தப்பி ஓட மாட்டேன் : மோசடி வழக்கில் ராஜ்கிரண் முன்ஜாமீன் மனு
மீஞ்சூரை சேர்ந்த சரவணன் என்பவர் ராஜ்கிரணை வைத்து படம் தயாரிக்க 50 லட்சம் கொடுத்துள்ளார். படம் கைவிடப்பட்டதால் அந்த பணத்தில் 10 லட்சத்தை மட்டுமே ராஜ்கிரண் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள 40 லட்சத்தை ஏமாற்றி விட்டார் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜ்கிரண் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது இயற்பெயர் முகைதீன் அப்துல் காதர். 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தில் நடித்த பிறகு எனது பெயர் திரைத்துறையில் ராஜ்கிரண் என்று மாறியது. திரைத்துறையில் பல ஆண்டுகளாக நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், வினியோகஸ்தராகவும் இருந்து வருகிறேன்.
கடந்த 2022 ஏப்ரல் 19ம் தேதி மீஞ்சூரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் சரவணன் என்பவர் என்னை அணுகி திரைப்படம் தயாரிக்கவுள்ளதாக தெரிவித்து எனக்கு 50 லட்சம் முன்பணமாக தந்தார். ஆனால், படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கவில்லை. இதனால் 50 லட்சத்தை திரும்பத்தருமாறு என்னிடம் கேட்டார். அதற்கு கால அவகாசம் கோரினேன். இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது புகார் அளித்தார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 10 லட்சத்தை சரவணனுக்கு கொடுத்தேன்.
இந்த நிலையில், நான் அவரிடம் 40 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக என் மீது மீஞ்சூர் போலீசில் கடந்த 2025 செப்டம்பரில் சரவணன் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் வழக்கு பதிவு செய்யக்கோரி பொன்னேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது பொன்னேரி மாஜிஸ்திரேட் அளித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே படம் தயாரிப்பு தொடர்பாக 2022ல் ஒப்பந்தம் நடந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திரைப்பட தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தம் மற்றும் சிவில் வழக்கு. இதற்கு கிரிமினல் சாயம் பூசப்பட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே தொழில் ரீதியான ஒப்பந்த பிரச்னை. உரிய ஆவணங்களின் அடிப்படையில்தான் இது முடிவுக்கு வரும். தமிழக திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர். எங்கும் தப்பி ஓடிவிட மாட்டேன். எனவே, இந்த வழக்கின் முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.