
வெற்றியும் தோல்வியும்
மனநிலையை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று எதிரெதிர் எண்ணங்களை கொண்டது. மற்றொன்று விருப்பமின்றி ஒரு செயலில் ஈடுபடுவது (இரட்டை மனநிலை). இந்த மனநிலைகளை எதிர்கொள்வது எப்படி என அர்ஜூனனுக்கு அறிவுரை சொல்வார் கிருஷ்ணர்.
நல்லவற்றை அடைந்திட நாம் நேர்மையாக செயல் பட்டாலும், நல்ல முயற்சிகள் செய்தாலும் இறுதியில் தீமையே கிடைக்கிறது. மகிழ்ச்சியை எதிர்பார்த்தால் கவலையே கிடைக்கிறது. இது மனிதர்களுக்கு புரியாத சந்தேகம். இதன் காரணத்தை ஆழமாக சிந்திக்காமல் நாம் சரியாக முயற்சி செய்யவில்லையோ என்றும் சில நேரங்களில் நினைக்கிறார்கள்.
என்னால் முடியும் என்ற நம்பிக்கை, மீண்டும் முயற்சி செய்ய துாண்டும். வாழ்க்கையின் பல நேரங்களில் அவ்வாறு நாம் முயற்சிகளை செய்திருக்கிறோம்.
இந்த வெளிப்படையான உலகில் எல்லா நிகழ்வுகளுக்கும் எதிரெதிர் துருவங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் நேர் எதிரான நிகழ்வு உண்டு. பிறப்பு - இறப்பு, மகிழ்ச்சி - கவலை, இன்பம் - துன்பம், நல்லது - கெட்டது, வெற்றி - தோல்வி, லாபம் - நஷ்டம், புகழ்ச்சி - இகழ்ச்சி, விருப்பு - வெறுப்பு, பாராட்டு - பழிச்சொல் இணைதல் - பிரிதல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இதில் ஒன்றை நாம் பின்தொடர்ந்தால் அதற்கு நேரெதிரான நிகழ்வும் பின்தொடரும். ஆனால் எது நிகழும் என நமக்கு தெரியாது.
ஒரு நீளமான கம்பை ஒரு முனையில் பிடிக்கும் போது, எதிர்முனை தானாக உயரும்.ஒரு திசையில் ஊஞ்சல் செல்லும் போது, எதிர்திசைக்கு வரத்தானே அப்படி செல்கிறது என்பதை நாம் அறிவோம்.
கொரோனா கால கொடுமைகளை நாம் அறிந்தோம். அந்த வலிக்கு நிவாரணம் வரும் என எதிர்பார்த்தோம். இப்போது நாம் இயல்பு நிலைக்கு வந்து விட்டோம். இப்படி பல துயரங்கள் முன்பும் நிகழ்ந்திருக்கின்றன. மெய்ஞானத்தாலும், விஞ்ஞானத்தாலும் அதை மனிதன் வென்றிருக்கிறான்.
வாழ்வின் எதிரெதிர் நிலைகளை தாண்டி கடக்குமாறு கிருஷ்ணர் கூறுகிறார். 'நாம் நிகழ்காலத்தில் இருப்பது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் கடந்தது' என்கிறார். பிறர் மீது வெறுப்பு, கோபம் கொள்வதை கடந்து அன்பு, கருணையை காட்ட சொல்கிறார்.
வாழ்வில் எதிரும் புதிருமாக இருக்கும் நிகழ்வுகள் குறித்த தெளிவு நமக்கு வேண்டும். இன்பமும் துன்பமும் மாறக்கூடிய ஒன்று என்ற தெளிவு இருந்தால் போதும்! இந்த பாதையை தான் கீதை காட்டுகிறது.
-தொடரும்
கே.சிவபிரசாத், ஐ.ஏ.எஸ்.,
-- தமிழாக்கம்: ஜி.வி.ரமேஷ் குமார்

