ஷாருக்கானால் கைவிடப்பட்ட படம் அமீர்கானுக்கு மாறியதா?
சித்தாரே ஜமீன் பர் படத்தை தொடர்ந்து, தனது அடுத்த புதிய படமான லர்கார் படத்தில் பணியாற்ற தயாராகி வருகிறார் அமீர் கான். இந்திய கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தை அசுதோஷ் கோவாரிகர் இயக்கவுள்ளார்.
இதில் முதலில் ஷாருக்கான் தான் நடிப்பதாக இருந்தது. ராஜ்குமார் ஹிரானி இயக்க இருந்தார். இருப்பினும், கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்தப்படம் அப்போது சாத்தியமாகவில்லை. இப்போது இப்படம் அமீர் கானை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு தயாராக உள்ளது. லர்கார் படத்தின் எழுத்தாளராக ராஜ்குமார் ஹிரானியின் பெயர் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. பர்ஹான் அக்தரின் எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய சினிமாவின் மிகச்சிறந்த விளையாட்டு படமான லகான் வெளியாகி சரியாக 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அமீர் கான் மற்றும் இயக்குனர் அசுதோஷ் கோவாரிகர் மீண்டும் ஒரு கிரிக்கெட் பின்னணி கொண்ட படத்திற்காக இணைந்துள்ளனர்.
இது வெறும் சாதாரண பயோபிக் படமாக இல்லாமல், 1947ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த வரலாற்று நிகழ்வுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட படைப்பாகவும் உருவாகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கிரிக்கெட் கேப்டனான லாலா அமர்நாத் தலைமையில், 1952ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியைச் சுற்றி இதன் கதை நகர்கிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பர்ஹான் அக்தர், இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பிரிவினைக்கு முன்பு லாலா அமர்நாத்தின் நெருங்கிய நண்பராக இருந்த ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் பாத்திரத்தில் அவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1952 டெஸ்ட் தொடர் வெற்றியின் 75வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, 2027 டிசம்பர் மாதத்தில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.