உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லண்டன் கார் ரேஸை இன்று துவக்கி வைக்கும் முதல்வர் விஜய் : அஜித் நெகிழ்ச்சி கலந்த வாழ்த்து

லண்டன் கார் ரேஸை இன்று துவக்கி வைக்கும் முதல்வர் விஜய் : அஜித் நெகிழ்ச்சி கலந்த வாழ்த்து

லண்டனில் நடைபெறும் 2026 மிச்செலின் லீ மான்ஸ் கப் தொடரில், நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது அணியினர் பங்கேற்றுள்ளனர். இதற்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகின. மேலும் அஜித்தை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடுகின்றனர். ரசிகர்கள் இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

முதல்வர் விஜய் துவக்கி வைக்கிறார்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் லண்டனில் உள்ளார். அங்கு சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தை பார்வையிடும் அவர், அஜித் பங்கேற்கும் இந்த கார் ரேஸ் போட்டியை மாலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். முன்னதாக நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் லண்டனில் அஜித்தை சந்தித்தார். மேலும் அங்குள்ள கார் ரேஸ் தொடர்பான கட்டமைப்புகளையும் பார்வையிட்டார்.

விஜய் முதல்வரானது மகிழ்ச்சி - அஜித்

போட்டியின் பயிற்சியின் போது அஜித் அளித்த பேட்டியில், ‛‛தனது பரபரப்பான பணிகளுக்கு இடையே, என் அழைப்பின் பேரில், முதல்வர் விஜய் நேரம் ஒதுக்கி லீ மான்ஸ் கோப்பை கார் பந்தய தொடரை துவக்கி வைக்க லண்டன் வந்துள்ளார். கடந்த 34 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் திரைத்துறையில் சக நடிகர்களாக இருக்கிறோம். விஜய் முதல்வரானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

விளையாட்டு துறையை மேம்படுத்த அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவிலும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரவேண்டும் என்பது என் விருப்பம். லண்டனில் நடப்பது போல, சென்னையிலும் போட்டிகள் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்'' என்றார்.

போட்டி நேரம்

லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் தொடர், இந்திய நேரப்படி இரவு 9:45 மணிக்கு தொடங்கி இரவு 11:45 மணிக்கு நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !