ADDED : ஜூன் 22, 2023 11:43 AM

முக்காலத்திலும் மக்கள் ஒழுக்கநெறியோடு வாழ வேண்டும் என வரையறுத்து அம்முறைகளை வழங்கியுள்ளது நான்கு வேதங்கள். எடுத்துக்காட்டிற்கு சத்யம் வத, தர்மம் சர என்பது வேத வாக்கு. இந்த ஒரு வரிகளின் விரிவாக்கம் தான் இதிகாசங்களும் புராணங்களும். பாரத தேசத்தின் புகழ் பெற்ற இதிகாசங்களில் ஒன்று ராமாயணம் என்பது அனைவரும் தெரியும். இந்தியாவில் ராம சகோதரர்கள் நால்வருக்கு ஒரே இடத்தில் கோயில் உள்ளது தெரியுமா உங்களுக்கு...
உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூனுக்கு அருகிலுள்ள ஒரு ஆன்மிக நகரம் ரிஷிகேஷ். பழங்காலத்தில் இருந்து ஞானிகளும் யோகிகளும் வந்து தவம் செய்யும் புண்ணிய தலம் இது. கங்கை ஆற்றின் வலது கரையில் தான் ராமனுடைய சகோதரர்கள் நால்வரும் ஆளுக்கொரு இடத்தை தேர்ந்தெடுத்து தவம் செய்து சூரியபூஜை செய்தனர். அதனை போற்றும் விதமாக ஆதிசங்கரர் இக்கோயில்களை நிறுவியுள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி கட்டத்தில் அமைந்துள்ள ராமர் கோயிலுக்கு எதிரே உள்ள தெப்பக்குளத்தில் நீராடி ரகுநாதரை சீதா தேவியுடன் தரிசனம் செய்யலாம். ரிஷிகேஷ் தபோவனத்தின் அருகில் லட்சுமணர் கோயிலையும் தரிசிக்கலாம். உயர்ந்த கோபுரங்களுடன் காட்சி தரும் பரதன் கோயில் அருகே அருங்காட்சியகம் ஒன்று காணப்படுகிறது.
சத்ருக்னன் கோயிலில் ஆதிபத்ரி நாராயணன் சன்னதி உள்ளது. சிவானந்த ஆசிரமம் முனு கீரதி என்ற இடத்தில் உள்ளது. நால்வரும் மூலஸ்தானத்தில் சலவை கற்திருமேனியில் காட்சி தருகின்றனர். கோயில்களில் உள்ள துாண்கள் சுவர்களில் ராமாயணம் தொடர்பான சிற்பங்களும் ஓவியமும் காணப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் 1893க்கு பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டன. முருகப்பெருமான் கந்தபுராணத்தில் கூறப்படும் 'இந்திரகுண்ட்' என்னும் இடம் இங்கு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கங்கையில் நீராடி ராம சகோதரர்களை தரிசித்தால் வாழ்வில் உயர்வடைவது நிச்சயம். இமயமலையின் நுழை வாயில் என்றும், யோகா மையத்தின் தலைநகரம் என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது.
ஒரு முறையேனும் ராம சகோதரர்கள் கோயிலை தரிசித்து வரலாம்.
எப்படி செல்வது: ஹரித்துவாரில் இருந்து 24 கி.மீ.,
விசேஷ நாள்: தமிழ் புத்தாண்டு ராமநவமி, அனுமன் ஜெயந்தி சனிக்கிழமை
நேரம்: காலை 7:00 - மாலை 6:30 மணி
தொடர்புக்கு: 094120 59678; 0135 - 243 0053
அருகிலுள்ள தலம்: ஹரித்துவார் ஹரி இ பாரி விஷ்ணு பாதம்
நேரம்: 24 மணி நேரமும் திறந்திருக்கும்
தொடர்புக்கு: 01334 - 224 278

