
''சவுரிராஜப்பெருமாள் வீற்றிருக்கும் திருக்கண்ணபுரத்தின் பெயரைச் சொன்னாலே போதும், கவலை அனைத்தும் தீரும்,'' என்கிறார் நம்மாழ்வார். 'இல்லை யலல் எனக்கேல் இனியென்குறை' என்றும் 'திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே' என்றும் திருவாய்மொழி பாசுரத்தில் இத்தலத்தைப் போற்றுகிறார். 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் மொத்த உருவமாகப் பெருமாள் இங்கு வீற்றிருக்கிறார். ''தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் யுகம் தோறும் நான் அவதரிப்பேன்,'' என்று கிருஷ்ணர் கீதையில் சொன்ன சொல்லை மெய்ப்பிக்கும் விதத்தில், சவுரிராஜராக வீற்றிருக்கிறார். 'சவுரி' என்றால் 'கூந்தல்' என்பது மட்டுமல்ல. 'யுகம்தோறும் அவதாரம் எடுப்பவன்' என்றும் பொருள் உண்டு. தலம், வனம், நதி, மண்டபம், நகரம், தீர்த்தம், விமானம் என்னும் ஏழு லட்சணங்களும் கொண்டதால் 'சப்தாமிருத ÷க்ஷத்திரம்' என்று சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு.

