
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி - தொரட்டி மரம்
சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத்த போது அதன் சிகரங்களில் ஒன்று பூமியில் விழுந்தது. அதுவே திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சிவன்மலையாக உள்ளது.
சித்தரான சிவவாக்கியர் இங்கு கோயில் கட்டினார். மலையின் அடிவாரத்தில் பட்டாளி வெண்ணீஸ்வரர் என்னும் பெயரில் சிவனும், மலை மீது வெண்ணீஸ்வரர் பாலன் என முருகனும் கோயில் கொண்டுள்ளனர். மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில் உள்ள இந்தக் கோயிலுக்கு சிவமலை, சிவசைலம், சிவமாமலை, சிவகிரி, தவசுபுரி, பட்டாளியூர் என்றும் பெயருண்டு.
அருணகிரிநாதர் மூன்று திருப்புகழ் பாடல்களை இங்கு பாடியுள்ளார். பிரகாரத்தில் உள்ள குகையில் சிவவாக்கியர் அமர்ந்திருக்க வள்ளியுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.
அந்தக் காலத்தில் காங்கேய நாட்டின் தலைநகராக சிவன்மலை இருந்தது. இங்கு சிவவாக்கியர் அரூப வடிவில் இருக்கிறார். நோய்களைப் போக்குபவராக அம்மன் சுரலோக நாயகி, சிவன் சுரகரேஸ்வருடன் அருள்புரிகின்றனர். சுவாமிக்கு மிளகு ரசம் படைத்து வழிபடுகின்றனர்.
பார்வதி ஒருமுறை நடனமாடிய போது அவளின் காலில் அணிந்த சிலம்பில் இருந்து நவரத்தினங்கள் சிதறின. அதில் இருந்து நவகன்னியர் தோன்றினர். அவர்களிடம் இருந்து முருகனின் படைத்தளபதிகளான நவவீரர்கள் பிறந்தனர். இதனால் இத்தலம் வீரமாபுரம் என பெயர் பெற்றது. இத்தலத்தில் வழிபட்டால் நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும். திருமணத்தடை, குழந்தையின்மை, தொழில் பாதிப்பு, உடல்நலக்குறைவு போன்ற பிரச்னைகள் மறையும்.
இங்கு தலவிருட்சம் தொரட்டி மரம். இரட்டை மரங்களாக பிணைந்து காணப்படும் இம்மரம் முள்ளுடன் இருக்கும்., ஆண் மரத்தை தொரட்டி என்றும், பெண் மரத்தை கருஞ்சூரை, சூரை, கத்தாரி, செங்கத்தாரி என்றும் அழைப்பர். கெப்பாரேசியே குடும்பத்தைச் சேர்ந்தது இது.
கெப்பாரிஸ் டைவரிகட்டா (Capparis divaricata) கெப்பாரிஸ் டெசிடிவா (Capparis decidua) என்னும் தாவரவியல் பெயர்களைக் கொண்ட தொரட்டி, செங்கத்தாரி மரங்களின் பட்டை, வேர்கள், ஜுரம், தோல் நோய், ஒவ்வாமையை போக்கும்.
சிவமலைக் குறவஞ்சி பாட்டு
அந்த மேரை ஈசன் திரிபுர சம்ஹாரம்
செய்ய வளைக்குங் காலை
முந்து கொடுமுடியுள் ஒன்று சிந்தி இங்கு
வந்த சிவமலை இம்மலையே
மேரு மலையை சிவன் வளைக்கும் போது அதில் ஒரு துண்டு விழுந்து சிவன்மலை தோன்றியது.
சிவன்மலை திருப்புகழ்
இருகுழை யிடறிக் காது மோதுவ
பரிமள நளினத் தோடு சீறுவ
இணையறு வினையைத் தாவி மீளுவ வதிசூர
எமபடர் படைகெட் டோட நாடுவ
அமுதுடன் விடமொத் தாளை யீருவ
ரதிபதி கலைதப் பாது சூழுவ முநிவோரும்
உருகிட விரகிற் பார்வை மேவுவ
பொருளது திருடற் காசை கூறுவ
யுகமுடி விதெனப் பூச லாடுவ வடிவேல்போல
உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்
மயல்தரு கமரிற் போய்வி ழாவகை
உனதடி நிழலிற் சேர வாழ்வது மொருநாளே
முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
மரகத கிரணப் பீலி மாமயில்
முதுரவி கிரணச் சோதி போல்வய
லியில்வாழ்வே
முரண்முடி யிரணச் சூலி மாலினி
சரணெனு மவர்பற் றான சாதகி
முடுகிய கடினத் தாளி வாகினி மதுபானம்
பருகினர் பரமப் போக மோகினி
அரகர வெனும்வித் தாரி யாமளி
பரிபுர சரணக் காளி கூளிகள் நடமாடும்
பறையறை சுடலைக் கோயில் நாயகி
இறையொடு மிடமிட் டாடு காரணி
பயிரவி யருள்பட் டாலி யூர்வரு பெருமாளே.
என பாட்டாலியூர் முருகனின் பெருமையைப் போற்றுகிறது திருப்புகழ்
சித்தர் தேரையர் பாடிய பாடல்
செங்கத்தா ரிச்சடைக்குத் தீராத வன்மேகம்
பொங்கி வருங்கிரந்திப் புண்புரைகள் -
தங்குகின்ற
சந்நிகசி லேஷ்மந் தனித்த மகாவாத
முந்திவிட் டோடு மொழி.
தோல் நோய்கள், ஜன்னி, வாதம், கப நோய்களில் இருந்து கருஞ்சூரை நம்மை விடுவிக்கும். இதன் பட்டையிலிருந்து தயாராகும் செங்கத்தாரி தைலம், கரப்பான் தைலம் ஆகியன நோய் தீர்க்கும் அரிய மருந்து.
தோல் நோய்களை போக்கும் குணம் பெற்ற தொரட்டி, வேப்ப மரங்கள் ஒன்றாக இணைந்து வளரும். கோவை தண்டுமாரியம்மன் கோயில், கோட்டைகாரம்மன் கோயில், சிவகங்கை கொடுங்குன்றம் கொடுங்குன்ற நாதர் கோயில்களில் தலவிருட்சம் தொரட்டி. காலரா, அம்மையில் இருந்து நம்மை விடுவிக்கும் வேம்பு, தொரட்டி மரங்களை தலவிருட்சமாக கொண்ட இக்கோயிலை வழிபட்டு உடல்நலம் பெறுவோம்.
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567
jeyavenkateshdrs@gmail.com

