ADDED : ஆக 11, 2023 03:18 PM

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் ஐயாறாப்பா போற்றி போற்றி என சொல்வதை கேட்டிருப்போம். ஏன் என்றால் அசைக்க முடியாத ஆற்றலை தரும் அசலேஸ்வரரான திருவாரூர் சுவாமியை இவ்வாறு போற்றுவர். அது போல ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரிலுள்ள சிவபெருமான் அசலேஸ்வரர் என்ற பெயரில் அருளுகிறார்.
கோயிலின் முகப்பில் இரண்டு யானை சிலைகள் வரவேற்கின்றன. அதனை கடந்து உள்ளே சென்றால் பெரிய கோட்டை வாசல். அதற்கு அடுத்து மூலஸ்தானம். பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கொள்ளையடிக்க வந்தவர்களை சிவபெருமானின் எதிரே உள்ள நந்தீஸ்வரர் தேனீக்களாக மாறி விரட்டினார். சுவாமியின் திருநாமம் அசலேஸ்வரர். இவரின் திருமேனி வடிவமானது காலையில் சிவப்பாகவும், மதியம் காவியாகவும், இரவில் கோதுமை நிறமாகவும் மாறி மாறி காட்சி தருகிறது. (கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநல்லுார் தலத்து சுவாமியும் நிறம் மாறி காட்சி தருவார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.) நிறம் மாறுவதை கண்டறிய முன்பு ஒரு சமயம் லிங்கத்தை சுற்றி என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள அன்றிருந்த நிர்வாகம் முயற்சித்தனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். லிங்கத்தின் அடிப்பாகம் முழுமையும் காண முடியாது என்பதை உணர்ந்த அவர்கள் பயபக்தியுடன் சுவாமியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். திங்கள் தோறும் வில்வமாலை சாற்றி ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகம் பாடி வழிபடுகின்றனர் பக்தர்கள்.
உதவியாளர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்த போது தலையை வெட்டி தண்ணீர் தாகத்தினை தீர்த்து வைத்த சாமுண்டாவின் சிலை இக்கோயில் பிரகாரத்தில் உள்ளது அதிசயம். கருவறைக்கு வெளியே ஒரு இடத்தில் வலது கால் பெருவிரல் போன்ற சிலை உள்ளது அதில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் உறிஞ்சி கொள்ளும். இதுவே சொர்க்கத்திற்கான வழி என்கின்றனர்.
பலரும் ஒன்றிணைந்து பல்வேறு காலகட்டத்தில் சலவைக் கற்களால் ஆன திருப்பணியை இக்கோயிலுக்கு செய்துள்ளனர். மத்தியபிரதேசம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் அசலேஸ்வரர் கோயில் உள்ளது.
எப்படி செல்வது: ஆக்ராவில் இருந்து 55 கி.மீ.,
விசேஷ நாள்: திங்கள் கிழமை பிரதோஷம், மஹா சிவராத்திரி
நேரம்: காலை 7:00 - இரவு 7:00 மணி
அருகிலுள்ள தலம்: மதுரா கிருஷ்ணர் கோயில் 108 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மதியம் 2:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0565 - 242 3888

