
குற்றாலம் குற்றாலநாதர் - குறும்பலா
கைலாயத்தில் சிவன், பார்வதியின் திருமணத்தைக் காண தேவர்களும், முனிவர்களும் கூடினர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதனை சமப்படுத்த அகத்தியரை தெற்கு நோக்கி சொல்லும்படியும், அங்கு மணக்கோலத்தில் அவருக்கு காட்சியளிப்பதாகவும் சிவபெருமான் உறுதியளித்தார்.
தென்திசையில் உள்ள குற்றாலத்திற்கு அகத்தியர் வந்த போது, அங்குள்ள பெருமாள் கோயிலுக்குள் செல்ல விரும்பினார். திருநீறு பூசிய அவரை கண்ட துவாரபாலகர்கள் தடுத்தனர். வைணவ அடியவர் போல திருமண், துளசி மாலை அணிந்து வந்தபின் அனுமதி அளித்தனர். உள்ளே சென்ற அவர், கருவறையில் இருந்த பெருமாளின் தலை மீது அழுத்த, அச்சிலை சிவலிங்கமாக மாறியது. அப்போது அவருக்கு சிவபெருமான், பார்வதியுடன் திருமண கோலத்தைக் காட்டினார். இன்றும் சுவாமி மீது அகத்தியர் கைகளால் அழுத்திய அடையாளம் உள்ளது. குழல்வாய்மொழி, பராசக்தி என இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. குற்றாலத்தின் புராணப் பெயர் திரிகூடமலை.
சித்த மருத்துவத்துடன் தொடர்புடைய திருத்தலம் குற்றாலம். செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய்யில் சுவாமிக்கு அபிேஷகம் நடக்கிறது. அபிஷேக தைலத்தில் 42 வகை மூலிகைகள், பசும்பால், இளநீர், சந்தனம் சேர்க்கப்பட்டு 90 நாட்கள் நல்லெண்ணெய்யில் ஊற வைத்து தைலம் தயாரிக்கின்றனர். இங்குள்ள மூலவர் மீது அருவி நீர் விழுவதால் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் வராமல் தடுக்க தைலம் பூசப்படுகிறது. சுக்கு, மிளகு, கடுக்காய், மூலிகைகள் சேர்ந்த குடிநீர் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இது பிரசாதமாக தரப்படுகிறது.
நன்னகரப் பெருமாள் என்னும் பெயரில் திருமாலும் இத்தலத்தில் உள்ளார். பலாமரமே இங்கு தலவிருட்சம். ஆர்ட்டோகார்பஸ் கோமோஜியானஸ் (Artocarpus gomezianus) என்னும் தாவரவியல் பெயர் கொண்ட இது மோரேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. இங்குள்ள குறும்பலா அல்லது ஈரப்பலா நீண்ட உருண்டையான பலாப்பழங்களில் சிவலிங்க வடிவ சுளைகள் உள்ளன. ஆண்டு முழுவதும் காய்க்கும் இந்த மரத்தை சுற்றி ஆதி குறும்பலா நாதர் பீடவடிவில் இருக்கிறார். விசேஷ நாட்களில் சுவாமிக்கு பலாச்சுளை நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
அகத்தியர் பாடிய பாடல்
பலாவிலையி லுண்ணப் பதுங்கிநின்ற பித்தங்
குலாவி யெழும்பிக் குதிக்கும் - உலாவிவரு
கன்ம மகோதரநோய் காணா தகலாத
குன்ம மகலும் குறி.
பலா மரத்தின் இலையில் சாப்பிட்டால் வயிற்று புண்கள் மறையும்.
தாகம்போய் வந்தபித்தஞ் சாந்தமாம் ஆடவர்க்குப்
போகம் மிகப்பொழியும் பொய்யன்றே - மூகம்
அலசமந்தங் குன்மமிவை அண்டிவருஞ் சொன்னேன்
கலசப்ப லாப்பிஞ்சுண் காண்.
பலாபிஞ்சு சாப்பிட நாவறட்சி, தாகம் தீரும்.
உண்ணில்மிகு மந்தம் உறுதியாம் வாதநோய்
அண்ணும் இளைப்பிரைப்பும் அண்டுங்காண் -
வண்ணப் பலாக்காய்க்கு விந்துவுமாம் பாரி லுவமை
சொலாக்காம் வாரிதியே சொல்.
பலாக்காய் வாய்வை பெருக்கும். ஆனால் ஆண்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும்.
தித்திக்கும் வாதசி லேத்மபித்தம் உண்டாக்கும்
மெத்தக் கரப்பான் விளைவிக்குஞ் - சத்தியமாய்
சேராப் பிணியையெலாஞ் சேர்க்கும் நொடியில்
பாராய் பலாவின் பழம்.
பலாப்பழத்தை அதிகம் சாப்பிட வயிறுவலி, தோல்நோய் ஏற்படும். பலாக்கொட்டையை சாப்பிட மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்படும்.
தன்வந்தரி பாடிய பாடல்
பித்தமோ டய்யம் வாதம்
பெருத்திடுங் குன்ம ரோகிக்
கெத்தனை நாட்சென் றாலு
மௌளழ வெளிலு மாக
சத்தநோ யான பேர்க்குந்
துற்பில னான போர்க்குங்
சிற்றமாய்ப் பிலாக்காய் கொண்டால்
திரும்பநோய் விரும்புங் காணே!
பலாக்காயை அதிகமாகச் சாப்பிட்டால் வாதம், பித்தம், கபம் நோய்கள் உண்டாகும். உஷ்ணம் அதிகரிக்கும். நோயாளிகள், பலவீனமானவர்கள் பலாக்காய், பழத்தை தவிர்ப்பது நல்லது. பலாப்பழம் சாப்பிடும் போது தேன் சாப்பிடுவது நல்லது.
யானைக்கு மோட்சம் அளித்தவரும், பஞ்ச சபையில் ஒன்றான சித்திரசபையில் நடனமாடுபவரும், தைல அபிேஷகம், கடுக்காய் கஷாயத்தால் மனம் குளிர்பவரும், பலாமரத்தை தலவிருட்சமாக பெற்றவருமான குற்றாலநாதரை(சிவபெருமான்) வணங்குவோம்.
எப்படி செல்வது
* மதுரையில் இருந்து 155 கி.மீ.,
* திருநெல்வேலியில் இருந்து 60 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:30 மணி
தொடர்புக்கு: 04633 - 283 138
-தொடரும்
98421 67567

