எம்ஜிஆருக்கு 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்', விஜய்க்கு 'ஜனநாயகன்'
சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்றவர்களில் முதல் முறையாக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து சாதனை புரிந்தவர் எம்ஜிஆர். 1977ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அவர் முதல்வராகப் பதவியேற்றார். அதன்பிறகு அவர் நடித்த 'மீனவ நண்பன்' படம் 1977 ஆகஸ்ட் 14ம் தேதியும், 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் 1978 ஜனவரி 14ம் தேதியும் வெளியாகின. இரண்டு படங்களுமே அவர் முதல்வர் ஆவதற்கு முன்பே படப்பிடிப்பு முடிந்த படங்கள். சில காரணங்களால் அவை தாமதமாகி அவர் முதல்வர் பதவியேற்ற பின்பு வெளியாகின.
எம்ஜிஆரை விடவும் அதிக ஓட்டு சதவீதத்தைப் பெற்று இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஆகப் பதவியேற்றவர் நடிகர் விஜய். எம்ஜிஆருக்கு அடுத்து எத்தனையோ நடிகர்கள் அரசியலில் இறங்கினாலும் அவருக்கு அடுத்து முதல்வராகும் வாய்ப்பு விஜய்க்கு மட்டும்தான் கிடைத்துள்ளது.
விஜய் முதல்வர் ஆவதற்கு முன்பாகவே அவர் கடைசியாக நடித்த 'ஜனநாயகன்' படம் வந்திருக்க வேண்டும். ஆனால், தணிக்கை சான்றிதழ் பிரச்னை காரணமாக ஆறு மாத தாமதத்திற்குப் பின் நாளை ஜூலை 23ல் வெளியாகிறது.
எம்ஜிஆர் முதல்வராகப் பதவியேற்ற பின்பு வெளிவந்த 'மீனவ நண்பன்' படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. கடைசி படமாக வந்த 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் தோல்வியைத் தழுவியது. அவர் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் என்ற பெருமை மட்டும் இப்படத்திற்கு உண்டு.
விஜய்யின் கடைசி படமான வர உள்ள 'ஜனநாயகன்' எப்படி அமையப் போகிறது என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.