'டிஸாஸ்டர்' தோல்வியை நோக்கி 'டாக்சிக்'
2026ம் ஆண்டில் இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று கன்னடப் படமான 'டாக்சிக்'. பான் இந்தியா படமாக மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் வெளியான இப்படம் எதிர்பார்ப்புக்கு மாறாக கடும் தோல்வியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த புதன் அன்று வெளியான இப்படம் முதல் நாளில் 150 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின் படம் வந்து ஐந்து நாட்களாகியும் அடுத்த வசூல் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
கர்நாடகாவில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் இப்படம் 'டிஸாஸ்டர்' தோல்வியை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல தியேட்டர்களில் நேற்றோடு படத்தைத் தூக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். மற்ற தியேட்டர்களில் வேறு படங்கள் எதுவும் இல்லாததால் இப்படத்தை ஓட்டி வருகிறார்களாம். இந்த வியாழன் வரை படம் தாக்குப் பிடித்து ஓடினால் அதிசயம் என்கிறார்கள்.
படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது அதன் பாதியளவு வசூலைக் கூட வசூலிக்க வாய்ப்பில்லை என வருத்தத்துடன் சொல்கிறார்கள். படத்தை வாங்கியவர்கள், வெளியிட்டவர்கள், திரையிட்டவர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.