ADDED : ஆக 11, 2023 01:57 PM

அமாவாசையில் சித்தர் வழிபாடு செய்வது சிறப்பு. இதுவே அந்நாளில் சித்தர்கள் வழிபட்ட கோயிலுக்கு சென்றால் கோடி புண்ணியம் சேரும்தானே. உங்களுக்கும் புண்ணியம் வேண்டுமா... திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் உள்ள சோமலிங்க சுவாமி கோயிலுக்கு வாருங்கள்.
அரிகேசபர்வதம் என்னும் மலையடிவாரத்தில் கோயில் உள்ளது. துாரத்தில் இருந்து பார்த்தால் ஆதிசேஷன் என்னும் பாம்பு குடை பிடிப்பது போல மலையும், கோயில் அமைந்துள்ள குன்று சிவலிங்கமாகவும் காட்சி தரும். கோயில் வளாகத்தில் வேம்பு, வில்வ மரத்தடியில் விநாயகர் இருக்கிறார். ஆனால் இவருக்கு எதிரே நந்தி இருப்பது விசேஷம். பாறையை ஒட்டி சிறிய சன்னதியில் சோமலிங்கசுவாமி அருள்பாலிக்கிறார். அருகில் அகத்தியர் உருவாக்கிய வேதி தீர்த்தம் இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதில் மூலிகைகள் கலந்து உள்ளதால் பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் சித்தர்களான மெய்கண்டர், குண்டலினி, வாழையானந்தர், முத்தானந்தர் ஆகியோர் இங்கு வந்தனர். தங்களுக்கு சிவபெருமானின் அருள் கிடைக்கவும் சித்துக்கள் கைகூடவும் தவம் செய்ய விரும்பினர். இதற்கு ஏற்றாற்போல் இந்தப் பகுதியும் அமைந்தது. உடனே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் செய்ய ஆரம்பித்தனர். சிவபெருமானும் இவர்களுக்கு வேண்டிய வரங்களை தந்தருளினார். இப்படி இந்த சித்தர்கள் கைப்பட உருவானவர்தான் சோமலிங்கசுவாமி.
இவரது சன்னதிக்குப் பின்புறம் மெய்கண்டார் தவம் செய்த குகை உள்ளது. பாறையில் இயற்கையாக அமைந்த இக்குகை பார்ப்பதற்கு தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப் போல காட்சி தருகிறது. பக்தர்கள் தங்களது மனம் ஒரு நிலைப்பட இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்கின்றனர். மற்ற மூன்று சித்தர்கள் தவம் செய்த குகைகள், இந்த மலையின் உச்சியில் உள்ளது. பழநியில் முருகப்பெருமானுக்கு நவபாஷாண சிலை வடித்த போகர் சித்தரும் இங்கு தவம் செய்துள்ளார். திருமணத்தடை, மாங்கல்ய தோஷம், பூர்வஜென்ம தோஷம் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம்.
எப்படி செல்வது:
* திண்டுக்கல்லில் இருந்து 21 கி.மீ.,
* கன்னிவாடி, அங்கிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் 3 கி.மீ.,
விசேஷ நாள்: சித்ரா பவுர்ணமி ஆடி அமாவாசை, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை பிரதோஷம்
தொடர்புக்கு: 99769 62536
நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணி
அருகிலுள்ள தலம்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் 44 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94444 02440, 0451 - 242 7267

