37 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டலில் ரீ-ரிலீஸ் ஆகும் 'கிரீடம்'
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான சிறந்த கல்ட் கிளாசிக் படங்களை பட்டியலிட்டால், அதில் பத்து படங்களுக்குள் 'கிரீடம்' படத்திற்கு ஒரு இடம் கட்டாயம் இருக்கும். கடந்த 1989ல் சிபி மலயில் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கிரீடம் படம் வெளியானது. மறைந்த இயக்குனர் லோகிததாஸ் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியிருந்தார். போலீஸ் வேலைக்கு முயற்சிக்கும் இளைஞன் ஒருவன், ரவுடியுடன் ஏற்படும் திடீர் மோதலால் கடைசி வரை ரவுடியாகவே சித்தரிக்கப்படுவதுதான் இப்படத்தின் கதை. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேலாக ஓடிய இந்த படத்தில் திலகன், பார்வதி, ஜெயராம், கொச்சின் ஹனீபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தற்போது இந்த படம் வெளியாகி சரியாக இன்றைய தேதியில் (ஜூலை 7) 37 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு தற்போது இந்த படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு, வரும் ஜூலை 10ம் தேதி கேரளாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. படம் வெளியான சமயத்தில், கிளைமாக்ஸ் மிகவும் சோகமாக இருப்பதால் வணிக ரீதியாக வெற்றி பெறுமா என்கிற சந்தேகம் சிலருக்கு இருந்தது. அதனால் கிளைமாக்ஸை மாற்றச் சொல்லியும் சிலர் வலியுறுத்தினார்கள். ஆனால் கதாசிரியர் லோகிததாஸ் இந்த கதைக்கு இதுதான் சரியாக இருக்கும் என உறுதியாக நின்றார். கடைசியில் அவரது நம்பிக்கை மக்களிடம் வெற்றி பெற்றது.