விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல்
தமிழ்த் திரையுலகத்தில் உச்ச நடிகராக இருந்தவர் விஜய். அரசியலில் இறங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்த பின் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தார். அவரது நோக்கம் தமிழக சட்டசபைத் தேர்தலாக மட்டுமே இருந்தது.
அதன்படியே நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அவரது கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக இருந்தது. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சில கட்சிகள் அவர் ஆட்சியமைக்க உதவுவதாக அறிவித்தன. அதனால் நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
நேற்றைய பதவியேற்பு விழாவில் விஜய்யின் திரையுலக நண்பர்கள் சிலர் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகை த்ரிஷா கலந்து கொண்டது அதிக கவனத்தை ஈர்த்தது. தேசிய அளவில் உள்ள ஊடகங்கள் பலவும் இது குறித்து செய்திகளை வெளியிட்டன.
த்ரிஷா தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும் அவரையும், விஜய்யையும் இணைத்து பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு காலம்தான் பதில் சொல்லும்.
த்ரிஷாவும் தனது அரசியல் ஆசை குறித்து எப்போதோ அளித்த ஒரு டிவி பேட்டியில் பேசியதும் கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது.
இதனிடையே, விஜய்யிடம் விவாகரத்து கேட்டிருக்கும் அவரது மனைவி சங்கீதா, அவரது மகன், மகள் ஆகியோர் நேற்றைய விழாவில் கலந்து கொள்ளாமல் போனது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக உள்ளது.