வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
தியேட்டர்களில் ஏற்பட்டுள்ள சதவீத பிரச்னை, ஓடிடி நிறுவனங்களுக்கு 8 வாரங்களுக்குப் பிறகே படங்களைத் தர வேண்டும் என்ற பிரச்னை என தென்னிந்தியத் திரையுலகம் கடந்த சில வாரங்களாக சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தின. அந்த சங்கத்தின் முதல் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது ஓடிடி தளங்களுக்கு 8 வாரங்களுக்குப் பிறகே படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற தியேட்டர்காரர்களின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
நேற்று அந்த சங்கத்தின் இரண்டாவது கூட்டம் மீண்டும் ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது “தயாரிப்பு செலவுகள், திரையரங்கு வெளியீட்டு அமைப்பு, ஓடிடி வெளியீட்டு காலவரையறை, தொழிலாளர் ஒத்துழைப்பு, திரைப்பட நிதி நிலைத்தன்மை, தென்னிந்திய அளவிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.
வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு திரைப்பட உரிமைகள் வாங்குபவர்கள் உள்ளிட்டவர்களுடனான ஒத்துழைப்பின் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த சங்கத்தின் அடுத்த கூட்டம் ஜூன் 13ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.