உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : சரோஜாதேவிக்கு சுளுக்கெடுத்த ஆர்.பி.விஸ்வம்

பிளாஷ்பேக் : சரோஜாதேவிக்கு சுளுக்கெடுத்த ஆர்.பி.விஸ்வம்

1990களில் சினிமாவில் வித்தியாசமான வில்லனாக வலம் வந்தவர் ஆர்.பி.விஸ்வம். கே.பாக்யராஜ், பாரதிராஜா மற்றும் அவர்கள் வட்டாரத்தில் இருந்த இயக்குனர்கள் படத்தில் அதிகமாக நடித்தார். 'கருப்பு நாகம்' என்று சிவாஜியால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் சரோஜாதேவிக்கு சுளுக்கெடுத்த நிகழ்வு ஒன்று நடந்தது.

ஆர்.பி.விஸ்வம் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் ஊரைச் சேர்ந்தவர். தூரத்து உறவினரும்கூட, விஸ்வத்தின் தந்தை பொன்னுசாமி தேவர் சாண்டோ சின்னப்பா தேவரின் நெருங்கிய நண்பர். இதன் காரணமாக சினிமா ஆசை கொண்ட ஆர்.பி.விஸ்வம் சாண்டோ சின்னப்பா தேவரையே சுற்றிச் சுற்றி வந்தார். அவரோ உனக்கு சினிமா சரிப்பட்டு வராது என்று துரத்திக் கொண்டே இருந்தார். தேவரின் உடற்பயிற்சி கூடத்தில் வர்ம கலை கற்றவர் விஸ்வம்.

தேவர் தயாரிப்பில் எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த 'குடும்பத் தலைவன்' படத்தின் படப்பிடிப்புகள் மருதமலை முருகன் கோவிலை சுற்றி நடந்தது. அந்த படப்பிடிப்புக்கு விஸ்வமும் சென்றிருந்தார். ஒரு பாறையில் நின்று சரோஜாதேவி ஆடும்போது தவறி விழுந்தார். அவருக்கு இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டது. வலியால் துடித்தார். இதனால் அங்கே நின்றிருந்த விஸ்வம் வர்மக்கலை படித்தவர் என்பதால் ஒரு சிறிய கம்பை கொண்டு சரோஜாவிக்கு சுளுக்கெடுத்தார். சுளுக்கு பிரிந்ததால் வலி மறைந்தது, சரோஜாதேவி மீண்டும் நடிக்கத் தொடங்கினார். விஸ்வத்திற்கு பரிசாக பணமும் கொடுத்தார். இதை பார்த்த பிறகே சாண்டோ சின்னப்பா தேவர் அவரை தன் உதவியாளராக வைத்துக் கொண்டார்.

ஆனால் விஸ்வத்திற்கோ நடிக்கும் ஆர்வமே இருந்தது. அதற்கான தேடலில் இறங்கினார். பின்னர் சினிமாவில் கே.பாக்யராஜால் அறிமுகப்படுத்தப்பட்டு வில்லனாக நடிக்கத் தொடங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !