ADDED : ஆக 21, 2023 01:58 PM

ஆடு, மாடுகளுக்கு சில நேரங்களில் நோய் வருவதுண்டு. இந்த சூழலில் ராஜகோபாலசுவாமியை வேண்டினால் எல்லாமே சரியாகும். இவரை தரிசிக்க விரும்பினால் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்திற்கு வாருங்கள்.
பொதுவாக பெருமாள் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் வைத்திருப்பார். ஆனால் இங்கு வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் கொண்டுள்ளார். இதற்கு என்ன காரணம் தெரியுமா?
கிருஷ்ணராக அவதரித்த பெருமாள் குருஷேத்திரப் போரின்போது அர்ஜூனனுக்கு தேரோட்டியாக இருந்தார். போரில் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என்று சத்தியமும் செய்தார். போர் குறித்து அறிவிப்புகளை செய்ய சங்கை மட்டும் பயன்படுத்தினார். இதனால் இவரது சங்கின் ஒலியைக் கேட்டதுமே, எதிரிப்படையினர் நடுங்கினர். இவ்வாறு கிருஷ்ணர் வலது கையில் சங்கை வைத்து ஊதியதால், பெருமாள் இங்கு வலது கையில் சங்கு வைத்திருக்கிறார். கிருஷ்ண அவதாரத்தில் இடையனாக இருந்து பசுக்களை மேய்த்ததால், இவர் 'ராஜகோபாலர்' என்று பெயர் பெற்றார்.
மூலஸ்தானத்தில் நான்கு கைகளுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜகோபாலர் நின்ற கோலத்தில் பத்ம விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இடது கையில் தண்டாயுதம் இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி இருக்கிறாள். கால்நடைகள் நோயின்றி வாழவும், பசுக்கள் நன்கு பால் சுரக்கவும் இவருக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக் கொள்ளலாம்.
செங்கமலவல்லி தாயாரும் ஆண்டாளும் தனிச்சன்னதியில் உள்ளனர். பெருமாள் சன்னதி சுற்று சுவரில் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், காளிங்கநர்த்தன கிருஷ்ணர் ஆகியோரின் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. சிவபெருமான் சன்னதிகளில் கோஷ்டத்தில் விநாயகர் இருப்பதைப்போல், இங்கு பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருக்கிறார்.
ராஜகோபாலர் கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயர் தனிக்கோயிலில் உள்ளார். இவர் இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி, கையில் கதாயுதம் இல்லாமல் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி என்பதால் இவருக்கு காவியுடையை பிரதானமாக அணிவித்து அலங்காரம் செய்யப்படுவது சிறப்பு. இவரை வழிபட்டால் குரு மீதான மரியாதை அதிகரிக்கும்.
எப்படி செல்வது: சென்னை தாம்பரத்தில் இருந்து 8 கி.மீ.,
விசேஷ நாள்: வைகுண்ட ஏகாதசி புரட்டாசி சனிக்கிழமை
நேரம்: காலை 6:30 - 10:30 மணி; மதியம் 3:30 - 7:00 மணி
தொடர்புக்கு: 98413 63991
அருகிலுள்ள தலம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் 48 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 044 - 2722 2609

