பிளாஷ்பேக்: கரகாட்டக்காரனை கவிழ்த்த கங்கை அமரன்
ராமராஜன், கனகா நடித்து, இளையராஜா இசையமைத்து, கங்கை அமரன் இயக்கிய 'கரகாட்டக்காரன்' திரைப்படம் 1989ம் ஆண்டு ரிலீசானது. படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக, ரிப்பீடட் ஆடியன்ஸ் கைத்தட்டி, ஆரவாரித்துக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். பல ஊர்களில் 200 நாட்களைக் கடந்தும் மதுரை, சென்னையில் 350 நாட்களைக் கடந்தும் ஓடிய இந்தப் படம், தமிழ் சினிமாவில் மைல்கல் படங்களில் ஒன்று.
இந்த படம் சுமார் 20 லட்சம் பட்ஜெட்டில் தயாரானது. கோடிகளை வசூலாக குவித்தது. ஆனால் படத்தை தயாரித்த கருமாரி கந்தசாமிக்கு பெரிய லாபம் இல்லை. கடைசி வரை கடனாளியாகவே வாழ்ந்தார். இதற்கு காரணம் கங்கை அமரன்.
இந்த படத்திற்கு முன்பு அவர் 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தை இயக்கி இருந்தார். அர்ஜுன், சீதா, நடித்த இந்த படம் பெரும் தோல்வி அடைந்தது. இதனால் அவரது மார்க்கெட் சரிந்திருந்தது. படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் படம் நன்றாக இருக்கிறது, பாட்டு நன்றாக இருக்கிறது, காமெடி நன்றாக வந்திருக்கிறது. ஆனால் கங்கை அமரன் இயக்கி இருப்பதால் மினிமம் கியாரண்டி இல்லை என்று வாங்கத் தயங்கினார்கள்.
ஒரு வழியாக மிக குறைந்த விலைக்கு கரகாட்டக்காரன் விற்கப்பட்டது. தயாரிப்பாளருக்கு சில லட்சங்கள் லாபம் கிடைத்தது. ஆனால் வாங்கிய விநியோகஸ்தர்கள் 10 மடங்கு வரை அதிக லாபம் பெற்றனர். தொலைக்காட்சி உரிமம், பாடல் கேசட் உரிமம் போன்றவற்றால் சிறிய லாபத்தை பெற்றார் தயாரிப்பாளர்.