பாலியல் கொடுமை வழக்கில் தெலுங்கு இயக்குநர் பவன் கைது
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு இயக்குநர் பவன் சதினேனி. 'பிரேமா இஷ்க் காதல்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பவன், தொடர்ந்து சாவித்ரி, சேனாபதி படங்களை இயக்கினார். தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் 'ஆகாசமுல ஒக தாரா' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. இந்த நிலையில்தான் இயக்குநர் பவன் சதினேனி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஐதராபாத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் பவன் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் “நான் குடும்பத்தால் கைவிடப்பட்டு தனித்து வாழ்ந்து வந்தேன். ஒரு வருடத்திற்கு முன்பு பவன் சதினேனியிடம் சினிமா வாய்ப்பு கேட்டுச் சென்றேன். சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி என்னை அவர் தன் கட்டுப்பாடிற்குள் வைத்துக் கொண்டு பாலியல் உறவு கொண்டார். சினிமா வாய்ப்பு தருவதாகவும், வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவருடன் ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்தேன்.
தற்போது என்னை திருமணம் செய்யாமல் புறக்கணித்து விட்டார். சினிமா வாய்ப்பும் தரவில்லை. இது போன்று பல பெண்களின் வாழ்வை கெடுத்துள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது புகார் மனுவில் அந்த பெண் தெரிவித்திருக்கிறார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை பவன் சதினேனியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.