உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: அண்ணாதுரை திரைக்கதை வசனகர்த்தாவாக, என் எஸ் கிருஷ்ணன் நாயகனாக அறிமுகமான “நல்ல தம்பி”

பிளாஷ்பேக்: அண்ணாதுரை திரைக்கதை வசனகர்த்தாவாக, என் எஸ் கிருஷ்ணன் நாயகனாக அறிமுகமான “நல்ல தம்பி”


1947ம் ஆண்டு நடிகர் என் எஸ் கிருஷ்ணன் தயாரிப்பில் வெளிவந்த “பைத்தியக்காரன்” என்ற திரைப்படத்தின் வெற்றிக்குப் பின், அவரே கதாநாயகன் வேடம் தரித்து, தயாரித்து வெளியிட்ட ஒரு திரைப்படம்தான் “நல்லதம்பி”. 1936ம் ஆண்டு வெளிவந்த “மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டூ டவுன்” என்ற ஆங்கில திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் கதையை நடிகர் எஸ் வி சகஸ்ரநாமமும், இயக்குநர் கிருஷ்ணனும் உருவாக்கினர். அன்றைய நாளில் அரசியலில் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருந்த சி என் அண்ணாதுரை இந்தப் படத்திற்கு வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என நடிகர் சகஸ்ரநாமம் ஆலோசனை கூற, அதன்படி வசனகர்த்தாவாக சி என் அண்ணாதுரையும் நியமிக்கப்பட்டார்.

திரைக்கதை வசனம் சி என் அண்ணாதுரை எம் ஏ என்று டைட்டிலில் போடப்பட்டு வெளிவந்த முதல் திரைப்படம்தான் இந்த “நல்லதம்பி”. சார்லி சாப்ளின் ஹீரோவாக நடித்து வெளிவந்த பல ஆங்கில திரைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்த நடிகர் என் எஸ் கிருஷ்ணனையும் ஒரு கதாநாயகனாக நடிக்க வைத்து பார்த்துவிட வேண்டும் என ஆசை கொண்டிருந்த இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன்-பஞ்சுவின் ஆசையும் இத்திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. “நல்லதம்பி” என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் நாயகனாக நடிகர் என் எஸ் கிருஷ்ணனும், தோழியாக டி ஏ மதுரமும், புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பி பானுமதியும், பூபதியாக நடிகர் எஸ் வி சகஸ்ரநாமமும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் மூலம் என் எஸ் கிருஷ்ணனின் பல ஆசைகள் பூர்த்தி ஆனது எனலாம். தேசத்தில் அப்போது பேசப்பட்டு வந்த ஜமீன் ஒழிப்புப் பிரசாரத்திற்கான கதை, மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கான ஒரு தெருக்கூத்து, காந்திஜியின் தீண்டாமை ஒழிப்புக்காக “கிந்தனார் கதாகாலட்சேபம்”, வளர்ந்து வரும் திராவிட இயக்கத்தாருக்காக அண்ணாவின் வசனம் என முழுக்க, முழுக்க என் எஸ் கிருஷ்ணனின் ஆசைகளை நிறைவேற்றிய அவரது படமாகவே இருந்ததுதான் இந்த “நல்லதம்பி”. உடுமலை நாராயண கவி மற்றும் கே பி காமாட்சி ஆகியோர் பாடல்கள் எழுத, சி ஆர் சுப்பராமனின் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன. “நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தானய்யா”, “விஞ்ஞானத்த வளர்க்கப் போறேன்டி” போன்ற படத்தின் பல பாடல்கள் அன்றைய ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.

அண்ணாதுரைக்குப் பிடித்தமான உலகப் பேரழகி கிளியோபாட்ரா நாட்டிய நாடகமும் இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. கிளியோபாட்ராவாக நடித்திருந்தவர் நடிகை பி பானுமதி. இத்தனை சிறப்பம்சங்களோடு 1949ம் ஆண்டு இரட்டை இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம், என் எஸ் கிருஷ்ணனின் முந்தைய திரைப்படமான “பைத்தியக்காரன்” பெற்ற வெற்றியைப் பெறத் தவறியது துரதிர்ஷ்டமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !