ADDED : ஜூலை 02, 2023 09:25 AM

நாம் ஒவ்வொரு கோயிலாக ஏறும்போது மனதில் உள்ள பாரத்தை கடவுளிடம் இறக்கி வைக்கிறோம். அதாவது, 'என் குழந்தைகளின் திருமணத்தை நீ தான் நல்லபடியாக நடத்தி வைக்கணும். நல்ல வேலை வாங்கித்தரணும்' என பல விண்ணப்பங்களை அவரிடம் வைக்கிறோம். இதெல்லாம் எதைக் காட்டுகிறது. நம்பிக்கையின்மை. ஆம்! கடவுள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் இந்த வேண்டுதல் எதுவும் மனதில் உதிக்காது. இந்த நம்பிக்கையை யாரிடம் பெறுவது என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம். அதற்கு பதில் தர காத்திருக்கிறார் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை. அக்கோயிலுக்குள் நுழைந்தால், 'எல்லாம் அவன் செயல்' என்ற பூரண நம்பிக்கை தோன்றும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி, இறுகிப் போயிருக்கும் மலை. பல சித்தர்களின் பாதம் பட்ட இடம் என பல சிறப்புகளை கொண்டிருக்கும் தலம் திருவண்ணாமலை. அந்த மலையின் மகத்துவத்தை சொல்ல இந்த பக்கம் போதாது. வாருங்கள் திருநேர் அண்ணாமலையாரை தரிசனம் செய்வோம். சிறிய கோயிலில் எளிமையாக உள்ளார் அண்ணாமலையார். அவரை பார்த்த நிமிடமே மனதில் புதிய நம்பிக்கை பிறந்துவிடும். இவருக்கு எதிரே மலையின் உச்சியை காணலாம். தமிழ்ப்புத்தாண்டு, ஆவணியில் ஒருநாள் சூரியபகவான் இவருக்கு வணக்கம் தெரிவிப்பார்.
கோயிலின் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போம்.
நமக்கெல்லாம் தாயான பார்வதிதேவிக்கு ஒரு ஆசை தோன்றியது. சிவபெருமான் எப்போதும் தன்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும் என்பதுதான் அது. அதற்கு சிவனது இடப்பாகத்தை தனக்கு தந்தருள வேண்டும் என அவரிடம் முறையிட்டாள். அதற்கு அவர், 'அண்ணாமலைக்கு சென்று தவம் செய்தால், உன் விருப்பம் நிறைவேறும்' என தெரிவித்தார். அவ்வாறு தவம் செய்தும் பார்வதிக்கு காட்சி தரவில்லை சிவன். அப்போது எழுந்த ஒரு அசரீரி, 'மலையை இடது புறமாக சுற்றிவா' என்றது.
அதன்படி மலையை பார்வதி சுற்றி வரும்போது இவ்விடத்தில்தான் அண்ணாமலையார் காட்சி தந்தார்.
எப்படி செல்வது: திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,
விசேஷ நாள்: தமிழ்ப்புத்தாண்டு திருக்கார்த்திகை, பிரதோஷம் பவுர்ணமி
தொடர்புக்கு: 99943 29930
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
அருகிலுள்ள தலம்: அண்ணாமலையார் கோயில் 1 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மதியம் 3:30 - 9:30 மணி
தொடர்புக்கு: 04175 - 252 438, 254 425

