PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM

'ஆளுங்கட்சி மேயராக இருந்து என்ன பிரயோஜனம்; கவுன்சிலர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க தெரியவில்லையே...' என, லக்னோ பெண் மேயர் சுஷ்மா கார்க்வால் பற்றி எரிச்சலுடன் கூறுகிறார், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்.
உ.பி., தலைநகரான லக்னோ மாநகராட்சியின் மேயராக இருப்பவர் தான், சுஷ்மா கார்க்வால். பா.ஜ.,வைச் சேர்ந்த இவருக்கும், மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர்களுக்கும் ஏழாம் பொருத்தம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், எல்லா கவுன்சிலர்களுமே, மேயர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை தனியாருக்கு தாரை வார்த்தது, வளர்ச்சிப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பது ஆகியவற்றை இதற்கு காரணமாக கூறுகின்றனர்.
கவுன்சிலர்களுடன் நல்லுறவை பேணும் வகையில், சமீபத்தில் நடந்த ஹோலி பண்டிகைக்கு அவர்களுக்கு மேயர் அழைப்பு விடுத்திருந்தார். மேயரின் வீட்டிலேயே பிரமாண்ட விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், ஒரு சில கவுன்சிலர்கள் மட்டுமே விருந்தில் பங்கேற்றனர்; பெரும்பாலானோர் புறக்கணித்து விட்டனர்.
ஏற்பாடுகள் அனைத்தும் வீணாக போனது ஒரு பக்கம் என்றாலும், இந்த விவகாரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதால், மேயரின் மானம் கப்பலேறியது.
இதைக் கேள்விப்பட்ட முதல்வர் யோகி ஆதித்ய நாத், 'எத்தனை பஞ்சாயத்தை தான் தீர்த்து வைப்பது...' என, புலம்புகிறார்.