ரஜினி வந்து என்னை பார்த்தபோது... : எச்.ராஜா சொன்ன தகவல்
டாக்டர் எஸ்.ராஜா இயக்கியுள்ள, ‛செய் செய்யாதே' படத்தில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா முதல்வராக நடித்துள்ளார். சென்னையில் நடந்த இந்த பட பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது :
என்னை பார்த்து டாக்டர் சொல்ற முதல் வார்த்தை 'இவ்வளவு சீக்கிரம் பரலிடிக் ஸ்ட்ரோக் வந்து ரெக்கவர் ஆனவங்க ரொம்ப ரேர்'. எனது உடல்நலக் குறைவின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் என் அருகில் இருந்து அளித்த ஆதரவு மிக முக்கியமானது. எந்த ஒரு விஷயத்தையும் நாம் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். இறைவன் அருளால் அறுவை சிகிச்சை முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே உங்கள் அனைவரின் மத்தியிலும் மீண்டும் வந்து பேசும் அளவிற்கு உடல்நலம் பெற்றுள்ளேன். இதற்காக இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் ராஜா ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட மறந்துவிட்டார். இந்த படத்தில் நடிகர்களுக்கு எந்தவித மேக்கப்பும் போடப்படவில்லை. முற்றிலும் இயல்பான தோற்றத்திலும், எளிய உடைகளிலும்தான் நடித்துள்ளோம். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கூறியபடி நடித்துக் கொடுத்துவிட்டு வந்தோம். வெறும் வியாபார அல்லது லாப நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொள்ளாமல் நேர்த்தியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இத்திரைப்படம் மக்களிடையே நிச்சயமாகப் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஆஸ்பிட்டல மூணாவது நாள் ரஜினிகாந்த் என்னை பார்க்க வந்தார். அப்போ, 'வாங்க எப்படி இருக்கீங்க?' அப்படின்னு நான் கேட்டேன். 'என்னங்க நீங்க எப்படி இருக்கீங்கன்னு பார்க்கறதுக்கு நான் வந்துருக்கேன். என்னைய எப்படி இருக்கீங்கன்னு நீங்க கேட்கறீங்களே'ன்னு 'டாக்டர்ஸ் வேர் சர்ப்ரைஸ்டு'. பரலிடிக் ஸ்ட்ரோக் வந்தவர், 'வாங்க'ன்னு வரவேற்கிறார் அப்படின்னா, அந்த அளவிற்கு ஆண்டவன் அருளோடு இருக்கான் அப்படிங்கறதை நாம மறுக்கவே முடியாது. எனவே இந்த விஷயத்துல படம் மிகப்பெரிய வெற்றியாக ஓடும். அதை ராஜா ஓடிப்போய் பார்ப்பான். அந்த அளவுக்கு சூழ்நிலை இருக்கும், உங்கள் ஆசி இருக்கும் என்றார்.