என் மகன்களை பார்த்தால் டென்ஷன் பறந்து போகுது : தனுஷ் உருக்கம்
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோர் நடிப்பில் ஏப்., 30க்கு திரைக்கு வரும் படம் ‛கர'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னையில் நேற்று நடந்த கர படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவன்ட்டில் நடிகர் தனுஷ் பேசியது,
''கடந்தமுறை பங்க் ஹேர்ஸ்டைல் வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தீர்கள். அதை இந்த முறை நிறைவேற்றி உள்ளேன். நான் பேசும்போது நீங்க கேட்டு கிட்டே இருப்பீங்க. அதனால முதலில் சொல்லி விடுகிறேன். வட சென்னை 2 வரும். சீக்கிரமாக, சத்தமாக வரும். நீங்க நினைத்தை விட பக்கத்தில் வந்துவிடும். ஜெயிப்பதற்கு முதலில் சண்டை செய்யணும்
நாம ஜெயிக்க கடவுள் ஆசீர்வாதம் தேவை. எனக்கு அது இருக்கிறது. நல்ல விஷயங்கள் என்னை தேடி வருகிறது. பெரிதாக படிப்பில் ஆர்வம் இல்லை. எனக்கு 10ம் வகுப்பு வரை நல்லா படிப்பு வந்தது. நான் எந்த இயக்குனரையும் தேடி வாய்ப்பு கேட்டது இல்லை. ஆனா, நல்ல படங்கள் கிடைத்தது. எனக்கு நிறைய நண்பர்கள் கிடையாது. ஆனால், என் சகோதரிகள், அவர்களின் கணவர்கள், என் மகன்கள், ரசிகர்கள் என நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.
கர தலைப்பு பற்றி
கர என்ற படத்தின் தலைப்பு குறித்து நிறைய விமர்சனங்கள் வந்தது. இது செட் ஆகுமா என இயக்குனர் கேட்டார். நான் கண்டிப்பாக படம் ஹிட்டாகும் என்றேன். எப்படி என்றார், இதற்கு முன்பு வேலையில்லா பட்டதாரி படத்தின் தலைப்புக்கு இப்படிப்பட்ட மிக்ஸ்டு விமர்சனங்கள் வந்தது, ஆனா படம் ஹிட்டானது. அந்த படத்தை பார்த்தவர்கள் எதுவும் இல்லை. படத்தை டிராப் பண்ணிடுங்க என்றார்கள். ஆனால் படம் ஹிட்டானது. அந்த மாதிரி திருச்சிற்றம்பலம் படத்தின் தலைப்புக்கும் விமர்சனங்கள் வந்தன. எல்லாரும் அதை மாத்திடுங்க என்றார்கள். நான் மாத்தமாட்டேன். அந்த படமே எனக்கு தேவை இல்லை என்றேன். படம் ஹிட். அந்த மாதிரி கரயும் ஹிட்டாகும். ஏன் இந்த தலைப்பு என்பதை படம் பார்த்தால் புரியும்.
இந்த படத்தின் தலைப்பை இயக்குனர் விக்னேஷ் ராஜா மனைவி வைஷ்ணவி '1001முறை' ஒரு பேப்பரில் எழுதியிருக்கிறார். ஸ்ரீராமஜெயம், ஓம் நமச்சிவாய மாதிரி எழுதினார். இப்படி எழுதினால் ஜெயிக்கும் என நம்பினார். அந்த மனசுக்கு இந்த படம் ஹிட்டாகும். எண்ணம் போல வாழ்க்கை. சஞ்சு சாம்சன் மாதிரி இயக்குனர் அமைதியாக கலக்குவார்.
நேரம் நல்லா இருக்கு
பணம் சம்பாதிக்க சினிமா எடுக்கவில்லை ஐசரி கே கணேஷ் வரவில்லை. அவருக்கு இது 25வது படம். எனக்கும் 25வது படத்துக்கும் நல்ல ராசி உண்டு. அவர் குழந்தை மாதிரி. நமக்கு நேரம் நல்லா இருக்காவிட்டால் தப்பான ஆட்களை சந்திப்போம், அவங்க குறுக்கீடு இருக்கும். நல்ல நேரம் இருந்தால் நல்ல ஆட்களை சந்திப்போம், அவங்க சொல்லை கேட்போம். இப்ப, விக்னேஷ் ராஜா, இயக்குனர் சேகர்கம்முலா, ஐசரி கணேஷ் என நல்ல ஆட்களை சந்திக்கிறேன். நேரம் நல்லா இருக்குது.
எனக்குள்ள இருக்கிற இசை ரசனையை வெளியே கொண்டு வருபவர் ஜி.வி.பிரகாஷ். நான் ஆர்வக்கோளாறு காரணமாக எதையாவது செய்தாலும், அவர் தடுத்தது இல்லை. அவர் உற்சாகம் கொடுப்பார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டியது, அது நடக்கவில்லை. அவர் என் இயக்கத்தில் நடிப்பார். இந்த படத்தில் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. 2003ல் ஒரு இடத்தில் அவரை பிரமிப்புடன் பார்த்தேன். அவருடன் இணைந்தது நடித்த ரொம்ப சந்தோஷம்
சுராஜ் வெஞ்சரமுடு இயக்கத்தில் வேறு சிலர் நடிக்க வேண்டியது. அது நடக்கவில்லை. இந்த படம் பார்த்தபோது யார் நடித்தாலும் இவரை மாதிரி நடிக்க முடியாது என தோன்றியது. அவர் காமெடி, பேச்சு அருமையாக இருக்கும்.
இந்த பட ஹீரோயின் மமிதா பைஜூவுக்கு நல்ல கேரக்டர். இதற்கு முன்பு நித்யா மேனனிடம் ஒரு வித உற்சாகத்தை திறமையை பார்த்து இருக்கிறேன். அதை இப்போது மமிதாவிடம் பார்க்கிறேன். இந்த வயதில் நான் அப்படி நடிக்க மாட்டேன், அம்மாவாக நடிக்க மாட்டேன். கிராமத்து பெண்ணாக நடிக்க மாட்டேன் என்பார்கள். ஆனால், அதை தவிர்த்து இதில் சிறப்பாக நடித்து இருக்கிறார்
எனக்கு பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் எல்லாமே ரசிகர்களை சந்திக்கிற இந்த நாள்தான். கர சாமி படம் மாஸ், கிளாஸ், ஹீரோ படம் மட்டுமல்ல, இது இன்டர்நேஷனல் படம். ரசிகர்கள் நல்லபடியாக வீட்டுக்கு போகணும். உங்க குடும்பத்தை நல்லா பார்த்துக்கோங்க, என்னை பைக்கில் பாலோ பண்ணாதீங்க.
இப்ப ரசிகர்கள் டெஸ்ட் மாறிவிட்டது. இன்டர்நேஷனல் லெவலில் எதிர்பார்க்கிறார்கள். அதனால், பெஸ்ட் ஆக கொடுக்கணும் என்பது என் எண்ணம். எனக்கு டார்க்கெட் என எதுவும் இல்லை. நான் போயஸ்கார்டனில் வீடு வாங்கக்கூடாது என்று பேசினேன். அதை பலர் பாசிட்டிவ் ஆக எடுத்தார்கள். சிலர் மீம்ஸ் போட்டார்கள். எல்லாவகையிலும் நான் கலைஞனாக சந்தோஷப்படுத்த வேண்டும் என் நினைக்கிறேன். மீம்ஸ் போடுபவர்கள் மனதில் வன்மம் இருக்காது. அவர்களும் மற்றவர்களை சந்தோஷப்படுத்துகிறார்கள்.
2010ம் ஆண்டு மறக்க முடியாது. அன்றைக்குதான் என் மகன் லிங்கா பிறந்தான். அந்த ஆண்டு ஒரு தேசிய விருது கிடைத்தது. அவன் முகத்தை, யாத்ரா முகத்தை பார்த்தால் எனக்குள் இருக்கும் டென்ஷன் ஓடிவிடும். அந்த பவர் அவங்ககிட்ட இருக்கும். என் உலகம் அவங்கதான். நான் கரடுமுரடான ஆள் தான், யாத்ராவை துாக்கியதும் அந்த குணம் மாறிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.