பல தோல்விகளுக்குப் பிறகு வெற்றியைப் பார்த்த ரவி தேஜா
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கக் கூடியவர். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடித்து வெளிவந்த படங்கள் வியாபார ரீதியாக வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து ஐந்தாறு தோல்விப் படங்களைக் கொடுத்தார்.
அவருக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையைக் கொடுத்த படமாக நேற்று வெளியான 'இருமுடி' படம் அமைந்துள்ளது. பக்தி கலந்த குடும்ப, சமூகக் கருத்து படமாக இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி இருக்கிறது. ஆனால், டப்பிங் படம் போல அல்லாமல் தமிழுக்கு ஏற்ற ஒரு கதையாகவும் படம் இருப்பதால் இங்கும் வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.
இதற்காக இன்று பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளார் ரவி தேஜா. இப்படத்தின் முதல் நாள் வசூலாக சுமார் 25 கோடி வந்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே வசூல் இன்றும் நாளையும் இருந்தால் விரைவில் 100 கோடி வசூலையும் பெற்றுவிடும்.