையிட்டார் பிளேஸ். ஏரி பற்றி அதிகாரி, மக்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, ராமர் கோயிலின் அர்ச்சகர்கள் சிலர் அங்கு வந்தனர். கோயிலில் திருப்பணி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் பிளேஸ், ''உங்கள் தெய்வத்தின் அருளால் இந்த ஆண்டு ஏரி உடையாமல் இருந்தால் திருப்பணி செய்து தருகிறேன்'' என வாக்களித்தார்.
மழைக்காலம் தொடங்கியதால் ஏரி நிரம்பத் தொடங்கியது. எந்நேரமும் உடையலாம் என்ற சூழலில் ஒருநாள் நள்ளிரவில் மழை பெய்யும் நேரத்தில் குடை, டார்ச் லைட்டுடன் பிளேஸ் தனியாளாக ஏரிக்கரைக்குச் சென்றார். இருட்டில் டார்ச் லைட்டின் வெளிச்சம் போதவில்லை. இருப்பினும் தைரியமாக முன்னேறினார்.
திடீரென ஒரு மின்னல். அந்த வெளிச்சத்தில் வில்லும், அம்பும் ஏந்தியபடி கம்பீரமான இரு இளைஞர்கள் ஏரிக்கரையில் நிற்பதைக் கண்டார். ஆச்சரியத்துடன் வீட்டுக்குத் திரும்பினார்.
காலையில் மழை ஓய்ந்தது. ஆனால் மழை நீர் ஏரியில் நிரம்பியும் கரை உடையவில்லை. கோயிலை நோக்கி ஓடினார். தான் கண்ட காட்சியை தெரிவித்தார். அர்ச்சகர்களும், பக்தர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். ராமர், லட்சுமணரை நேரிலேயே தரிசித்த பிளேஸ் துரையைக் கொண்டாடினர். வாக்களித்தபடி அவரும் திருப்பணி செய்து கொடுத்தார். இக்கோயிலின் கல்வெட்டில், 'இந்த தர்மம் கும்பினி கலெக்டர் லியோனஸ் பிளேஸ் துரை அவர்களுடையது' எனக் குறிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் இக்கோயில், ஏரிகாத்த ராமர் கோயில் எனப்படுகிறது.
சனாதனம் உலகிற்கே பொதுவானது என்பதற்கான சாட்சியங்கள் இவை. நாடு, இனம், மொழி இவற்றைக் கடந்த அன்பு ஒன்றே உயிர் நாதம். எனவே நாம் அனைவரும் அன்பு என்னும் குடையின் கீழ் இணைந்து வாழ்வோம்.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870